குஜராத் தேர்தல் களம் - ஒரு பார்வை

குஜராத் தேர்தல் களம் - ஒரு பார்வை

அரசியல் சிறப்புக் கட்டுரை

 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 என இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில், குஜராத்தில் அரசியல் களம் எவ்வாறு இருக்கிறது?

மும்முனைப் போட்டி 

இதுவரை பா.ஜ.க. - காங்கிரஸ் என இருமுனைப் போட்டியே இருந்து வந்த குஜராத்தில் இம்முறை மும்முனைப் போட்டி நிலவுகிறது. முதல்முறையாக ஆம் ஆத்மி இவ்விரு கட்சிகளுக்கும் கடும் போட்டியை அளித்து வருகிறது.   அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல்  வாக்குறுதிகளாக அளிப்பது குறித்து  அண்மையில் பிரதமர் மோடி விமர்சித்திருந்தார். ஆனால், தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே அவரது கட்சியான பா.ஜ.க. இரண்டு காஸ் சிலின்டர், மானியம் போன்ற அறிவிப்புகளை செய்திருக்கிறது. ஆம் ஆத்மியும் தன் பங்குக்கு வாக்குறுதிகளை அள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறது.

கருத்துக் கணிப்புகள்

மக்கள் ஆதரவு பா.ஜ.க.வுக்கே அதிகம் இருப்பது லோக்நிதி - சி.எஸ்.டி.எஸ். கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்பதும் தெரியவந்துள்ளது. பா.ஜ.க.வுக்கு கிராமப்புறங்களில் வலுவான ஆதரவு இருப்பதும், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் ஆதரவு அதிகம் இருப்பதையும் இந்த கருத்து கணிப்புகள் சொல்லுகின்றன.

கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில்  இளைஞர்கள்  ஆம் ஆத்மிக்கு ஆதரவாகவும், அதிக வயது உள்ளவர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். ஏழை மற்றம் நடுத்தர வாக்காளர்களில் 4-ல் ஒருவரின் ஆதரவு ஆம் ஆத்மிக்கும், 4-ல் ஒருவரின் ஆதரவு காங்கிரசுக்கும் இருக்கிறது.

 மூன்று கட்சிகளுக்கும் உள்ள மக்கள் ஆதரவு வாக்குகள் குறித்த கருத்துக்கணிப்பில், பா.ஜ.க. கடந்த 2017-ல் பெற்ற 49.1 சதவீத வாக்குகளைவிட 2.1 வாக்குகள் குறைந்து 47 சதவீத வாக்குகளைக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், கடந்த 2017 தேர்தலின்போது 41.4 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சி, தற்போது 21 சதவீத மக்களின் ஆதரவை மட்டுமே பெற்றிருக்கிறது.

அதாவது, காங்கிரஸ் ஆதரவு வாக்குகள் அதிக அளவில் ஆம் ஆத்மி கட்சிக்கு சென்றுள்ளன. அக்கட்சி 22 சதவீத மக்களின் ஆதரவை பெற்று, பா.ஜ.க.வுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் 20.4 சதவீத மக்களின் ஆதரவை இழந்துள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பா.ஜ.க. ஆட்சியில் குஜராத் வளர்ச்சி பெற்று வருவதாகவும், வளர்ச்சித் திட்டங்களை அக்கட்சி சிறப்பாக செய்திருப்பதாகவும் பெரும்பாலான குஜராத் மக்கள் கருதுகின்றனர். பா.ஜ.க.வின் வளர்ச்சி அரசியலுக்காக அக்கட்சியை ஆதரிப்பதாக 27 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அதேநேரத்தில், மாநிலத்தில் வளர்ச்சி இல்லை என 14 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.  இவர்கள் குஜராத்தில் 3-வது கட்சிக்கான தேவை இருப்பதாக எண்ணுபவர்கள் . இதன் காரணமாகவே, ஆம் ஆத்மி 22 சதவீத மக்களின் ஆதரவை பெற்றுள்ளது. எனினும், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அளவுக்கு தேர்தல் வாய்ப்பு ஆம் ஆத்மிக்கு இருக்காது

அரசியல் கட்சிகளின் புதிய நிலைப்பாடுகள் - பா.ஜ.க.

குஜராத்தில் எப்போதும் சாதி, மதத்தை முன்னிறுத்தி வாக்கு சேகரிக்கும் பா.ஜ.க., இந்த முறை  மத்திய, மாநில பா.ஜ.க செய்த சாதனைகளைத் தொகுதிவாரியாகச் சென்று மக்களிடம் பிரபலப்படுத்தும் வேலைகளில் இறங்கியிருக்கிறது. குறிப்பாக, குஜராத் முழுவதும் பரவலாக இருக்கும் பழங்குடியின மக்களைக் கவரும் வகையிலான வாக்குறுதிகளையும் அறிவித்து வருகிறது. தங்களது சொந்த மாநிலத்தில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். பிரசாரங்களும், அங்கு அறிவித்திருக்கும் புதிய மெகா திட்டங்களும் நமக்குக் கைகொடுக்கும் என பா.ஜ.க. நம்பிக்கொண்டிருந்த சமயத்தில்மோர்பி பால விபத்து பா.ஜ.க-வுக்கு தலைவலியை உண்டாக்கியிருக்கிறது என்பது உண்மை.

இருந்தாலும் அந்தப் பகுதியில் இருக்கும், பட்டிதார், படேல் சமூக வாக்குகளும், மோடி, அமித் ஷாவுக்கான வாக்குவங்கியும்  “தங்கள் கட்சியை வெற்றிபெறச் செய்யும்” என நம்புகிறது பா.ஜ.க. அதற்கு காரணம் குஜராத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட சமூகங்களில் ஒன்றான பட்டிதார் மூகத்தின் ஆதரவு பா.ஜ.க.வுக்கே அதிகம் இருக்கிறது. கடந்த 2017 தேர்தலின்போது காங்கிரசுக்கு ஆதரவாக இருந்த பட்டிதார் சமூக மக்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் இம்முறை பா.ஜ.க.வுக்கு ஆதரவாக மாறி இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களைப் பொறுத்தவரை பா.ஜ.க.வுக்கே ஆதரவு அதிகம் இருக்கிறது. ஆனால், இதேபோல் பழங்குடி மக்களின் ஆதரவும் பா.ஜ.க.வுக்கே அதிகம் உள்ளது.

காங்கிரஸ்

கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க. மீதிருந்த அதிருப்தியால் மொத்தமுள்ள 182 தொகுதிகளில், 77 இடங்களைக் கைப்பற்றி வலுவான எதிர்க்கட்சியானது காங்கிரஸ். இந்த முறை அந்த அதிருப்தி மேலும் அதிகரித்திருப்பதால், வெற்றி நமதே என்றிருந்தது காங்கிரஸ் கட்சி. ஆனால், ஆம் ஆத்மியின் வருகை காங்கிரஸுக்குப் பெரும் சிக்கலாக அமைந்திருக்கிறது. மேலும், கட்சியிலிருந்து முக்கியத் தலைவர்கள், எம்.எல்.ஏ-க்கள் விலகியதும் அவர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், எதிர்க்கட்சியாக காங்கிரஸ் சரியான முன்னெடுப்புகளைச் செய்யாதது, மக்கள் மத்தியில் அவர்களுக்கான செல்வாக்கைக் குறைத்திருக்கிறது. குஜராத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும், ராகுல் காந்தி தெலங்கானாவில் நடைப்பயணம் மேற்கொண்டுவருவது கட்சி நிர்வாகிகளிடமே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இருந்தாலும், தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கே அதிகம் இருக்கிறது. இஸ்லாமியர்களில் 50 சதவீத மக்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது.

ஆம் ஆத்மி

அரவிந்த் கெஜ்ரிவாலின் `டெல்லி மாடல்' பிரசாரமும், கவர்ச்சிகரமான வாக்குறுதிகளும் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மை. ஆம் ஆத்மியின் பல்வேறு வாக்குறுதிகளும், குஜராத்தைத் தாண்டி இந்தியா முழுவதுமே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனாலும் , அந்தக் கட்சிக்கென மாநில அளவில் செல்வாக்குமிக்க தலைவர்கள் யாரும் இல்லாதது மிகப்பெரிய மைனஸ். ``கெஜ்ரிவால் மேற்கொள்ளும் பிரசாரங்கள் காங்கிரஸ் வாக்குவங்கியை உடைக்குமே தவிர, பா.ஜ.க-வின் வாக்குவங்கிக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படுத்தாது என்றே கருதப்படுகிறது. இதனால் பா.ஜ.க. ஒரளவு நிம்மதியாகயிருக்கிறது.  ஆம் ஆத்மியின் வருகை காங்கிரஸை பலவீனப்படுத்தியிருப்பதே பா.ஜ.க-வுக்குச் சாதகமாக அமையும்'' என்று  குஜராத்தின் முன்னணி பத்திரிகைகள் எழுதுகின்றன்.  

கருத்துக்கணிப்புகள் சொல்வதென்ன?

வழக்கமாக தேர்தல் கருத்துக்கணிப்புகளைச் செய்யும் நிறுவனங்கள் என்ன சொல்லுகின்றன?

டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம், இ.டி.ஜி சர்வே நிறுவனத்தோடு இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள்:

* பா.ஜ.க: 125-131 * காங்கிரஸ்: 29-33* ஆம் ஆத்மி: 18-22

ஏ.பி.பி. செய்தி நிறுவனமும், சி-வோட்டர் சர்வே நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள்:

* பா.ஜ.க: 135* காங்கிரஸ்: 35* ஆம் ஆத்மி: 11* மற்றவை: 1

இதன் அடிப்படையில் பார்க்கும்போது தொடர்ந்து ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க.விற்கே இம்முறையும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு  அதிகம்.

ஆனால், கடந்த சில தேர்தல்களில் நாடு தழுவிய அளவில் தேர்தல் கணிப்புகள் பொய்த்துப்போயிருப்தை நினைவில் கொண்டால், இந்த மாநில தேர்தலிலும் ஆச்சரியப்படும் மாற்றங்கள் நிகழலாம்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com