90ஸ் கிட்ஸ், 2k கிட்ஸ் இருவருக்கும் பொதுவான 5 ஸ்பெஷல் காதல் திரைப்படங்கள்!

90ஸ் கிட்ஸ், 2k கிட்ஸ் இருவருக்கும் பொதுவான 5 ஸ்பெஷல் காதல் திரைப்படங்கள்!

பேத்தடிக் திரைப்படமாக இருந்த போதும் நம் தாத்தா பாட்டி காலத்தில் காதலுக்கு என்றே ஸ்பெஷலான திரைப்படங்கள் என்றால் அவர்கள் ஒன்று அம்பிகாபதி அல்லது தேவதாஸ் திரைப்படத்தைச் சொல்வார்கள் இல்லையென்றால் ஜாலியான காதல் படங்களாக அன்பே வா, தேன் நிலவு, வசந்த மாளிகை போன்ற படங்களைச் சொல்வார்களாயிருக்கும்.

அடுத்து 80 களில் காதல் திரைப்படங்கள் என்றாலே நெஞ்சை உருக்கும் காதல் திரைப்படங்களென ஒரு லிஸ்ட் வைத்திருந்தார்கள். அதில் பெரும்பான்மையானவை சோககீதம் பாடியவையே. ஒன்று காதலன் இறந்து விடுவான் அல்லது காதலன் & காதலிக்கு கேன்சர் இருக்கும். மணிரத்னம் ஸ்பெஷல் ‘இதயத்தைத் திருடாதே’ திரைப்படத்தில் துரதிருஷ்டவசமாக நாயகன், நாயகி இருவருக்குமே கேன்சர் இருந்தது. அதனாலென்ன காதலர்களை ஒன்று சேர அனுமதித்த வகையில் அத்திரைப்படம் இன்று வரையிலுமே நினைவுகூரத் தக்க வகையிலான வெற்றித்திரைப்படம் தான்.

இப்படி தமிழ் சினிமாவைப் பொருத்தவரை அது ஜெயமோ, சோகமோ காதல் திரைப்படங்களுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. அவைகளின் வெற்றிகளுக்கும் பங்கம் இருந்ததில்லை.

அப்படி 90 ஸ் கிட்ஸ் முதல் 2 கே கிட்ஸ் வரை என இருவருக்கும் பொதுவாக ஆல்டைம் ஃபேவரிட் எனச் சில திரைப்படங்களை இணையத்தில் வரிசைப்படுத்தி பலர் எழுதி வருகிறார்கள். அதில் முதல் 5 திரைப்படங்களென இவற்றைச் சொல்கிறார்கள்.

1. அலைபாயுதே

2. விண்ணைத் தாண்டி வருவாயா…

3. கில்லி

4. ரெமோ

5. 96

இவை தவிரவும் நிறைய காதல் திரைப்படங்கள் இருக்கின்றனவே என்று உங்களுக்குத் தோன்றலாம். அது நிஜமும் கூட, ஆனால். இன்று வரையிலும் காதல் என்றால் உடனே உங்கள் மண்டைக்குள் சட்டென மின்னலிடுபவை மேற்கண்ட திரைப்படங்களே என்பதால் இவை தான் காதலர்களின் ஆல்டைம் ஃபேவரிட் திரைப்படங்களெனக் கருதத் தக்கவை எனலாம்.

தரணியின் கில்லியில் நாயகன் (விஜய்) வேலுவின் காதலைக் காட்டிலும் வில்லன் (பிரகாஷ் ராஜ்) முத்துப்பாண்டியின் காதல் தான் அழுத்தமானது, ஆழமானது, அன்பு மயமானது என்கிற ரீதியில் சமீபமாக இணையத்தில் மீம்ஸ்கள் சுற்றிக்

கொண்டிருக்கின்றன. அந்த அளவுக்கு முத்துப்பாண்டியின் காதல் இன்றைய இளைஞர்களுக்கு குறிப்பாக 2கே கிட்ஸுகளுக்குப் காதலின் புனிதத்தையே புது மாதிரியாக விளங்க வைத்திருக்கிறது பாருங்கள்.

மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே திரைப்படம் பற்றிச் சொல்லவே வேண்டாம். (மாதவன், ஷாலினி )நாயகன், நாயகி இருவரும் காதலில் கசிந்துருகி வீட்டிற்குத் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொண்டு அவரவர் வீட்டிலேயே சில காலம் வாழ்கிறார்கள். பிறகு உண்மை உடைந்து வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். வெளிவந்த காலத்தில் வெற்றிப்படமாகவே இருந்த போதும் கடுமையான எதிர் விமர்சனங்களையும் ஒரு சேர எதிர்கொண்ட படம் இது. ஆனாலும் இன்று வரையிலும் காதல் திரைப்படங்களில் இதற்கென ஒரு தனியிடத்தை தக்க வைத்திருப்பது அத்திரைப்படத்தின் பாடல்கள், நடிகர்கள், இயக்குநர் மற்றும் அதன் அழகியலுக்கான வெற்றி எனலாம்.

விண்ணைத் தாண்டி வருவாயா…

மின்னலே மற்றும் விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற கெளதம் வாசுதேவ் மேனன் திரைப்படங்களில் காதல் அந்தந்த காலகட்டத்து இளைஞர்களுக்குப் பிடித்த வகையில் கையாளப்பட்டு எப்படியோ படு சக்ஸஸ் ஆகி விடும். அந்த லிஸ்டில் இந்தப் படத்தைச் சொல்லலாம். த்ரிஷா, சிம்பு நடித்த இத்திரைப்படம் இன்று வரையிலும் தீராக் காதலில் மூழ்கி இருப்பவர்களின் அகராதி என்று கூட சொல்லலாம்.

ரெமோ…

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ரெமோ. இதில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாயகியை திடீரென சாலையில் பார்த்து விட்டு திடுக்கென்று காதல் மலர்ந்து நாயகன் விரட்டி விரட்டி காதலிப்பதாக கதை செல்லும். படத்தில் தன் காதலியின் மனதை மாற்ற சிவகார்த்திகேயன் லேடி கெட்டப்பெல்லாம் போட்டு கசிந்துருகி அவளது மனதை மாற்றுவார். இதில் விரும்பாத பெண்ணை விரட்டி விரட்டி காதலிக்க வற்புறுத்துவது நாகரீகமானதா? இது தான் காதலா? என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் காதல்னா அது ரெமோ ஸ்டைல்னாலும் பரவாயில்லை என்று தான் இன்று கூட சில கோஷ்டிகள் சுற்றிக் கொண்டிருக்கின்றனவாம்.

96…

பள்ளிக் காலத்தில் காதல் வயப்பட்ட இருவரும் தங்களது காதலை தெளிவாக அறிவித்துக் கொள்ளாமலே பிரிந்து விடுகிறார்கள். நாயகிக்குத் திருமணமாகி வெளிநாட்டில் செட்டில் ஆகி விடுகிறார். நாயகனுக்குத் திருமணமாகவில்லை. இருவரும் நண்பர்களுக்கான ரியூனியனில் சந்திக்க நேர்கிறது. சந்திக்கிறார்கள், பிறகு மீண்டும் பிரிகிறார்கள். நடுவில் ஓரிரவில் இருவரும் தனித்திருக்க

நேர்கையில் அவர்களது காதலுக்கு என்ன நேர்கிறது? இருவரும் தங்களது காதலுக்கு எவ்வித மரியாதை செய்கிறார்கள் என்பது தான் கதை. படம் வெற்றிப் படமே. படம் பார்த்து விட்டு பலரும் தங்களது பள்ளிக்கூட காலத்து காதலிகளைத் தேடி (மனசுக்குள் தான்) ஒரு நீண்ட நெடிய பயணமே மேற்கொண்டார்களென முகநூலில் ஆயிரம் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன.

இப்படியாக காதல் நிறைவேறினாலும், நிறைவேறாமலே போயிருந்தாலும் கூட இன்றளவும் நம் நினைவில் நின்ற சிறந்த காதல் திரைப்படங்களென இவை ஐந்தையும் பலர் கருதுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com