பிரதமரின்  வருகையின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடா?

 பிரதமரின்  வருகையின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடா?

ந்திய பிரதமர் நரேந்திர மோதி சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தபோது பாதுகாப்பு நடவடிக்கைகளில் குளறுபடிகள் இருந்ததாக தமிழக பா.ஜ.க. தலைவர்  அண்ணாமலை, தமது கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து  புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் அதிர்ச்சி தரும் தகவல்கள்.

2022 ஜூலையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மிகப்பெரிய அளவில் குறைபாடுகள் நடந்துள்ளன. குறிப்பாக, அப்போது பயன்படுத்தப்பட்ட கையடக்க மெட்டல் டிடெக்டர்கள், டோர் ஃபிரேம் மெட்டல் டிடெக்டர்கள், வெடிகுண்டு கண்டறியும் சாதனங்கள் போன்றவற்றில் பல காலாவதியானவை மற்றும் பராமரிப்பில்லாமல் நீண்ட காலம் உள்ளவை" என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதே குற்றச்சாட்டுகளை அண்ணாமலை கவர்னரை சந்திக்கும் ஒரு நாள் முன்னரே சமூக செயல்பாட்டாளரான சவுக்கு சங்கர் தமது இணையதளத்திலும் சமூக ஊடக பக்கங்களிலும் 'சவுக்கு எக்ஸ்குளூசிவ்' என்ற பெயரில் வெளியிட்டிருந்தார். இவர் அடிக்கடி ஆளும் கட்சியின் செயல்பாடுகளை அதுவும் குறிப்பாக உளவுத்துறையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சிப்பவர். அதனால் அவர் மீது வழக்குகள் பாய்ந்து, சிறை சென்று, இப்போது பிணையில் வெளியே வந்திருக்கிறார்.

 சில மாதங்களுக்கு முன்பு சவுக்கு சங்கர், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மீதான கடுமையான விமர்சகராக இருந்தார். ஆனால், சமீபத்தில் அவர் நீதிமன்ற அவதூறு வழக்கில் சிறைக்கு அனுப்பப்பட்டபோது, அவருக்கு சட்ட உதவி வழங்க அண்ணாமலை முன்வந்ததாகவும் அதன் பிறகு அந்த கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை தாம் மாற்றிக் கொண்டதாகவும் சங்கர் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அண்மையில் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். அதனால் “அவர் தந்த தகவலின் படி அண்ணாமலை கவர்னரிடம் புகார் கொடுத்திருக்கலாம்” என்றும்  அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

உண்மை நிலை என்ன?

இந்த தகவல்கள் தொடர்பாக தமிழக உளவுப்பிரிவு அதிகாரிகளுடன் பேசியபோது "சென்னை செஸ் ஒலிம்பியாட் நடந்தது ஜூலை மாதம். இந்த சுற்றறிக்கையை அனுப்பப்பட்டது. அக்டோபர் மாதம். ஆனால், அதில் சாதனங்கள் பழுதடைந்ததாகவோ பயன்பாடற்று இருந்த தாகவோ குறிப்பிடவில்லை. சாதனங்களின் செயல்திறனை உறுதிப் படுத்த வேண்டியது நிர்வாகத்தின்  கடமை. அதை உறுதிப்படுத்த சில வழிமுறைகள் அடங்கிய குறிப்புகளை சுற்றறிக்கையாக அனைத்து மண்டல ஐஜிக்கள், ஆணையர்களுக்கு அனுப்பப்பட்டது. இது வழக்கமான நடவடிக்கைதான். இதை வைத்து "சென்னை ஒலிம்பியாட் நிகழ்வில் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டதாக கூறுவதில் உண்மையில்லை.

மேலும் அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மட்டுமின்றி முதல்வரும் பங்கேற்றுள்ளார். அத்தகைய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை அலட்சியமாக கருத வாய்ப்பில்லை. மத்திய பாதுகாப்பு அமைப்புகள் பழுதடைந்த சாதனங்களை பயன்படுத்தியதாக கூறியிருந்தால், அதை சமீபத்தில் திண்டுக்கல் நிகழ்வுக்கு பிரதமர் வருவதற்கு முன்பாக நடந்த பாதுகாப்பு முன்னேற்பாடு கூட்டுக் கூட்டத்தில் அவரது பாதுகாப்புக்கு பொறுப்பு வகிக்கும் சிறப்புப் பாதுகாப்புப்படை அதிகாரிகள் எழுப்பியிருப்பார்கள். ஆனால், அப்படி எதுவும் எழுத்துப் பூர்வமாகவோ வாய்மொழியாகவோ கூட பதிவாகவில்லை," என்கிறார்கள்.

தமிழ் நாட்டு அரசியலில் எந்தச் செய்தியும் - அது ஆதாரமற்றதாகயிருந்தாலும்கூட  அதை வைத்து  அரசியல் செய்யலாம் போலிருக்கிறது.   

 இதேவேளை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியிடம் அளிக்கப்பட்ட மனு மீதான நடவடிக்கை குறித்து அவரது தரப்பிடம் கேட்டபோது, அந்த மனு முறைப்படி தமிழ்நாடு காவல்துறையின் கருத்துக் கேட்புக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

 அவரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு, "தமிழ்நாடு அரசுக்கு எதிரான தகவல்களை பதிவு செய்ய அண்ணாமலையுடன் கைகோர்த்து செயல்படுகிறீர்களா?" என்று கேட்டது. "இந்த தகவலை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். அரசின் குறைபாடுகளை தட்டிக் கேட்பதும் அதை வெளிப்படுத்துவதும் பல ஆண்டுகளாக நான் செய்து வரும் பணி. எனது தொடர்புகளும் எனக்கு தகவல் தருபவர்களும் ஏதோ ஒரு வகையில் இந்த 'சிஸ்டத்தில்' பாதிக்கப்பட்டு இருப்பார்கள்.

தற்போதைய சம்பவத்தில் பிரதமரின் வருகையின்போது சாதனங்களில் குறைபாடு இருந்ததாக கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதமே கையெழுத்திட்ட சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட காவல் துறைக்கும் பகிர்ந்திருக்கிறார். அதை நான் தெளிவாக உறுதிப்படுத்திய பிறகே அந்த தகவலை பகிர்ந்தேன்," என்கிறார் சங்கர்.

 சமூக செயற்பாட்டாளர் சவுக்கு சங்கரும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே. அண்ணாமலையும் அடுத்தடுத்து புகார்களை தெரிவித்திருக்கும் விவகாரம், தமிழக அரசியலில் பலரது புருவங்களையும் உயர்த்தியிருக்கிறது.

அண்ணாமலை, சவுக்கு சங்கர் வெளிப்படுத்தும் பிரதமர் மோதியின் பாதுகாப்பு ஏற்பாடு குளறுபடி புகார்கள் - என்ன நடந்தது?

சென்னையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை, மாநில பாஜக தலைவர் கே. அண்ணாமலை கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்து மனு அளித்தார்.

அந்த மனுவில் என்ன உள்ளது?

"அண்ணாமலை மனுவில் குறிப்பிட்டுள்ள சென்னை ஒலிம்பியாட் துவக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோதி மட்டுமின்றி, சர்வதேச சதுரங்க அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டிருந்தனர்.

அந்த மனுவில், ஏற்கெனவே தமிழ்நாட்டில் கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்ட விவகாரத்தில் நடந்த முறைகேட்டில் உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபியின் (டேவிட்சன் தேவாசீர்வாதம்) தலையீட்டை பாரதிய ஜனதா கட்சி எடுத்துக் காட்டியதாகவும் அந்த விவகாரத்தில் அந்த அதிகாரியை “தமிழ்நாடு அரசுக்கு நன்கு அறிந்தவர்” என்ற காரணத்தால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

டேவிட்சனை பாதுகாத்து அவரை மிகவும் முக்கியமான உளவுப்பிரிவில் தொடர தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தொடரும் புகார்கள், யார் இலக்கு?

இந்த விவகாரம் தொடர்பாக மாநில ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்குலைந்து வருகிறது. கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல் இதற்கு உதாரணம். முன்னதாக, கள்ளக்குறிச்சி கலவரம், பிஎஃப்ஐ குண்டுவெடிப்பு மற்றும் மாநிலத்தில் நடந்த பல சம்பவங்கள் தமிழ்நாடு உளவுப்பிரிவின் தோல்வியை நிரூபிக்கின்றன," என்று தெரிவித்தார்.

பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிகளை, மத்திய அமைப்புகள் சுட்டிக்காட்டிய பின், பாதுகாப்பு உபகரணங்களை பராமரிக்க வலியுறுத்தும் சுற்றறிக்கையை உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபி அனுப்பியுள்ளார் என்றும் இத்தகைய நிலவர அறிக்கை துரதிருஷ்டவசமாக பிரதமர் மாநிலத்துக்கு வருவதற்கு முன்பாக அனுப்பி விவரம் கேட்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

இவ்வாறு பாதுகாப்பு சாதனங்களில் சமரசம் செய்து கொண்டதுடன், மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உதாசீனப்படுத்தி விட்டதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

பிரதமர் மற்றும் மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்கள், வரலாற்று தலங்கள் போன்ற முக்கிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள பெரும்பாலான பாதுகாப்பு சாதனங்களும் தரம் குறைந்தவையாக உள்ளன என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டியிருக்கிறார்.

எனவே, இந்த விவகாரத்தில் 'பக்கசார்பற்ற' விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு தமிழ்நாடு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் தவறு செய்தது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

அண்ணாமலையுடன் சவுக்கு சங்கர் கைகோர்க்கிறாரா?

"உங்களுடைய எல்லா புகார்களிலும் உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தின் பெயரை சேர்த்து குற்றச்சாட்டை பதிவு செய்கிறீர்களே?" என்று கேட்டோம்.

"பிரச்னையின் ஆணி வேராக அவர் இருக்கும்போது அவரது தவறுகளை சுட்டிக்காட்டுவது, ஊழலை இடித்துரைக்கும் ஒரு சமூக செயல்பாட்டாளராக என் கடமை," என்று சவுக்கு சங்கர் தெரிவித்தார்.

மேலும், திமுக இளைஞரணி தலைவரும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் அடுத்து வரும் தேர்தலில் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன் என்றும் சவுக்கு சங்கர் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com