காலக் காற்றில் ஒரு மென்மையான மலர் உதிர்ந்துவிட்டது.

 காலக் காற்றில் ஒரு மென்மையான மலர் உதிர்ந்துவிட்டது.

அஞ்சலி

ழுத்தாளர் பாமா கோபாலன் அமெரிக்காவில் காலமானார் என்ற செய்தி அறிந்து மனம் அளவற்ற துயரில் ஆழ்கிறது.

என் அன்புச் சகோதரியும் எழுத்தாளருமான வேதா கோபாலன் என்ற மிக நல்ல பெண்மணியின் கணவர் அவர். சிரிக்கச் சிரிக்கப் பேசும் மிக நல்ல மனிதர். காலக் காற்றில் ஒரு மென்மையான மலர் உதிர்ந்துவிட்டது.

பாமா கோபாலன், வேதா கோபாலன் என்ற இலக்கிய இணையரை எனக்குப் பல்லாண்டுகளாகத் தெரியும். அதாவது அவர்கள் இருவரும் காதலித்துக் கல்யாணம் செய்துகொள்வதற்கும் முன்பிருந்தே என்று நினைக்கிறேன். எழுத்தின் மேல் கொண்ட காதல் அவர்களைக் காதலர்களாக்கியது.

இருவருமே எதை எழுதினாலும் ஜனரஞ்சகமாக எழுதக் கூடியவர்கள்!

எல்லோருக்கும் புரிகிற மாதிரியும் எல்லோரையும் கவர்கிற மாதிரியும் எழுதும் ஆற்றல் அமைவது ஒரு பெரிய வரம். எழுத்தாளர் சுஜாதாவுக்குக் கிட்டிய மாதிரி, அந்த வரம் இந்த இருவருக்கும் கூடக் கிட்டியிருக்கிறது.

கதைகள், கட்டுரைகள், பேட்டிகள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்கள் இவர்கள். பொழுதுபோக்காக நிறைய எழுதியிருந்தாலும் ஆபாசமாகவோ சமூகப் பொறுப்பில்லாமலோ இவர்கள் எதையும் எழுதியதில்லை.

நேர்காணல் என்பது எழுத்தில் ஒரு வகை. கதை, கட்டுரை, கவிதை எழுதுகிறவர்கள் எல்லாம் நேர்காணல் கண்டு எழுதிவிட முடியாது. தன்னை அடக்கிக் கொண்டு அடுத்தவர்களின் சாதனையைப் பெருந்தன்மையோடு பதிவுசெய்ய வேண்டிய கட்டாயம் அதில் உண்டு.

பேட்டி கொடுத்தவர்கள் சிக்கல் வரும்போது “நான் இதைச் சொல்லவே இல்லை” என்று மறுக்கவும் கூடும். எனவே அதற்கான ஆதாரங்களை வைத்துக் கொண்டு பேட்டி எடுத்தாக வேண்டும்.

நேர்காணல் கண்டு எழுதுவதில் இன்னொரு பெரிய சிரமமும் உண்டு. கதை, கட்டுரை எழுதினால் அது வெளிவந்தாலும் வெளிவராவிட்டாலும் அவரவர் பாடு. அதில் சிக்கல் அதிகமில்லை.

ஆனால், நேர்காணல் கண்டு எழுதினால் அது வெளிவராவிட்டால் நேர்காணல் கொடுத்த பிரமுகர் தொலைபேசியில் ஓயாமல் கேட்டுக் கேட்டு நம்மை அளவுகடந்து சங்கடப்படுத்தி விடுவார்.

நேர்காணலைக் கண்டபின் அந்தப் பேட்டிக் கட்டுரையைப் பத்திரிகைக்குக் கொடுக்கலாமே தவிர அது கட்டாயம் பத்திரிகையில் வெளிவரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இன்றைய பத்திரிகை உலகில் தமிழின் நேர்காணல் துறையில் கொடிகட்டிப் பறக்கும் மிகச் சிலரில் இவர்கள் இருவரும் உண்டு. எந்தத் துறை சார்ந்தவர்களையும் பேட்டி காணும் சாமர்த்தியமும் இவர்களிடம் உண்டு.

பேட்டி காண்பதற்கு முன், காணப்படும் பிரமுகர் பற்றிய விவரங்களையும் அவரது துறை தொடர்பான செய்திகளையும் சேகரித்துக் கொண்டு அவரை நேரில் சென்று அவரே வியக்கிற வகையில் கேள்விகளைக் கேட்டு பதில் வாங்கி விடுவார்கள்.

நான் பத்திரிகை ஆசிரியன் என்ற வகையில் இவர்களிடம் பலமுறை நேர்காணல், கதை, கட்டுரை உள்ளிட்ட படைப்புகளைக் கேட்டு வாங்கி வெளியிட்டிருக்கிறேன்.

சொன்னால் சொன்ன சொல் தவறாது குறிப்பிட்ட நாளில் படைப்பை அனுப்பிவிடும் செயலொழுங்கு இவர்களிடம் உண்டு. பத்திரிகை ஆசிரியர்களுக்கு இது பெரிய செளகரியம். இன்னொன்று, எத்தனை வார்த்தைகள் படைப்பு இருக்க வேண்டும் என்று பத்திரிகை சொல்கிறதோ அத்தனை வார்த்தைகளில் படைப்பை முடித்துவிடும் நிச்சயமும் இவர்களிடம் உண்டு.

குமுதத்தில் கொஞ்ச காலம் பணிபுரிந்த காரணத்தால் பத்திரிகைகளின் இடப் பிரச்னையை இவர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்திருப்பதே அதற்குக் காரணம்.

பாமா கோபாலன், வேதா கோபாலன் படைப்புகள் என்றால் வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டு அந்தப் பிரதியில் கையே வைக்காமல் அப்படியே அச்சுக்கு அனுப்பிவிடலாம்.

பத்திரிகைக்குப் பிரச்னை தரக்கூடிய விஷயங்களை அவர்கள் எழுத மாட்டார்கள். பத்திரிகையையோ பத்திரிகை ஆசிரியரையோ சிக்கலில் ஆழ்த்த மாட்டார்கள்.

ஒரு நல்ல எழுத்தாளன் எதை எழுதுகிறான் என்பதால் மட்டும் நல்ல எழுத்தாளன் ஆவதில்லை. எதை எழுதாமல் விடுகிறான் என்பதாலும் தான் அவன் பெயர் நிலைபெறுகிறது.

இந்த இணையர்கள் எதை எழுதலாம் என்று தெரிந்து வைத்திருப்பதோடு எதை எழுதக் கூடாது என்றும் தெரிந்து வைத்திருக்கிறவர்கள்.

இவர்கள்மேல் எத்தனைபேர் அன்பு செலுத்துகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் நேர்ந்தது. பாமா கோபாலன் சற்று இதய நோய்வாய்ப்பட்டு சென்னையில் விஜயா மருத்துவ மனையில் சில நாள்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்குப் பணிவிடை செய்வதற்காக அவரது அன்பு மனைவியும் அதே மருத்துவமனையில் அவரது உதவியாளராக அந்த நாட்களில் தங்கியிருந்தார்.

அந்தக் காலகட்டத்தில் இவர்களை நேரில் வந்து சந்தித்து ஆறுதல் சொன்னவர்களின் பெயர்ப் பட்டியல் மிக நீண்டது.

தவிர இவர்கள் இருவரும் எனது நெருங்கிய நண்பர்கள் என்பதால் பாமா கோபாலனின் உடல் நலம் குறித்து என்னிடம் தொலைபேசியில் உள்ளுரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் விசாரித்தவர்களும் பற்பலர்.

கல்கி முன்னாள் ஆசிரியரும் உயர்ந்த பண்பாளருமான சகோதரி சீதா ரவி உள்ளிட்ட பலரின் அன்பைப் பெற்றவர்கள் இவர்கள் என்பதை அந்த சந்தர்ப்பத்தில் நான் உணர்ந்து மகிழ்ந்தேன்.

இவர்களது நண்பர்கள் குறித்த என் மதிப்பும் அப்போது உயர்ந்தது. ஒருவர் நலமாக இருக்கும்போது நேரிலும் தொலைபேசியிலும் அளவளாவுவது பெரிதல்ல. நலக்குறைவு ஏற்பட்ட தருணத்தில் பாசத்தோடு பரிதவித்து உதவுவதல்லவா இடுக்கண் களையும் நட்பு!

என் வாழ்வில் ஒரு கடும் துயரம் நேர்ந்தபோது இவர்கள் இருவரும் நேரில் என் இல்லத்திற்கு வந்து எனக்கும் அதைவிட முக்கியமாக என் மனைவிக்கும் ஆறுதல் சொன்ன சந்தர்ப்பத்தை என்னால் மறக்க இயலாது.

துயரக் கடலில் தத்தளிப்பவர்களை நேரில் கண்டு ஆறுதல் சொல்வது என்பது ஓர் அறநெறி. அதை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள்? 

பல்லாண்டு காலமாக (ஏறக்குறைய அரை நூற்றாண்டுக் காலம்!) இவர்கள் எழுதிக் குவித்த எழுத்தெல்லாம் இப்போது நூற்றாண்டு கண்ட பதிப்பக உரிமையாளர் அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன் மூலம் புத்தகங்களாக வெளிவந்துள்ளது.

சுருக்கமாகவும் அதே நேரம் விறுவிறுப்புக் குறையாமல் சுவாரஸ்யமாகவும் எப்படி எழுதுவது என்பதை இன்றைய இளைய தலைமுறை இந்தப் புத்தகங்களைப் படித்துக் கற்றுக் கொள்ளலாம் எனப் பரிந்துரைக்கிறேன்.

கண்ணியமான எழுத்துப் பணியில் பல்லாண்டுகளாக ஈடுபட்ட ஓர் எழுத்தாளரின் மரணம் வாசகர்களுக்குப் பெரிய இழப்புத்தான்.

பாமா கோபாலனை இழந்து வாடும் வேதா கோபாலனுக்கும் அவர் குடும்பத்தினர்க்கும் மனச்சாந்தி கிட்டவும் பாமா கோபாலனின் ஆன்மா சாந்தி அடையவும் அவர் பெரிதும் பக்தி செய்த பெருமாளையே நானும் மனமாரப் பிரார்த்திக்கிறேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com