ஆளுநரும் ஆன்லைன் ரம்மியும்

ஆளுநரும் ஆன்லைன் ரம்மியும்

மிழக அரசுக்கும் தமிழக ஆளுநருக்கும் அடிக்கடி மோதல்  நடப்பது வாடிக்கையாகிவிட்டது. இப்போது நடந்து முடிந்த ரவுண்டில் ஆளுநர் வென்றிருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து கடந்த அக்டோபர் 1ம் தேதி தமிழ்நாடு அரசு கொண்டுவந்த அவசர சட்டம் அரசமைப்புச்சட்ட விதிகளின்படி நவ. 27 காலாவதியானது.

 இதற்காக ஒரு நிரந்தர  சட்டம் ஒன்றை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியிருந்தது. இந்த மசோதாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் கையெழுத்திடாததால், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு இருந்துவந்த சட்டபூர்வத் தடை சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது.

 இந்த அவசர சட்டத்தின் பின்னணியை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.   தமிழ்நாடு அரசு அவசர சட்டத்திற்கு மாற்றாக ஆன்லைன் சூதாட்டதடை சட்ட மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கடந்த அக்டோபர் 19 அன்று தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்காக அக்.28 அன்று அனுப்பி வைக்கப்பட்டது.  இதுகுறித்து நேற்று முன்தினம் (நவ. 26) சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. சட்ட மசோதா குறித்து ஆளுநர் தரப்பில் தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கான விளக்கத்தையும் ஆளுநர் தரப்பில் கேட்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள் அளித்துள்ளோம். அதன் அடிப்படையில் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது” என தெரிவித்திருந்தார்.  ஆனால் ஆளுநர் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.  

இதற்கு முன்னதாக, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2020ம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இத்தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இதன்பின் தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களால் பணத்தை இழப்பதால் நேரிடும் தற்கொலைகளைத் தடுக்க “வலுவான புதிய சட்டத்தைக் கொண்டு வரவேண்டும்” என கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் இதுகுறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஜூன் மாதம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை அடிப்படையிலேயே ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு செப். 26 தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.

ஆனால் இந்த அவசர சட்டம்தான் 60 நாட்கள் முடிந்து நேற்றுடன் (நவ. 27) காலாவதியானது. அதற்கு மாற்றாக இயற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்கப்படவில்லை

 தமிழ் நாட்டின் பா.ஜ.க. தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் ஆளுநரின் நடவடிக்கையை விமர்சித்திருக்கிறது. “15 மாதங்களில் 32 பேர் தற்கொலை”என்பதைச்  சுட்டிக்காட்டியுள்ள பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., “ஆன்லைன் சூதாட்டத் தடை காலாவதியானால் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் மீண்டும் முழுவீச்சில் தொடங்கிவிடும். தமிழ்நாட்டில் கடந்த 15 மாதங்களில் 32 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதை தடுக்க ஆன்லைன் சூதாட்டத் தடை மிகவும் அவசியம்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் சட்டப்பேரவையில் இயற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆளுனரின் ஐயங்களுக்கும் அரசு தெளிவான பதில் அளித்திருக்கிறது. அதை ஏற்று ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்,” என வலியுறுத்தி தன் ட்விட்டரில்  பதிவிட்டிருந்தார்.

 “இத்தகைய ஆன்லைன் சூதாட்டங்கள் அதிர்ஷ்டம் சார்ந்த விளையாட்டு அல்ல, திறன் சார்ந்த விளையாட்டு என, உச்ச நீதிமன்றம் கருதுகிறது. கேரள உயர் நீதிமன்றமும் இதே கருத்தை கூறியிருக்கிறது. மேலும், இத்தகைய செயலிகள் மூலம் இந்திய அரசுக்கு பெரும் வரி வருவாய் வருகிறது. முந்தைய அ.தி.மு.க. அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கும் இப்போதைய அவசர சட்டத்திற்கும் ஒரே நிலைதான் ஏற்பட்டுள்ளது. அதனால், இதற்கு மேல் ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடை செய்ய இந்திய அரசைத்தான் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். இந்திய அரசிடம்தான் ஒரு செயலியை நிரந்தரமாக தடை செய்யும் அதிகாரம் உள்ளது. அப்படித்தான் சீன செயலிகள் பலவற்றை இந்திய அரசு தடை செய்தது. டிக் டாக் செயலி தடைக்குப் பின் எவ்வளவோ தொழில்நுட்பத்தைத் தாண்டியும் இந்தியாவில் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஏனெனில், அந்த தடையை விதித்தது இந்திய அரசு” என கூறினார்.

அடுத்த நடவடிக்கையாக, “ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசே பொதுநல வழக்கு தாக்கல் செய்யலாம்” என்கிறார்  ஆன்லைன் விளையாட்டுகள் குறித்து ஆய்வு செய்யும் தொழில்நுட்ப வல்லுனர். ஆளுநர் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினால், மீண்டும் மசோதா நிறைவேற்றி அனுப்ப வேண்டும். அப்போது அவரால் ஒப்புதல் அளிக்காமல் இருக்க முடியாது. சைபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பா.ஜ.க. அரசு நினைக்கிறது. ஆளுநருக்கு இந்த மசோதாவின் எந்த பிரிவு திருப்தி அளிக்கவில்லை என்பதை தமிழ்நாடு அரசு கேட்டறிய வேண்டும்” என்கிறார் ஒரு மூத்த வழக்கறிஞர். 

 கவர்ச்சிகரமான விளம்பரங்களின் மூலம் இதற்கு அடிமையானவர்கள்  நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் இளைஞர்கள்.

இவர்கள் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு அடிமையாகி அதில் பெரும் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்வது நீடித்துக்கொண்டிருக்கும் நிலையில் ஆளுநர் அதன் தடை மசோதவை கடைசி நிமிடம் வரை தாமதப்படுத்தி காலாவதியாகச் செய்திருப்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com