கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளைக்கு பொன்னியின் செல்வன் படத்தயாரிப்பாளர்களின் மாபெரும் நன்கொடை!

கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளைக்கு பொன்னியின் செல்வன் படத்தயாரிப்பாளர்களின் மாபெரும் நன்கொடை!

சர்வதேச அளவில் வெளியாகி, மிக அதிக வசூல் சாதனை புரிந்துள்ள படமாக டைரக்டர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் -1 பெருமையோடு குறிப்பிடப்படுகிறது. இப்படி ஒரு மாபெரும் வெற்றிப் படத்தை வழங்கிய இயக்குனர் மணிரத்னமும், தயாரிப்பாளர் லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரனும் 4.11.2022 வெள்ளியன்று மாலை கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை அலுவலகத்துக்கு நேரில் வந்து, அமரர் கல்கியின் மகன் கல்கி ராஜேந்திரனைச் சந்தித்தினர். அவர் தமது தந்தை பெயரில் நடத்தி வரும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளைக்கு ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை நன்கொடையாக வழங்கினர்.

கடந்த காலங்களில் பலர் முயற்சித்தும் முடியாது போன பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கும் முயற்சியில் வெற்றி பெற்ற இயக்குனர் மணிரத்னம் மற்றும் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் இருவரையும் கல்கி ராஜேந்திரன் மனதாரப் பாராட்டியதுடன், வர்த்தக ரீதியிலும் படம் பெரும் வெற்றி பெற்றிருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சியைத் தெரிவித்தார். மேலும், “கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை மூலமாக செய்யப்படும் பணிகளில் கல்வியில் சிறந்து விளங்கும், பொருளாதாரத்தில் பின் தங்கிய பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது மிகவும் முக்கியமானது. இந்த நன்கொடை மூலமாக இன்னும் அதிக எண்ணிக்கையில் தகுதி வாய்ந்த மாணவர்கள் பயன்பெறுவார்கள்” என்று கூறி நன்றி தெரிவித்தார்.

“நான் பள்ளிக்கூட மாணவனாக இருந்த காலத்திலேயே படித்து மகிழ்ந்த கதை பொன்னியின் செல்வன்” என்று கூறினார் மணிரத்னம்.

தயாரிப்பாளர் சுபாஸ்கரனிடம், “இவ்வளவு பெரிய முதலீடு செய்து, பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க உங்களைத் தூண்டியது எது?” என்று கல்கி ராஜேந்திரன் கேட்டார். அதற்கு சுபாஸ்கரன், “ முதலாவது காரணம், பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னம் இயக்க முன்வந்தது. இரண்டாவது காரணம் பொன்னியின் செல்வன் நாவல் பெற்றிருக்கும் உலகளாவிய வாசகர்கள். மூன்றாவது: இன்றுள்ள டெக்னாலஜி. இவற்றைத் தவிர, எனக்கு வரலாற்றின் மீதுள்ள ஆர்வமும், பொன்னியின் செல்வன் கதை சோழர்கள் வரலாறு பற்றியது என்பதும்தான் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க என்னைத் தூண்டிய விஷயங்கள்” என்று பதிலளித்தார்.

”இந்த மாபெரும் நன்கொடை மூலம் வரும் காலத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயன்பெறப்போகிறார்கள். கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையின் உயர்பணியால் கல்வி கற்போரின் எண்ணிக்கை உயரும். அதனால் சமூகம் மேலும் சீரடையும். அறக்கட்டளையின் உயர் நோக்கங்களும் பணிகளும் மேன்மேலும் சிறக்க கல்கி குழுமம் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது” என்று கல்கி குழும தலைமை நிர்வாக அதிகாரி லக்ஷ்மி நடராஜன் குறிப்பிட்டார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com