மூத்த வக்கீல்களிடம் மரியாதை செலுத்துங்கள்

மனித வாழ்வில் பிரச்னைகளுக்கு எல்லையே இல்லை. உடலுக்குப் பிரச்னை என்றால் மருத்துவரிடம் செல்வோம். மனதுக்கு பிரச்னை என்றால் நல்ல மனநல ஆலோசகரை நடுவோம். வாழ்க்கையில் பிரச்னை என்றால் யாருமறியாத கடவுளிடம் கவலைகளைக் கொட்டித் தீர்ப்போம். ஆனால், இவர்களை எல்லாம் தாண்டி பல்வேறு மனிதர்களால் மனிதனுக்கு நேரும் வாழ்வியல் பிரச்னைகளுக்கு மனிதனே வகுத்த சட்டங்களின்படி தீர்வு காண நமக்கு உதவுபவர்கள் வக்கீல்களும் தீர்ப்பு சொல்லும் நீதிபதிகளும்தான். அந்த வகையில், நீதியின் தயவுடன் தங்கள் கவலைகளுக்கு நிவாரணம் தரும் வக்கீல்களே பல பேருக்குக் கண்கண்ட தெய்வங்களாக உள்ளனர். பொறுப்பு மிகுந்த அவர்கள் தங்கள் துறையில் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் அவர்கள்.

சேலத்தைச் சேர்ந்த வக்கீல் சங்கத்தின் முன்னாள் தலைவர் மறைந்த பொன்னுசாமியின் உருவப்பட திறப்பு விழா சேலம் 5 ரோட்டில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் (18-12-22) அன்று நடந்தது. அதில் சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் ரமேஷ், இளந்திரையன், தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவர் பாஸ்கரன், ஓய்வு பெற்ற ஹைகோர்ட் நீதிபதி ஜெகதீசன் கலந்துகொண்டு முத்துசாமியின் உருவப்படத்தை திறந்து வைத்தனர்.
அப்போது பேசிய இளந்திரையன் “வக்கீல்கள் நேர்மையாகவும் பாரம்பர்யத்தைக் காக்கும் வகையிலும் பணிபுரிய வேண்டும். அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்றவை ஒவ்வொரு வக்கிலீன் கடமை யாகும். நன்னடத்தை பணியில் மட்டுமின்றி பொது வாழ்விலும் சமூகத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும்.
வக்கீல் தொழிலில் என்றுமே அனுபவம் மிக்க மூத்த வக்கீல்களுக்கு மதிப்பு அதிகம் என்பதைப் புரிந்து அவர்களிடம் மரியாதை செலுத்தி அவர்களின் அனுபவங் களைக் கேட்டு கற்றுக்கொள்ள இளம் வக்கீல்கள் முன்வரவேண்டும்“ என்றார்.
இவரைத் தொடர்ந்து பேசிய ஹைகோர்ட் நீதிபதி ரமேஷ் பேசும்போது “இளம் வக்கீல்கள் நீதிமன்ற மாண்பைக் காக்கும் வகையில் செயல்பட வேண்டும். வழக்குகளில் ஆஜராகும்போது வழக்கின் முழுமையான தன்மையை அறிந்து புள்ளி விவரங்களைச் சரியாகச் சேகரித்து செயல்பட வேண்டும்“ என்றார்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இளம் வக்கீல்களுக்கு இவர்களது ஆலோசனைகள் அவர்கள் தொழிலில் முன்னேற பெரிதும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பணத்துக்காக மட்டுமின்றி மனங்களைப் படித்து தங்களை நம்பி நாடி வருவோரின் பிரச்னைகளைச் சட்டத்தின் மூலம் தீர்த்து வைக்கும் வக்கீல்கள் அனைவரும் தங்களிடம் வரும் வழக்கின் உண்மைத் தன்மைகளை ஆராய்ந்து மூத்தவர்களின் வழிகாட்டுதல் பெற்று நேர்மையுடன் வழக்கைக் கையாண்டால் பெரும்பாலான நிரபராதிகள் பாதிக்கப்பட மாட்டார்கள். அதே சமயம் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளினால் குற்றவாளிகள் தப்பிக்கவும் மாட்டார்கள் என்பதே நம் போன்ற பொதுமக்களின் கருத்து. என்ன அப்படித்தானே?