“கலைஞனுக்கு விற்பனையை விட பாராட்டுத்தான் முக்கியம்!”

கலைஞர் புல்லரம்பாக்கம் சுந்தராஜன் நந்தனுடன் ஓர் நேர்காணல்:
ஓவியரும் சிற்பியுமான பி.எஸ்.நந்தன் (வயது 83) சோழமண்டலத்தைச் சேர்ந்த கலைஞர் ஆவார், அவருடைய படைப்புகள் மெட்ராஸ் ஆர்ட் இயக்கத்தின் பாரம்பரியத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. ஓவியராகப் பயிற்சி பெற்ற இவர், 1970களில் இருந்து சிற்பக் கலையிலும் பணியாற்றத் தொடங்கினார்.
சிறுவயதிலிருந்தே அவருக்கு நன்கு தெரிந்த ஒரு பொருளான களிமண், மற்றும் செழுமையான டோனல் மாறுபாடுகளைக் கொண்ட கருங்கல் ஆகியவற்றைப் பயன்படுத்தி புத்தர், விநாயகர் போன்ற தெய்வங்களின் உருவங்களை நந்தன் உருவாக்குகிறார். இவற்றில் சில படைப்புகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் மற்றும் கோயில் சிற்பங்களின் தோற்றத்தால் ஈர்க்கப்பட்டுள்ளன.
உங்கள் கலைப் பயணத்தின் ஆரம்பம்?
நான் குழந்தையாக இருந்தபொழுது என் பாட்டி விநாயக சதுர்த்தி அன்று விநாயகரின் உருவத்தைச் செய்வார். பின்னர், வரலஷ்மி நோன்பின்பொழுது அம்மியைக் கொண்டும், தீபாவளியின்பொழுது குடத்தைக் கொண்டும் அம்மன் உருவத்தைச் செய்வார். பாட்டியின் காலத்துக்குப் பிறகு என் அம்மா அவற்றைச் செய்தார். நான் 7ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலத்தில் அம்மா எனக்கு அந்த வேலையை ஒப்படைத்தார். குயவர்கள் வேலை செய்வதையும் நான் சிறு வயது முதலே பார்த்து வருவேன். இந்தப் பழக்கத்தினால் சிற்பம் செய்வதை களிமண் உருவங்களுடன் தொடங்கினேன். முதலில் தட்டைச் சிற்பங்களையே செய்தேன். பின்னர் 3-dimensional உருவங்கள் செய்யத் தொடங்கினேன்.

நுண்கலையில் எவ்வாறு ஆர்வம் வந்தது?
என் மாமா ஒருவர் ஓவியராக இருந்தார். அவர் நான் செய்துகொண்டிருந்த கலைப்படைப்புகளைப் பார்த்துவிட்டு என்னை மெட்ரிக் முடித்தவுடன் கலைக் கல்லூரியில் சேர்க்கலாம் என்றார். என் தந்தையும் நான் மற்றவர்களுக்காக வேலை செய்வதைவிட சுயமாக வேலை செய்வதே உசிதம் என்று நினைத்தார். பின்னர் நான் 1961இல் சென்னைக் கலைக் கல்லூரியில் சேர்ந்தேன்.
ஓவியத்துக்கும் சிற்பத்துக்கும் என்ன வித்தியாசம்?
ஒவியம் வெறும் உருவத்தைப் பற்றி மட்டும் பேசக் கூடாது. அதில் 3-டைமென்ஷன் இருக்க வேண்டும். உருவத்தின் பின்புறத்தில் என்ன உள்ளது என்று தெரிய வேண்டும். அந்தச் சிந்தனை வந்த உடன் ஓவியம் நின்றது சிற்பம் தொடங்கியது. எனக்கு அதன் முன்னரே சுடுமண் சிற்பம் செய்யத் தெரியும். சிற்பம் செய்யச் செய்ய ஒரு வித்யாசமான உருவம் இருந்தால் அதன் பின் பக்கம் எப்படி இருக்கும் என்று தெரிய வந்தது. மரபு வழி சிற்பிகள் மேலிருந்து கீழே கல்லை செதுக்குவார்கள். ஆனால், நான் முதலில் பீடத்தைதான் செதுக்குவேன். அது முடிந்த பிறகு மேலே உருவங்களை செதுக்குவேன். இந்த முறையை நான் பின்பற்றுவதினால் என்றுமே பிழை ஏற்படுவது இல்லை.
கலைஞன் என்றால் எல்லாம் தெரிந்தவன் என்று அர்த்தம். ஓவியம் செய்பவனை ஓவியன் என்பார்கள், சிற்பம் மட்டும் செய்பவனை சிற்பி என்பார்கள். எனக்கு ஓவியமும் தெரியும் சிற்பமும் தெரியும். அதனால் நான் ஒரு கலைஞன். கலைஞனுக்கு விற்பனையை விட பாராட்டுதான் முக்கியம். கலைஞனிடமிருந்து அதிக எதிர்பார்ப்புகள் இருக்கக் கூடாது.
நீங்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் சென்னை கலை இயக்கம் (Madras Art Movement) தொடங்கியிருக்கும். அதைப்பற்றி..
அந்தக் கலை இயக்கத்துக்கு பெயர் அளித்தது பனிக்கரின் மகன் நந்தகோபால். ஆனால், எங்கள் கல்லூரிக் காலத்தில் அதற்கு சென்னை கலை இயக்கம் என்ற பெயர் இருக்கவில்லை. பனிக்கரைப் பின்பற்றியவர்கள் பிறகு சென்னை கலை இயக்கத்தில் சேர்த்துக்கொண்டார்கள். அந்தக் கலை இயக்கத்தின் அடிப்படையே கோடுதான். கோயில் சிற்பத்தில் உள்ள கோடுகளை அடிப்படையாகக் கொண்டு வேலை செய்தோம்.
நீங்கள் சிற்பம் மற்றும் ஓவியம் செய்து கொண்டிருந்தக் காலத்தில் ஓவியத்துக்கும் சிற்பத்துக்கும் எந்த விதமான தொடர்ச்சி இருந்தது?
இரண்டிலும் அதே விதமான கோடுகள் இருக்கும். அதைத்தவிர வேறு எந்த தொடர்சியும் கிடையாது. நிறைய சிற்பிகள் முதலில் ஓவியத்தை வரைந்துவிட்டு அதை சிற்பமாக மாற்றுவார்கள். ஆனால், நான் அப்பொழுது இருக்கும் பொருளை வைத்துக்கொண்டு என் படைப்பை ஏற்படுத்துவேன்.
கலைஞனுக்கு மிகவும் முக்கியமான விஷயம் மனச் செறிவு. சிற்பம் செய்யும்பொழுது அதிலிருந்து வரும் ஓசை ஒரு விதமான தியானத்தைத் தூண்டும். மனச் செறிவு இருந்தால்தான் நல்ல ஓவியமோ, சிற்பமோ, நடனமோ செய்யமுடியும். கடும் உழைப்பும் கலைக்குத் தேவை. உழைத்து ஒர் உருவத்தை வெளிக்குக் கொண்டுவரும் பொழுது எல்லா கஷ்டமும் மறந்துவிடும்.

நீங்கள் கருங்கல்லில் வேலை செய்வதற்கான காரணம் என்ன?
இந்தக் கல்லில்தான் பலவிதமான வித்தியாசங்களைப் பார்க்க முடியும். பல வண்ண வேறுபாடுகளைப் பார்க்க முடியும். ஓவியத்துக்கான தன்மை எல்லாவற்றையும் அதில் பார்க்க முடியும்.
ஒரு சமூகத்துக்கு கலையின் முக்கியத்துவம் என்ன?
நான் தற்காலத்திற்காக என் கலையைப் படைப்பதில்லை. நான் வருங்காலத்துக்காகத்தான் படைக்கிறேன். லிங்கத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். முதல் முதலில் அதை ஒரு உருவமாகத்தான் செய்தார்கள். பின்னர் ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு அர்த்தத்தைக் கொடுத்தார்கள். நாம் ஏதோ ஒர் உள்ளுணர்ச்சியில்தான் சிற்பத்தைச் செய்கிறோம். ஆனால், நடுநிலைமை இல்லாமல் ஓவியத்தையோ சிற்பத்தையோ செய்ய முடியாது. இந்த உலகமே நடுநிலைமையில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
உங்களுடைய கலைப் பயணத்தில் பிழைப்புக்காக செய்த வேலை கலை ஆர்வத்தினால் செய்த வேலை என்று உள்ளதா?
கலைக்காக மட்டும் இருந்தால் நல்ல படைப்புகளைச் செய்யலாம் ஆனால், 10 வருடங்கள் இருக்க வேண்டிய கலைஞன் 5 வருடங்களிலேயே இறந்து விடுவான். அதனால் பிழைப்புக்காக சிறிது கைவினைப் பொருளைச் செய்ய வேண்டும். அதை வாங்குவதற்கு மக்கள் இருப்பார்கள். எனினும் கைவினைப் பொருள் தற்காலத்துக்காக, ஆனால், கலை என்பது வருங்காலத்துக்காக. ஒரு கலைஞனின் படைப்பில் 20% பணத்துக்காக இருக்கலாம். அதற்கு மேல் பணத்துக்காக செய்தால் அவனுடைய கலை அழிந்துவிடும்.