சைக்கிள் ஓட்டி சாதனை புரிந்த சிங்கக் குட்டி

சைக்கிள் ஓட்டி சாதனை புரிந்த  சிங்கக் குட்டி

ண்டுதோறும் வியக்கத்தகு சாதனை புரிந்த இளையவர்களுக்கு “இளம் சாதனையாளர் விருது” கொடுத்து ஊக்குவிக்கும் பணியை செய்து வருகிறது சென்னை மேற்கு ரோட்டரி சங்கம். இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா அண்மையில் சென்னை கிரவுன் பிளாசா நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

சைக்கிள் ஓட்டுவதில் சாதனை புரிந்திருக்கும் ரியான் குமார், டேபிள் டென்னிஸ் விளையாட்டில் சாதனை புரிந்திருக்கும் ஹன்சினி மதன் ராஜன் இருவருக்கும் ரோட்டரி மாவட்ட கவர்னரால் இளம் சாதனையாளர் 2022 விருது வழங்கப்பட்டது.

சிங்கக் குட்டி ரியான்

இரண்டாம் வகுப்பு மாணவனான ரியான் குமார் சைக்கிளில் 50 கி.மீ., 100 கி.மீ. என்று தொலைதூரம் சைக்கிள் ஓட்டுவதில் சாதனை புரிந்துள்ளான். 108 கி.மீ. தூரத்தை 5 மணி 20 நிமிடங்களில் கடந்தது, 150 கி.மீ. தூரத்தை 7 மணி 20 நிமிடங்களில் கடந்தது, 100 கி.மீ. தூரத்தை 3 மணி 39 நிமிடங்களில் கடந்தது என்று இச்சிறுவன் பல உலக சாதனைகள் புரிந்துள்ளான்.

கடந்த ஒராண்டு காலத்தில் 7000 கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டி இருக்கும் ரயான், அதிகாலை நாலரை மணிக்கு தன் பயிற்சியை ஆரம்பித்து, அதனை முடித்துவிட்டு, காலை ஏழரை மணிக்கு தன் பள்ளிக்குச் சென்று விடுகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியானின் செல்லப்பெயர் சிங்கக்குட்டி. அவனது அப்பா இந்தியக் கப்பற்படையில் பணியாற்றுகிறார். அம்மாவும் கப்பற்படையில் பணியாற்றியவர்தான். ரியான் சைக்கிள் ஓட்டும்போது அவரது அம்மாவும் கூடவே சைக்கிள் ஓட்டி, அவனை ஊக்கப்படுத்துகிறார்.

ஹன்சினி இலக்கு ஒலிம்பிக்ஸ்

எட்டாம் வகுப்பு மாணவியான ஹன்சினியின் பெற்றோர் இருவரும் மருத்துவர்கள். திடீரென்று ஆர்வம் ஏற்பட்டு டேபிள் டென்னிஸ் ஆட ஆரம்பித்த ஹன்சினி, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல பதக்கங்கள் பெற்றவர். தற்போது அவர் போர்ச்சுகல்லில் பயிற்சி பெற்று வருகிறார்.

“என்னுடைய லட்சியம் ஒலிம்பிக்சில் பங்கேற்று இந்தியாவுக்கு பதக்கம் வெல்வதுதான்! காஞ்சி மகா பெரியவரின் அருளினால் நான் அதற்கான திறமையும், பயிற்சியும் பெற்று சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்” என்று கூறுகிறார் ஹன்சினி மதன் ராஜன்.

இளம் சாதனையாளர்களுக்கு வாழ்த்துகள்!!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com