கேட்பதற்கு முன் சற்றே சிந்திப்போம்!

கேட்பதற்கு முன் சற்றே சிந்திப்போம்!

ன், எப்படி, எதற்கு என்று கேள்விகள் எழுப்பி எந்த விஷயத்தையும் தெளிவுறத் தெரிந்து கொள்வது நம் அறிவை விசாலப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. அதே சமயம் நமக்குத் துளியும் பயன்தராத, பிறரிடம் வம்பு வளர்க்க கேட்கும் கேள்விகளால் நேரம் விரயமாவது மட்டுமல்ல, பதில் சொல்பவரின் மனதையும் காயப்படுத்துகிறோம் என்பது கசப்பான நிஜம். 

‘’என்ன உங்க பொண்ணு காலேஜ் படிப்பை முடிச்சு ஒரு வருஷம் ஆகப்போகுது. இன்னும் மாப்பிள்ளை பாக்கலையா? எப்ப கல்யாணம் பண்ணப் போறீங்க?’’ என்று ஒரு இளம் பெண்ணின் பெற்றோரிடம் கேள்வி எழுப்புவதும், திருமணமாகி சுமார் ஆறுமாதமோ, ஒரு வருடமோ ஆகியிருக்கும் தம்பதிகளிடம், ‘’ஏதாவது விசேஷம் இல்லையா?’’ என்று கேட்பதும் எவ்வளவு அநாகரிகம், அவை அவர்களை எவ்வளவு தர்மசங்கடப்படுத்தும்  என்று சற்றும் நினைத்துப் பார்ப்பதில்லை பலர்.

‘எனக்கு அவர்கள் மீது தனிப்பட்ட அக்கறை, அதனால் தான் இவ்வாறு கேட்கிறேன்’ என யாராவது சொல்வாரானால், அது முழுப் பொய். பிறரின் அந்தரங்க விஷயங்களை பற்றித் தெரிந்து கொள்வதில் என்ன அக்கறை இருக்கமுடியும்? தன் பெண்ணின் திருமணம் பற்றி பெற்றவர்களுக்கு எத்தனையோ கனவுகள் இருக்கும். அந்தப் பெண்ணிற்கும் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். அதை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. திருமணத்திற்கு செலவு செய்ய ஒரு பெரிய பட்ஜெட்டிற்கு அவர்கள் தயாராக வேண்டும். பெண்ணும் மனதளவில் தயாராக வேண்டும். இது ஆண்களுக்கும் பொருந்தும்.

அதேபோல பிள்ளைப்பேறு பற்றி சம்மந்தப்பட்ட பெற்றோர் தீர்மானிக்கட்டும். ஏற்கனவே தனக்கு பிள்ளைபேறு தள்ளிப் போகிறதே என்று கவலையில் இருப்போரிடம், இன்னும் குழந்தை இல்லையா? என்று கேட்டு மனதைப் புண்படுத்த வேண்டுமா?

தற்போதைய சூழலில் மணவிலக்குப் பெற்று தன் பிள்ளையுடன் தனித்து வாழும் ஒற்றைப் பெற்றோர் அதிகரித்து வருகின்றனர். பொது இடங்களில் அவர்களின் பிள்ளைகளிடம் அப்பா அம்மா குறித்துக் கேட்டு சங்கடத்தில் ஆழ்த்தவேண்டாமே. அந்தப் பிள்ளைகள் மனம் என்ன பாடுபடும் என சற்றே யோசித்தால், தேவையற்ற கேள்விகளை சுலபமாகத் தவிர்த்து விடலாம்.

அதேபோல ஒருவரின் வயதையும், சம்பளத்தையும் பற்றிக் கேட்பது மிகவும் அநாகரிகம் என்று பெரும்பான்மையான வர்கள் உணர்வதில்லை. இதில் மெத்தப்படித்தவர்களும் விதிவிலக்கில்லை. அப்படிக் கேட்பவர்களுக்கு மௌனத்தை பதிலாகத் தருவது தான் சிறந்தது.

எனக்குத் தெரிந்த இளைஞர் ஒருவர் பொறியியல் படித்து முடித்து விட்டு, நல்ல வேலை கிடைக்கும் வரை உள்ளூரில் இருக்கும் ஒரு தொழிற்சாலையில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கிறார். ஒரு திருமண விஷேசத்தின் போது அவருடைய  உறவினர் பெண்மணி ( அறுபது வயதானவர்) அவரிடம் சம்பளம் பற்றித் துளைத்தெடுத்துக் கேட்க, அவரும் சொல்லியிருக்கிறார். ‘’சே! இத்தனை கம்மியான சம்பளமா? நான்லாம் ஒரு மாசத்துக்கு எவ்வளவு ரூபாய்க்கு மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடறேன் தெரியுமா? அந்தளவு கூட உன் சம்பளம் இல்லையே?’’ என்றிருக்கிறார். பலரும் கூடியுள்ள இடத்தில        

கொஞ்சமும் இங்கிதமின்றி அவர் பேச, அந்த இளைஞரோ ‘’ அப்படியே மத்தவங்க மனசு புண்படாம பேசறதுக்கும் எதாவது மாத்திரை இருந்தா வாங்கி சாப்பிடுங்க’’என்று சிரித்துகொண்டே பதில் சொன்னாராம்.

பிறர் அணியும் உடை பற்றி விமர்சனம் செய்வதும் அநாகரிகமான செயலே. ‘’ ஏன் சார், இந்த வயசுல போய் ஜீன்ஸ், டீ ஷர்ட் போட்ருக்கீங்க’ என நடுத்தர வயது ஆணிடமோ, ‘’ இன்னும் டிசைன் வெச்ச பிளவுஸ் போடறீங்க’’ என ஐம்பதைத் தாண்டிய பெண்ணிடமோ கேட்பது அபத்தம். ஆடை  அணிவது அவரவர் விருப்பம். இதில் போய் மூக்கை நுழைக்கலாமா? அவரவர் வீட்டுப் பிரச்சினைகளே ஆயிரம் இருக்க அடுத்தவர் பற்றி ஏன் வீண் கவலை? இத்தகைய ஆசாமிகளை சுலபமாக ஒதுக்கித்தள்ளி விடும் இந்தச் சமூகம்.

நவீன உலகில், அறிவியல் முன்னேற்றத்தால் பலவித வசதிகளை அனுபவித்து வருகிறோம். எந்நேரமும் தங்கு தடையின்றி இணையதள சேவையுடன் கூடிய  ஸ்மார்ட் போன், பல்வேறு சேனல்களுடன் கூடிய டி,வி, வீடு கூட்டித் துடைக்கக் கூட சாதனங்கள், நேரத்தை மிச்சப்படுத்தும் விரைவு ரயில் சேவைகள் என்று பல புதுமைகள். ஆனால மனமும், சிந்தனையும் மாற்றம் பெறாமல் இன்னும் பழைய பஞ்சாங்கமாக இருப்பது நல்லதல்லவே? நம் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது போல், மனதின் தரமும் உயரட்டும். அதில் நற்சிந்தனைகளும், நல்வார்த்தைகளும் வெளிவரட்டும். பிறர் முகமும், அகமும் மலரும் கேள்விகளை மட்டும் கேட்கப் பழகுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com