இன்னமும் பழமை மாறாமல் ஒரு பழங்குடி கிராமம்

இன்னமும் பழமை மாறாமல் ஒரு பழங்குடி கிராமம்

ங்கள் தேவைகளைத் தாங்களே நிறைவேற்றிக் கொள்ளும் வாழ்வியல் முறையைக் கொண்டவர்கள் பழங்குடிகள். சமகாலத்தில் பழங்குடி கிராமங்கள்கூட அப்படியான தன் அடையாளத்தை இழந்துவிட்டன. அதையும் தாண்டி அக்கிராமங்களில் பழங்குடிகளின் எஞ்சிய வாழ்வியல் எச்சங்களாக சில விஷயங்கள் மட்டும் மிச்சமிருப்பதைக் காணலாம். அதில் ஒன்றுதான் காடர் பழங்குடிகள் வசிக்கும் “கல்லார்குடி.”

இந்த கல்லார்குடியிருப்பை ஓர் ஆண்டு முன்புதான் ‘தெப்பக்குளமேடு’ என்ற இடத்திற்கு மாற்றி யிருக்கிறார்கள். பழைய இடத்திற்கும், புதிய இடத்திற்கும் இடைவெளி சுமார் ஐந்து மைல்கள். அந்தப் பகுதியிலிருந்து இந்தப் பகுதிக்கு ஒட்டு மொத்தமாய் கிராமமே புலம்பெயர்ந்து மூங்கில் கலந்த மண்ணால் ஆன வீடுகளை அமைத்து வாழ்வதென்பது கூட காடுகளில் ஆதிகால பழங்குடிகள் வாழ்ந்து வந்த வாழ்வியல் முறைதான்.

அதைத்தான் இவர்கள் செய்திருக்கிறார்கள். அதற்கே வனத்துறையிடம் கடும் எதிர்ப்பு. இவர்கள் குடிசைகளைப் பிரித்தெறிந்திருக்கிறார்கள். இவர்கள் வனத்துறைக்கு எதிராக இரவு பகல் பாராமல் போராடியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு வருடம்... அடிக்கடி நடந்த வெவ்வேறு போராட்டங்களின் விளைவு, தற்போது அரசு அவர்கள் குடியிருப்புகளை அமைத்துக்கொள்ள ஓராண்டு முன்பு நிலம் வழங்கியிருக்கிறது.

அப்படி வழங்கி விட்டால் நாமாக இருந்தால் என்ன செய்வோம். ரோடு வேணும், தண்ணீர் வசதி வேண்டும். மின்சாரம் வேண்டும். பஸ் விடவேண்டும் என்றெல்லாம் நிறைய வேண்டும் கோரிக்கைகளோடு போராட்டம் செய்வோம் அல்லவா? அப்படி எதுவும் இவர்கள் செய்யவில்லை. இவர்களே வீடு அமைத்துக் கொண்டார்கள். மண்ணைக்கிளறி பாதை அமைத்துக் கொண்டார்கள். மொத்தம் உள்ள 21 வீடுகளில் எல்லாமே எண்ணெய் விளக்குதான்.

ஆத்திரம் அவசரத்திற்கு பேட்டரி கரண்ட் வைத்துக் கொள்கிறார்கள். இவர்கள் வீடுகள் எல்லாம் மூங்கில் வைத்து மண்பூசி கட்டப்பட்ட வீடுகள்தான். அதில் மேலே மூங்கில் கூரை, ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்துள்ளார்கள். இப்படியானவர்கள் குடியிருப்புக்கு அண்மையில் நாம் சென்றிருந்தோம். போகிற பாதையே மிகவும் அபாயகரமான பாதையாக இருந்தது.

கோவை மாவட்டம் வால்பாறையிலிருந்து கல்லார்குடிக்கு 14 கிலோமீட்டர் தூரம். தேயிலைத் தோட்டங்கள் கடந்து ஓங்கி வளர்ந்த காடுகள், பல சிற்றோடைகள், காட்டாறுகள் கடந்துதான் செல்ல வேண்டியிருந்தது. அத்தனையும் யானை, கரடி, புலி, சிறுத்தை வாழும் பிரதேசம். ஏழெட்டுக் கிலோமீட்டர் டூவீலர் அல்லது ஜீப்பில்தான் செல்ல வேண்டும். அடுத்து இரண்டு கிலோமீட்டர் தூரம் மலையேறி, பள்ளத்தாக்குகள் இறங்கி மூச்சு வாங்க நடக்க வேண்டும். பிபி, சுகர் உங்களுக்கு இருந்தால் அதோ கதிதான். கூட தண்ணீர் பாட்டிலையும், மருந்து மாத்திரைகளையும் வைத்துக் கொள்வது அவசியம். அதைவிட இந்த இடத்திற்கு அப்படிப்பட்டவர்கள் வராமல் இருப்பதே நல்லது.

குடியிருப்புக்குப் பக்கத்தில் ஒரு காட்டாறு. அங்கே மழை வந்து விட்டால் வெள்ளம் பொங்கும். அதை உத்தேசித்து இங்கே ஒரு மூங்கில் பாலத்தை மக்களே அமைத்துள்ளார்கள். அதே இடத்தில் மழை வராத காலத்தில் ஆறு சிற்றோடையாக ஓடுகிறது. எனவே, அதைத் தாண்டிச் செல்ல ஆற்றுக்குள் பெரிய, பெரிய பாறைகளைப் போட்டிருக்கிறார்கள். அதன் மீது கால் வைத்து அந்தப்புறம் செல்லலாம். இது ஒரு பாதை. இன்னொரு பாதையில் மூங்கில் மரங்களும், வெவ்வேறு மரங்களையும் சீர்திருத்தி, மண் பாதை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த வழியே செல்லும்போது அட்டைப்பூச்சிகள் அதிகம். சட்டென்று பட்டால் போதும் ஒட்டிக் கொண்டு ரத்தத்தை உறிஞ்ச ஆரம்பித்து விடுகின்றன. நம்முடன் வந்த நண்பர்கள் பலருக்கு அட்டைப் பூச்சிக் கடிகள், தாரை, தாரையாய் ரத்தம் சொட்ட ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்கு ஏதோ ஒரு பொடியை வைத்து அழுத்தி விட்டனர் உடன் வந்தவர்கள்.

அதையெல்லாம் கடந்து சென்றால் அடர்ந்த மரங்கள்... ஆங்காங்கே மறைத்து நிற்க எண்ணி பதினான்கு வீடுகள். புது மெருகு குழையாத மண் வீடுகள். இடையிடையே மூங்கில்கள் அதனுள் கண்ணுக்குத் தெரிந்தன. எல்லாமே மரங்களுக்குள் ஒளிந்தே கிடந்தன. ஒவ்வொரு வீட்டிலும் 2 குடும்பங்கள், மூன்று குடும்பங்கள் என மொத்தம் 40 குடும்பங்கள் வசிப்பதாகச் சொன்னார்கள்.

சரி இங்கே ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்து வீடுகள் கட்டி வசிக்க வேண்டும்? என்று கேட்டால் ‘இது எங்க பூர்வீக பூமி. எங்க பாட்டன், பூட்டன், முப்பாட்டன் எல்லாம் இங்கேதான் வசிச்சு தெய்வமாகியிருக்காங்க. நான் பிறந்தது என் மனைவி பிறந்தது, என் குழந்தைகள் பிறந்தது என் மகளுக்கு கல்யாணமாகி அவள் மகள் பிறந்தது எல்லாமே இந்தக் காட்டுலதான். அதனால இந்தக் காடுதான் எங்களுக்குக் கோயில்... இதை விட்டு நாங்க எப்பவும் போக மாட்டோம்!’’ என்றார் இந்த ஊரின் மூப்பனான சக்திவேல்.

பொதுவாகவே காடுகளில் வாழும் பழங்குடிகள் அந்தக் காடுகள் ஏகமாய் தன் விருப்பமான இடத்தில் குடில்கள், குகைகள் அமைத்து அந்தக் காலத்திலிருந்தே வாழ்ந்திருக்கிறார்கள். ஓர் இடத்தில் மழை, வெள்ளம், நிலச்சரிவு என்றால் அங்கிருந்து பாதுகாப்பான மேட்டுப்பகுதிக்கு சென்று குடிசைகளை எழுப்பிக் கொண்டு வாழ ஆரம்பித்து விடுவார்கள். தேன், கடுக்காய், பூச்சக்காய் இப்படி காட்டுப் பொருட்கள் சேகரித்து நடந்தே கொண்டு போய் அருகாமையில் உள்ள ஊர்ச்சந்தையில் விற்று விட்டுத் தங்களுக்குத் தேவையான அரிசி, எண்ணெய், துணிமணி வாங்கிக் கொண்டு வீடு திரும்புவார்கள்.

அதைத்தான் இங்குள்ள காடர்களும் செய்து வந்துள்ளார்கள். மூன்றாண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள கல்லார்குடியில் காட்டாற்றில் பெருவெள்ளம். அதனால் இவர்கள் வீடுகள் ஒவ்வொன்றாக ஆற்றுக்குள் போக ஆரம்பித்து விட்டன. அதனால், இனி இது நமக்கு வசிக்க லாயக்கற்ற பூமி என்று முடிவு எடுத்து மூன்று கிலோமீட்டர் தள்ளி வந்து குடிசை அமைத்து வாழ்ந்திருக்கிறார்கள். அதை வனத்துறைக்கும் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் அதற்கு அனுமதிக்க வில்லை. அந்தக் காலம் போல் இந்தக் காலம் கிடையாது. இது புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டு விட்டது. எனவே, “உள்ளது உள்ளபடி ஏற்கனவே இருந்த இடத்தில் இருங்கள். அல்லது காட்டை விட்டு வெளியேறுங்கள்” என்று கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். இவர்கள் கேட்கவில்லை.

பதிலுக்கு அவர்கள் குடிசைகளை பிடுங்கி எறிந்துள்ளார்கள் அதை எதிர்த்து இவர்கள் போராடியிருக்கிறார்கள். இரு தரப்புக்கும் பல வகைகளில் மோதல் நடந்திருக்கிறது. இந்த விவகாரம் மீடியாக்களில் வெளியாகி மாவட்ட கலெக்டர், முதல்வர் ஸ்டாலின் வரை சென்று, அதன் பிறகு இப்பிரச்சனை சுமூகமாக முடிந்திருக்கிறது. பழங்குடிகளுக்கு குடியிருக்க இங்கே ‘தெப்பக்குளமேடு’ என்ற இந்த இடத்தில் நிலம் வழங்கப்பட்டிருக்கிறது. இவர்களும் குடிசை அமைத்து குடியிருந்து வருகிறார்கள். இது ஓராண்டு கடந்ததை முன்னிட்டு சமீபத்தில் இயற்கைத் திருவிழா கொண்டாடியிருக்கிறார்கள்.

ஊர்க்காரர்களை எல்லாம் அழைத்து விருந்து வைத்துள்ளார்கள். அதற்காக சாப்பிட நம்ம ஊர் டைனிங் டேபிள் ஸ்டைலில் ஒரு டேபிள் அமைத்திருக்கிறார்கள். அது முழுக்க மூங்கில் தப்பையாலேயே செய்திருந்தார்கள். அதேபோல் இவர்கள் பயன்படுத்தும் 90 சதவீதம் பொருட்கள் மூங்கிலாலேயே இருந்தன.

படி, வல்லம், ஆடு அடைக்கும் பட்டி, பரண் இப்படி எங்கே பார்த்தாலும் மூங்கில்கள்தான். களிமண் செம்மண் கலந்து இவர்கள் கட்டியிருந்த மண் வீடுகளில் கூட இடையில் மூங்கில்களே வெளியே துருத்திக் கொண்டிருந்தது. ‘‘எங்களுக்கு மூங்கில்தான் எல்லாமே. அது இல்லாமல் வாழ்க்கையே இல்லை!’’ என்றனர் இவர்கள்.

இங்கே கூவக்குற்றி என்று ஒரு பொருள். அதுவும் மூங்கிலாலேயே ஆனது. ‘அதுதான் எங்களுக்கு அட்டைப் பூச்சிகளிலிருந்து பாதுகாப்பு தருகிறது என்று காட்டினார் ஒரு மலைவாசிப் பெண்.

‘‘மழை காலத்தில் நிறைய அட்டைகள் வந்துடும். கால்ல ஏறும். அப்ப அதுககிட்ட இருந்து எங்களைக் காப்பாத்திக்க இதைப் பயன்படுத்துவோம்.. புகையிலை வாங்கிட்டு வந்து அரைச்சு இதுல ஊத்தி வச்சுக்குவோம். கடைக்கு, வெளியில எங்காவது போகும்போது இதை எடுத்து இடுப்புல கட்டிக்குவோம். எங்காவது அட்டை கடிச்சுட்டா அந்த இடத்தில இதுலயிருந்து புகையிலைக் கரைசலை எடுத்து அது மேல விட்டு தண்ணியைத் தெளிச்சம்ன்னா அட்டை செத்துப் போயிடும். சில பேர் இதைக் கையில் வச்சுக்குவாங்க. இல்லே கட்டித் தோள்ல போட்டுக்குவாங்க!’’

இங்கே பள்ளிக்கூடம் செல்வதற்கு வசதியில்லை. அதனால் பிள்ளைகள் வால்பாறை டவுன் பள்ளி ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறார்கள். தண்ணீருக்கு பக்கத்தில் உள்ள ஆற்றிலும், சோலையில் உள்ள நீர்த்தேக்கத்திலுமே எடுத்துக்கொள்கிறார்கள். இப்படி எந்த விஷயத்தை எடுத்தாலும் பழமை மாறாமல் அதே தன்மையுடன் வாழ்கிறார்கள்.

‘‘எங்க காலம் எல்லாம் ஆஸ்பத்திரி போகாமலே வாழ்ந்துட்டோம். பிரசவம் பார்க்கறது கூட முந்தியெல்லாம் பெரும்பாலும் காட்டிலேயே நடந்துடும். இப்ப எல்லாம் அப்படியில்லை. டவுன் ஆஸ்பத்திரிக்குப் போக ஆம்புலன்ஸ் கூப்பிட வேண்டியிருக்கு. இனி எம்புள்ளை, எம் பேத்தி எல்லாம் பிரசவம் ஆஸ்பத்திரி போய்த்தான் பார்க்க வேணும். பிரசவம் பார்க்கிற அளவு பழைய ஆளுக எல்லாம் இல்லை. அதனால காலத்துக்கேத்தபடி எங்கள்லயும் சின்ன சின்ன மாற்றங்கள் வரத்தான் செய்கிறது!’’ என்று சொல்லும் மூப்பன் சக்தி வேலிடம், இங்கே யானைகள், புலி, கரடி, சிறுத்தைன்னு நிறைய இருக்கே. அது எல்லாம் உங்களுக்குத் தொந்தரவா இல்லையா? என்று கேட்டால், “அது எதுக்கு சார் தொந்தரவு செய்யுது. அதுக பாட்டுக்கு வந்தா அதுக வழியில போயிடும். அதுகளை தெய்வமா பாவிக்கிற சனங்கதான் எங்க காடர்கள் என்று அதற்கு ஒரு வியாக்கியானமான நிஜ சம்பவம் என்று ஒரு கதையும் சொன்னார்.

‘‘நாங்க யானையோட சிநேகம் உள்ளவங்க. அதுக்கு கால்ல முள்ளுக்குத்தி, சீல் பிடிச்சு இருக்கும்போது அந்த முள்ளெடுத்து காப்பாத்தி விட்டது நாங்கதான். அதேபோல புலியும். ஒரு தடவை யாரோ மீனைத் தின்னு ஆத்துல போட்டிருக்கான். அந்த முள்ளு பாறையில் கிடந்திருக்கு. அங்கே வந்த புலி அதை மிதிச்சுக்குத்திடுச்சு. அந்த முள்ளை எடுக்க முடியலை. அதுவே கொப்பளமாகி நடக்க முடியாம படுத்துக் கிடந்தது. ரொம்பவும் புண்ணு முத்திப் போச்சு. எங்காளு போயிருக்கான். என்னடா புலி படுத்திருக்குன்னு அவனுக்கும் பயந்தான். ஒரு தடவை, இரண்டு தடவை காலையில, சாயங்காலம் அடுத்த நாள் பார்த்தான். அது அந்த இடத்திலேயே கண்ணீர் விட்டுக் கிடந்திருக்கு. புலிக்கு என்னவோ ஆயிருச்சுன்னு கிட்டப் போய்ப் பார்த்து விஷயம் தெரிஞ்சிருக்கான்.

அதுல புலியும் கண்ணை மூடிப் படுத்திருக்கு. ஏன்னா நம்மளைக் கண்டு இந்த ஆளு பயந்துக்குவான். முள்ளு எடுக்கட்டும்ன்னு அப்படி கிடந்திருக்கு. இவனும் ஒரு குச்சியை எடுத்து கொப்பளத்தை எடுத்து விட்டு சீலை, ரத்தமெல்லாம் வெளியேத்தியிருக்கான். அதுக்கப்புறம் புலிக்கு குணமாகி எழுந்திருச்சுப் போயிருச்சு. இப்படி நாங்க காட்டுக்குள்ளே போனாலும் சாமி கும்பிட்டுருவோம். வனதேவதைகிட்ட, ‘நாங்க மிருகத்தைப் பார்க்கக்கூடாது. அதோட மிதியடியத்தான் பார்க்கலாமே ஒழிய, மிருகத்தைப் பார்க்கக்கூடாதுன்னு வேண்டிக்குவோம். ஒரு வாரம் காட்டுக்குள்ளே தங்கியிருந்தால் கூட மிருகத்தோட மிதியடியப் பார்ப்பமே ஒழிய மிருகத்தைப் பார்க்க மாட்டோம். புலியா இருந்தாலும், யானை, சிறுத்தையாக இருந்தாலும் நாங்க இப்படித்தான். எக்குத்தப்பா அப்படி அதுகளைப் பார்த்துட்டாலுமே, நீ காட்டுக்கே ராஜா. நிங்களை நாங்க காணறப்ப நாங்க பேடி. அதனால நீ எங்க குழந்தைகள் கண்ணுக்குத் தட்டுப்படாம வாழு. மேய்ஞ்சுடுன்னு எங்க பாஷையில சொல்லிக்குவோம். அந்த வாக்குக் கேட்டு அதுவும் போயிடும்!’’ என்று சொல்லி நெகிழ்ந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com