அறுந்து விழுந்த பாலம்
அறுந்து விழுந்த பாலம்

மோபிர் தொங்குபால விபத்து – நடந்தது என்ன ?

சிறப்புக் கட்டுரை

ண்மையில் குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் மீது இருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த பாலம் நூற்றாண்டு பழைமையானது. மோர்பியின் அரச காலத்தை நினைவூட்டும் விதமாக இந்த பாலம் இருந்தது.

மோர்பியின் மன்னர் சர் வாஜி தாகூர், நவீன ஐரோப்பிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பாலத்தைக் கட்டினார். இதுவொரு கலை மற்றும் தொழில்நுட்ப அதிசயம் என்று அழைக்கப்பட்டது. இந்த பாலம், 1879ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதியன்று மும்பையின் அப்போதைய கவர்னர் ரிச்சர்ட் டெம்பிளால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த பாலம் 1.25 மீட்டர் அகலமும் 233 மீட்டர் நீளமும் கொண்டது. மச்சு ஆற்றில் உள்ள தர்பார்கர் அரண்மனை மற்றும் லக்திர்ஜி பொறியியல் கல்லூரியை இணைக்கிறது. மோர்பி நகரில் உள்ள மச்சு நதியின் மீது உள்ள இந்த பாலம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கினர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகளாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தீபாவளிக்குப் பிறகு குஜராத்தி புத்தாண்டு அன்றுதான் இந்தப் புதிய பாலம் திறக்கப்பட்டது. இந்த ஊஞ்சல் பாலம் நவீன ஐரோப்பிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோர்பிக்கு தனித்துவமான அடையாளத்தை வழங்கும் நோக்கத்துடன் கட்டப்பட்டிருக்கும் இந்த பாலம், பொறியியலின் அதிசயம் என்று சொல்லுகிறது மோர்பி நகரின் அதிகார பூர்வ இணைய தளம்.

தீபாவளி விடுமுறை என்பதால் விபத்து நடந்த மாலையில் பாலத்தில் அதிகளவிலான மக்கள் இருந்தனர். அண்மையில் புதிபிக்கப்பட்டு மக்களுக்கு திறந்து விடப்பட்ட பாலத்தை காண குழந்தைகள் மற்றும் பல சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்"

பகுதியளவு நீரில் மூழ்கிய தொங்கு பாலத்தில் மக்கள் உயிர் பயத்துடன் தொங்கிக்கொண்டிருப்பதை லைவ்வாக காணொளிகளில் பார்த்த தேசமே பதறியது.

"ஒருவர் மீது ஒருவர் என அனைவரும் கீழே விழுந்தனர். அதிக கூட்டம் இருந்ததால் பாலம் அறுந்து விழுந்தது," என அவர் தெரிவித்தார்.

ஏன் இந்த விபத்து ?

அக்டோபர் 30 அன்று விடுமுறையாதலால் பாலத்தை பார்வையிட பொதுமக்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். பாலத்தில் சிலர், குதித்தும், ஓடியும் விளையாடியதால் பாரம் தாங்காமல் பாலம் ஆடத் தொடங்கியுள்ளது. அதனால் மக்களும் ஆடத் தொடங்கியதால் பாலம் அறுந்து விழுந்துள்ளது. ஒரே நேரத்தி அதிக பட்சம் 140 பேர் கனத்தை தாங்கக்கூடிய இந்த பாலத்தில் அன்று அனுமதிக்கப்பட்டவர்கள் 400க்கும் மேல். அன்று மாலை விற்கப்பட்டிருக்கும் டிக்கெட்கள் 500க்கும் மேல்.

பாலத்தின் புனரமைப்புக்குப் பின் அண்மையில் திறக்கப்பட்டிருக்கும் இந்தப் பாலத்தின் பணிகள், கட்டட அல்லது பால வேலைகளுக்கு சற்றும் தொடர்பில்லாத மின்னணு நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் போயிருக்கிறது. அவர்கள் வேறு ஒரு சிறு அல்லது குறு நிறுவனத்துக்கு உள் ஒப்பந்தம் போட்டு வேலையை முடித்திருக்கிறார்கள், உறுதித்தன்மைக்கு சான்றிதழ் வாங்காமலேயே சோதனைகள் செய்யாமலேயே பாலம் மக்களுக்கு திறந்து விடப்பட்டிருக்கிறது.

ஒப்பந்தத்தில் ஏதோ ஊழல் நடந்திருக்கிறது. தொங்கு பாலத்தின் கேபிள்களை புதுபிக்காமல் இருப்பதை பாலிஷ் செய்து மாட்டியிருக்கிறார்கள் என்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா.

அதுவுமின்றி பாலம் திறக்கப்பட்டதில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே போய் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அதன் கொள்ளளவே 150 பேர்தான், அதாவது சகட்டு மேனிக்கு மக்கள் போவதை கட்டுப்படுத்தாமல் அலட்சியம் காட்டி இருக்கிறார்கள்.

இதுவரை இந்தியாவில் நடந்த நதி விபத்துகளில் மிக மோசமானது இது.

புஜ்ஜில் இருந்து 50 கடற்படை வீரர்களும், ஜாம்நகரில் இருந்து 60 கடற்படை வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 33 ஆம்புலன்ஸ்கள், 7 தீயணைப்பு வாகனங்கள், ராஜ்கோட் மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்டத்தின் கிராமப்புறங்களில் இருந்து 30 மருத்துவர்கள், துணை மருத்துவ பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் இன்னும் பலரை கண்டுபிடிக்க முடியவில்லை. நதியின் ஆழ்த்திலும் அடியில் சகதிக்குள்ளும் சிக்கியிருக்கும் சடலங்களை மீட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

குஜராத் பயணத்தில் இருந்த பிரதமர் மோடி, விபத்தில் தப்பி, மருத்துவமனையிருப்பவர்களை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.

 மீட்புக் பணியில்...
மீட்புக் பணியில்...

விபத்துகளும் தேர்தல்களும்

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தன. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜியும் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 21 பேர் உயிரிழந்தனர். சுமார் 80 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தின்போது பிரதமர் மோடி பேசுகையில்,‘‘இதுபோன்று பாலம் இடிந்து விழுந்தால் இந்த மக்கள் என்ன சொல்வார்கள்? இது கடவுளின் செயல் என்று கூறுவார்கள். தீதியே(மம்தா பானர்ஜி) கடவுளின் செயல் இல்லை. இது மோசடியின் செயல். இது மோசடியின் விளைவு. தேர்தல் நேரத்தில் இதுபோன்று நடந்தது நிச்சயமாக கடவுளின் செயல் தான் மற்றும் நீங்கள் எப்படிப்பட்ட ஆட்சியை நடத்துகிறீர்கள் என்று மக்கள் தெரிந்து கொள்ளுவதற்காக நடந்த நிகழ்வு. இன்று பாலம் இடிந்து விழுந்தது நாளை மேற்குவங்கம் முடிக்கப்பட்டுவிடும் என்ற செய்தி கடவுளிடம் இருந்து மக்களுக்கு வந்துள்ளது”என்றார்

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com