உலக சிட்டுக்குருவிகள் தினம் - மார்ச் 20

உலக சிட்டுக்குருவிகள் தினம் - மார்ச் 20

அன்று:

னிதர்களின் நீண்டகாலத் துணையான சிட்டுக் குருவிகளை முன்பெல்லாம் வீட்டு முற்றம், கொல்லைப்புற மரங்கள், வயல்வெளிகள் என எங்கும் காணலாம்.  அவை வீடுகளில் உள்ள பரண், மாடம், விட்டம் மற்றும் ஓடுகளின் இடுக்குகளில் உள்ள இடைவெளிகளில் கூடு கட்டி வசிக்கும்.  சிட்டுக்குருவி வீடுகளில் கூடுகட்டினால், அக்குடும்பத்தின் தலைமுறைகள் வாழையடி வாழையாக தழைத்தோங்கும் என்கிற அசாத்திய நம்பிக்கை  மக்களின் மனங்களில் ஆழமாக வேரூன்றி நின்றதால் தான் வீடுகளில்  குருவி கூடு கட்டினால், அவற்றை கலைக்கமாட்டார்கள்.

இன்று:

னால் தற்போதைய காலகட்டத்தில், சிட்டுக் குருவிகளைப் பார்ப்பதே அரிதான விஷயமாகி விட்டது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. சிட்டுக்குருவியானது தன் இனப் பெருக்கத்துக்கான வாழ்வியல் சூழலை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.  கடந்த 20 ஆண்டுகளில் சிட்டுக்குருவிகளின் இனங்களில் 60 சதவிகிதம் அழிந்து விட்டது என்கிற தகவல்கள் புள்ளிவிவரங்களுடன் வெளியாகி அதிர்ச்சியை தருகின்றன. மேலும் மனிதர்கள் மேற்கொள்ளும் இயற்கைக்கு முரணான சுற்றுச்சூழல் நடவடிக்கைகளும் சிட்டுக்குருவியின் அழிவுப் பாதைக்கு அடித்தளமிட்டுள்ளது.

உலக சிட்டுக்குருவி தினம்:

சிட்டுக்குருவி இனத்தைப் பாதுகாக்கவேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு, 2010ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதியை உலக சிட்டுக்குருவி தினமாக ஐ.நா. அங்கீகரித்தது. நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடிவு செய்தது.

சிட்டுக்குருவிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்:

ன்றைய காலகட்டத்தில் நகர்ப் புறங்களிலும், மாநகரங்களிலும் கான்கிரீட் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. இத்தகைய குடியிருப்புகளில் வெளிக்காற்றானது வீட்டுக்குள் வராத வகையில் குளிர்சாதன வசதியைப் பெரும்பாலோர் பயன்படுத்துவதால், சிட்டுக்குருவிகள் கூடுகட்டி குஞ்சு பொரிக்க போதிய வசதிகள் இல்லாமல் போய்விட்டன.

எரிவாயுக்களில்இருந்து வெளியேறும், மெத்தைல் நைத்திரேட் எனும்  வேதியியல் கழிவுப் புகையால், காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக் குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன.

மேலும் நகரங்களில் பலசரக்கு கடைகளுக்கு பதிலாக, பல்பொருள் அங்காடிகள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு நெகிழிப் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை. குருவிகளுக்கு இதனால் உணவு கிடைக்காமல் போகிறது. வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு  பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுவதாலும், உணவு இல்லாமல் குருவிகள் அழிகின்றன.

தற்போது கிராமங்களில் கூட அலைபேசிக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு அவற்றிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு, குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும், கருவளர்ச்சி அடையாமல் வீணாகி, அதனால் சிட்டுக்குருவி இனமானது நாளுக்குநாள் அழிந்து வருகின்றது. 13 ஆண்டுகள் ஆயுளைக் கொண்ட சிட்டுக்குருவியின் வாழ்வு ஐந்து ஆண்டுகளுக்குள் முடிந்து விடுகின்றன.

பறவையியலார் டாக்டர் சலீம் அலியைக் கவர்ந்த சிட்டுக்குருவிகள்:

லகம் போற்றும் பறவையியலார் டாக்டர் சலீம் அலி சிறுவனாக இருந்தபோது தனது வீட்டில், தன் கூட்டில் இருந்து கீழே விழுந்த சிட்டுக்குருவிக் குஞ்சுகளின் அழகில் மயங்கி, பின்னாளில் தன் வாழ்நாளையே பறவைகள் ஆராய்ச்சிக்காக அர்ப்பணித்தார். அந்தப் பறவையியல் மாமேதையை இந்தியாவுக்குத் தந்ததும், உலகுக்கு அறிமுகப்படுத்தியதும் இந்தச் சிட்டுக்குருவிகள்தான்.

டாக்டர் சலீம் அலி
டாக்டர் சலீம் அலி

சிட்டுக்குருவிகளின் அவசியத்தேவை:

சிட்டுக்குருவிகள் உணவுச் சங்கிலியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பணியில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை எந்தச் செலவுமில்லாமல், பயிர்களுக்குச் சேதம் ஏற்படுத்தாத வகையில், பூச்சிகளின் பெருக்கத்தை இயற்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. ஆனால், மனிதர்கள் தான் இந்த இயற்கை சுழற்சியை புரிந்துகொள்ளாமல் ரசாயன பூச்சிக்கொல்லிகள்தான் ஒரே தீர்வு என தவறாகப் புரிந்துகொண்டு  மண்ணையும், வாழ்வையும் நஞ்சாக்கி, அழகிய அப்பாவி  சிட்டுக்குருவிகளை அழித்து வருகின்றனர்.

உலக சிட்டுக்குருவி தினம்  2023ம் ஆண்டுக்கான கருப்பொருள், ‘நான் சிட்டுக்குருவிகளை நேசிக்கிறேன்’ என்பதாகும் (“I Love Sparrows”).

நேசிப்போம்: சிட்டுக்குருவிகளைக் காப்போம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com