கலகத் தலைவன் சத்ய பால் மாலிக்!

கலகத் தலைவன் சத்ய பால் மாலிக்!

“அதிகாரம் வரும்...போகும்... பிரதமர் மோடி இதனை புரிந்துகொள்ள வேண்டும். அக்னிபாத் ராணுவ ஆள்சேர்ப்பு திட்டம் ராணுவத்தை பலவீனப்படுத்தும். பிரதமர் பதவி நிரந்தரம் இல்லை, அப்பதவியில் இருந்து ஒருநாள் விலக வேண்டுமென்பதை பிரதமர் மோடி புரிந்துகொள்ள வேண்டும். இனிவரும் நாட்களில் நாட்டில் பல தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட தொடங்குவார்கள். நாட்டில் பல வகையான போராட்டங்கள் தொடங்கும் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். விவசாயிகளின் போராட்டம் விரைவில் தொடங்கும், இளைஞர்களின் இயக்கமும் தொடங்கும்” இதைச் சொன்னவர் எதிர்கட்சி தலைவர்  இல்லை. பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும்  மேகாலயா மாநிலத்தின் முன்னாள் கவர்னராகவும் பதவி வகித்த சத்யபால் மாலிக்.

சில நாட்கள் முன்னர் விவசாயிகள் பிரச்னை குறித்து பிரதமர் மோடியை அண்மையில் சந்தித்துப் பேசியபோது அவர் ஆணவத்துடன் பதிலளித்ததாக சத்யபால் மாலிக் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

புதிய வேளாண் சட்டங்கள், அக்னிபாத் திட்டம், கோவா பா.ஜ.க. அரசின் ஊழல்கள் எனப் பல்வேறு விவகாரங்களில் பா.ஜ.க அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக நின்றவர் மாலிக். தற்போது மீண்டும்  ராஜஸ்தான் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பேசம்போது பிரதம் போடியைச் சீண்டியிருக்கிறார்.

மேகாலயா மாநிலத்தின் முன்னாள் கவர்னர் சத்தியபால் மாலிக்
மேகாலயா மாநிலத்தின் முன்னாள் கவர்னர் சத்தியபால் மாலிக்

சத்தியபால் மாலிக் இப்படி அதிரடிகள் கொடுப்பது புதிதல்ல. முன்னர் கோவாவில் பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் மிகுந்து விட்டது  என்றார். கடந்த ஆண்டு ஜே & கே கவர்னராக இருந்தபோது, “அம்பானி” மற்றும் “ஆர்எஸ்எஸ் செயல்பாட்டாளர்” ஒருவர் தொடர்பான இரண்டு கோப்புகளை பெற்றதாகவும், இது தொடர்பாக செயலாளர் ஒருவர், “இவை ஒரு மோசமான ஒப்பந்தங்கள், ஆனால் தலா 150 கோடி பெறலாம் என்று என்னிடம் கூறினார். உடனே, ஊழலில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது என்று என்னிடம் கூறிய பிரதமர். நரேந்திர மோடியிடம் இது குறித்து நான் எச்சரித்தேன்” என்று ராஜஸ்தானில் ஜுன்ஜுனு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில்  பேசும் போதும்  கூறினார்.

இவர் ஆளுநராக எந்த மாநிலத்திலும் பதவிக்காலம் முழுவதும்  இருந்ததில்லை. அவ்வப்போது இது போல அதிரடி பேச்சுகளுக்கு பின்னர் மற்றொரு மாநிலத்துக்கு மாற்றபடுவார். இப்போது எந்த அரசுப் பதவியிலும் இல்லை. ஆனாலும்  இவரது இம்மாதிரியான அதிரடி பேச்சுக்கள் தொடர்கிறது. கட்சி மேலிடம் இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருப்பதின் ரகசியம் அமித்ஷாவுக்கும் மோடிக்கும் மட்டுமே தெரியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com