மம்தாவின் சென்னை விசிட் : மர்மம் என்ன?

மம்தாவின் சென்னை விசிட் : மர்மம் என்ன?

துணை ஜனாதிபதி ஜகதீப் ஜன்கர், மே. வங்காளத்தின் கவர்னராக இருந்தபோது, அவருக்கும், முதலமைச்சர் மம்தாவுக்கும் ஏழாம் பொருத்தம்தான். இருவரும் தி.மு.க-அ.தி.மு.க. கணக்காய் அன்றாடம் மோதல்தான். அவர், துணை ஜனாதிபதி ஆனதும், மணிப்பூர் கவர்னரான நம்ம ஊர் இல.கணேசன், மே. வங்க ஆளுனராகக் கூடுதல் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அதன்பின் மே. வங்காளத்தில் கவர்னர்-முதலமைச்சர் மோதல் ஏதுமின்றி அமைதியான சூழல் ஏற்பட்டிருக்கிறது. அது மட்டுமில்லை, சென்னைக்கு வந்து ஆளுனரின் அண்ணன் இல. கோபாலனது 80வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார்.

“மம்தாவிடம் இந்த மாற்றத்துக்கு பின்னணி என்ன?” என்று தான் ஒரு மாநில கவர்னர் என்ற பந்தா துளியும் இல்லாமல், தனது அண்ணனின் சதாபிஷேக விழாவிற்கு வருகை தந்த விருந்தினர்களை, நண்பர்களை வரவேற்று, உபசரிப்பதில் பிஸியாக இருந்த மணிப்பூர் கவர்னர் இல. கணேசன் அவரிடமே கேட்டேன்.

சிரித்தபடியே, “அது எனக்கே ஒரு விதத்தில் ஆச்சர்யம்தான்!” என்றார்.

மேலும், “முதலமைச்சர் மம்தா பானர்ஜி, துர்கா பூஜை சமயத்தில் தன் வீட்டில் நடந்த பூஜைக்கு என்னை அழைத்திருந்தார். அந்த பூஜையில் நான் கலந்துகொண்டேன். அப்போது, என் அண்ணனின் 80வது பிறந்தநாள் விழா குறித்து சொல்லி, அதற்கான அழைப்பிதழை அவரிடம் கொடுத்தேன். “நிகழ்ச்சிக்கு வருகிறேன்” என்றார்.

“ஒரு சம்பிரதாயத்துக்காக அப்படிச் சொல்லுகிறார் என்றுதான் நான் அப்போது நினைத்தேன். ஆனால், அடுத்த சில நாட்களில் அவர் எங்கள் இல்ல நிகழ்ச்சிக்காக சென்னை வருவதாக செய்தி வெளியானது. உள்ளபடியே எனக்கு இனிய ஆச்சரியம்தான்! என் அழைப்பினை ஏற்று, சென்னை வந்து, எங்கள் இல்ல நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி! மே. வங்க முதல்வருக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றி!” என்று குறிப்பிட்டார் மே. வங்காளம் மற்றும் மணிப்பூர் கவர்னர் இல. கணேசன்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com