கவியோகி சுத்தானந்த பாரதியார் பிறந்த தினம் -  மே-11

கவியோகி சுத்தானந்த பாரதியார் பிறந்த தினம் - மே-11

‘’நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழில் ஒழுகும்” என்று துவங்கும் நமது தமிழ்த்தாய் வாழ்த்து பற்றி எல்லோருக்கும் தெரியும். அதை எழுதியவர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்கள்.

சிறந்த கவியோகியும், பன்மொழிப் புலவரும், ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் சிறந்து விளங்கியவருமான சுத்தானந்த பாரதியார் அவர்களும் அருமையான தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒன்றை இயற்றியிருக்கிறார்.

‘’காது ஒளிரும் குண்டலமும்
கைக்கு வளையாபதியும்
கருணை மார்பின் மீது ஒளிர் சிந்தாமணியும்
மெல்லிடையில் மேகலையும்
சிலம்பு ஆர் இன்பப் போது ஒளிர் பூந்தாமரையும்
பொன்முடிச் சூளாமணியும்
பொலியச் சூடி
நீதி ஒளிர் செங்கோலாய் திருக்குறளைத்
தாங்கும் தமிழ் நீடு வாழ்க!’’

சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி என்னும் ஐம்பெரும் காப்பியங்களும், சூளாமணி முதலிய ஐஞ்சிறு காப்பியங்களும், உலகப்புகழ் பெற்ற புகழ் திருக்குறளும் தமிழன்னைக்கு அணிகலன்களாக அமைந்திருப்பதை இந்தப்பாடல் சொல்கிறது.

உலகப் பொதுமறையாம் திருக்குறளை அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர் சுத்தானந்த பாரதியார் அவர்கள். 1968- ம் ஆண்டு நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், அப்புத்தகம் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த பதிப்புக் கழகத்தாரால் வெளியிடப்பட்டது.

1984 ல் தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகமும் நிறுவிய மாமன்னன் இராஜராஜன் பெயரால் வழங்கப்படும் படைப்பிலக்கிய விருதை இவரது ‘பாரத சக்தி’ நூலுக்கு முதன் முதலில் பெற்றவர் கவியோகி சுத்தானந்த பாரதி.

சுப்பிரமணிய பாரதியைப் போலவே, இவரும் பல மொழிகள் கற்றுத்தேர்ந்து, தேசியச் சிந்தனைகளைத் தூண்டும் பல பாடல்களை இயற்றியுள்ளார். தமிழ் தவிர சமஸ்கிருதம், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளிலும் நூல்கள் இயற்றியுள்ளார். சிறந்த மொழிபெயர்ப்பாளர். கவிதைகள், உரைநடை, பயணநூல், இலக்கணம், கீர்த்தனைகள், நாடகம், திறனாய்வு, சிறுகதை, அறிவியல், வாழ்க்கை வரலாறு ஆகிய பல துறைகளிலும் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதிக் குவித்தார்.

திலகர், காந்திஜி, நேதாஜி, உ.வே.சு. ஐயர் ஆகியோருடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார். கிராமப் பணி, கதர்ப்பணி, மது ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் மறுவாழ்வு ஆகிய சீர்திருத்தப் பணிகளையும் மேற்கொண்டார். யோகி அரவிந்தரின் தொடர்பால் இவரது வாழ்வில் புதிய திருப்பம் ஏற்பட்டது. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரித்தது.

இவர் புதுவை அரவிந்தர்ஆசிரமத்தில் இருபது ஆண்டு காலங்கள் மவுன விரதம் இருந்து வந்தார். சமய ஒற்றுமையைப் போற்றியவர். கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய சமய நூல்களைக் கற்று அவை காட்டும் நெறிகளையும் பின்பற்றி வந்தவர். ‘ஒரே கடவுள், ஒரே உலகம், ஒரே ஆன்மநேயர் நாம்’ என்பதை உலகுக்கு உணர்த்தியவர்.

உலகம் முழுவதும் ஆன்மிகப் பயணங்கள் மேற்கொண்டார். சோவியத் யூனியன், பிரான்ஸ், சீனா, ஜப்பான், அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளுக்கும் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.

‘‘அகவாழ்வு சிறந்திட யோகம்; புறவாழ்வு சிறந்திட அறிவியல்

இவை இரண்டும் இணைந்தால், மனித வாழ்வு அமரத்துவம் பெறும்; மண்ணில் விண்ணரசு தோன்றும்’ என்பதுதான் இவர் உலகுக்கு அளித்த செய்தி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com