ஹலோ… நாந்தாங்க பேசுறேன் … !

ஹலோ… நாந்தாங்க பேசுறேன் … !

ஸ்மார்ட் ஃபோன்களால் திருமண உறவு பாதிக்கப்படுகிறதா?

ஸ்மார்ட் ஃபோன்களின் வருகை மக்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒருபுறம் தொலைவில் உள்ளவர்களை அது இணைக்கிறது. மற்றொருபுறம், நெருக்கமாக உள்ளவர்களிடையே அது விரிசலை ஏற்படுத்துகிறது. ஸ்மார்ட் ஃபோன்களின் பயன்பாடு, தம்பதியரிடையே எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது குறித்து ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்பு நிறுவனமான விவோ, சைபர் மீடியா ரிசர்ச் நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டது.

 இந்த ஆய்வின் முடிவில் பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.  டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, அகமதாபாத், புனே ஆகிய மாநகரங்களில் வசிக்கும் ஆயிரம் தம்பதியரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்த முடிவுகளை விவோ அண்மையில் அவர்கள் இணைய தளத்தில்  வெளியிட்டுள்ளது.

தங்களின் திருமண வாழ்வில் ஸ்மார்ட் ஃபோன்கள் பாதிப்பை ஏற்படுத்திருப்பது உண்மை  என்று 88% தம்பதியர் தெரிவித்துள்ளனர். தங்கள் இணையருடன்(கணவர் அல்லது மனைவியுடன் நேரில் பேசிக்கொண்டிருக்கும்போது பேச்சில் முழுமையாக கவனம் செலுத்த முடிவதில்லை என 69% பேர் தெரிவித்துள்ளனர். அதேபோல் ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது கணவர் / மனைவி குறுக்கீடு செய்தால் எரிச்சலடைவதாக 70% பேர் தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட் ஃபோன்கள் காரணமாக கணவர் / மனைவி உடனான உறவு பலவீனமடைந்திருப்பதாக 66% பேர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

கணவர் / மனைவி உடன் நேரத்தை செலவிடும்போது மிகவும் நிம்மதியாக உணர்வதாகவும், அதேநேரத்தில் செல்போன்களினால்  குறைவான நேரத்தை மட்டுமே கணவர் / மனைவி உடன் செலவிடுவதாகவும் 84% தம்பதியர் தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட் ஃபோன்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை மாற்ற வேண்டும் என விரும்புவதாகவும் பெரும்பாலான தம்பதியர்தெரிவித்துள்ளனர்.

வீட்டில் இருக்கும் நேரங்களில் ஸ்மார்ட் ஃபோன்களை அணைத்து வைக்க வேண்டியதின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் தம்பதியர் இடையே ஆரோக்கியமான உறவை மேம்படுத்த முடியும் என பலரும் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் ஃபோன்கள் தங்களுக்கு விருப்பமான நபருடன் தொடர்பில் இருக்க உதவுவதாக 60% பேரும்; அறிவை வளர்த்துக்கொள்ள உதவுவதாக 59% பேரும் கூறுகின்றனர். ஸ்மார்ட் ஃபோன்கள் மக்களை சோம்பேறியாக மாற்றுகின்றன என்பதில் உண்மை இருந்தாலும், இவற்றின் பயன்பாடு தங்களின் செயல்திறனை மேம்படுத்துவதாக 55% பேர் தெரிவித்துள்ளனர்.

செல்போன் அறிமுகமாகும் போது “உங்கள் வாழ்க்கையின் இனிய பொழுகள்  இனி எப்போதும்  உங்களுடன்“ என்று விளம்பரம் செய்து வந்தது.  அப்போது அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்  செல்போனால்  வருங்காலங்களில் அது தொடர் தொல்லையாக மாறி இனிய பொழுதுகளை இழக்கப்போகிறார்கள் என்று. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com