கௌதம் ராம் ; தேவவிரதன்
புகைப்படங்கள் : ஸ்ரீஹரி
ஐம்பத்தைந்து ஆண்டுகள் மட்டுமே இந்த உலகில் வாழ்ந்தாலும் இன்றும் தமிழர்களின் நெஞ்சங்களில் அவர் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் மறைந்து 70 ஆண்டுகள் ஆன பின்னும் தமிழுலகம் அவரைப் பெருமையோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
பொன்னியின் புதல்வர் அமரர் கல்கிகிருஷ்ணமூர்த்தியின் 124வது பிறந்த நாளையொட்டி (செப்.9) கல்கி கிருஷ்ண மூர்த்தி நினைவு அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்ட இளம் கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி, கல்கி அவர்கள் போற்றிய கலைகளும் இலக்கியமும் சங்கமிக்கும் இனிய விழாவாக அமைந்தது.
இவ்வாண்டு கல்கி நினைவு அறக்கட்டளை, கல்கி விருது வழங்கும் நிகழ்வினை ஹம்சத்வனி சபாவுடன் இணைந்து நடத்தியது.
விருது வழங்கும் விழா குமாரி வியோமினியின் இனிமையான குரலில் ஒலித்த இறை வணக்கத்துடன் தொடங்கியது.
ஹம்சத்துவனியின் ஸ்தாபகர் ராமசந்திரன் அவர்களின் நூற்றாண்டு என்ற கூடுதல் சிறப்போடு இந்த நிகழ்ச்சி நடந்தது. ராமச்சந்திரன் குறித்தும், அவருக்குப் பின் இந்த சபாவை திறம்பட நடத்திவரும் அவரது மகன் குறித்தும் பேசி வரவேற்புரை வழங்கிய அறக்கட்டளையின் அறங்காவலர் எஸ். சந்திர மௌலி, ஹம்சத்வனியுடன் சேர்ந்து இந்த விழாவினை நடத்துவதில் பெருமிதம் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், கவிஞர், ஆன்மிகச் சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்ட பண்பாளர் திருப்பூர் கிருஷ்ணன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துச் சிறப்பித்தார். அன்றைய விழாவில் விருது பெற்ற கலைஞர்கள், அமரர் கல்கி அவர்களே நேரில் வந்து விருது அளிப்பதாக எண்ணி மகிழ்ந்தார்கள் என்றால் மிகையாகாது. காரணம், அமரர் கல்கியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக கலாக்ஷேத்ராவில் கௌரி ராம்நாராயண் இயக்கத்தில் அறங்கேறிய ‘காற்றினிலே வரும் கீதம்” நிகழ்ச்சியில் அமரர் கல்கி பாத்திரத்தில் மேடையில் தோன்றியவர் திருப்பூர் கிருஷ்ணன்தான்!
விருது பெற்ற கலைஞர்களுக்கான விருதுப் பத்திரத்தை அறக்கட்டளை அறங்காவலர் லக்ஷ்மி நடராஜன் வாசிக்க, திருப்பூர் கிருஷ்ணன் விருதுகளை வழங்கினார்.
இவ்வாண்டு கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு விருது இரண்டு இளம் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது. ரமணா பாலச்சந்திரன், மற்றும் விஜய் பி நடேசன். ரமணா பாலச்சந்திரன் வீணை இசைக் கலைஞர். இவர் ஒரு மழலை மேதை (Child Prodigy). இவருடைய தந்தை பாலச்சந்திரன், தாய் சரண்யா இருவருமே இசைக் கலைஞர்கள்தான்.
ரமணா சிறு வயதிலேயே ராகங்களைக் கண்டுபிடிக்கும் திறமை பெற்றிருந்தார். அவரது திறனை அப்போதே கண்டறிந்த அவரது பெற்றோர் அவருக்கு முறையான பயிற்சியளித்து, ஊக்குவித்து, மிகுந்த கவனத்துடன் மெருகேற்றி அவரை ஒரு தேர்ச்சி பெற்ற வித்வானாக மிளிரச் செய்தனர். இன்று அவர் பிரபல வீணை நட்சத்திரமாக இசை உலகில் சுடர் விட்டுப் பிரகாசிக்கிறார்.
16 வயதிலேயே அகில இந்திய வானொலியின் ஏ கிரேடு கலைஞராகத் தேர்வு செய்யப்பட்டவர். சென்னை மியூசிக் அகாடமி அதற்குரிய விதிமுறையான வயதுக் கட்டுப்பாட்டைத் தளர்த்தி இவருக்கு கச்சேரி செய்ய அழைப்பு விடுத்தது. இவரது வீணை இசைக்கு அமெரிக்காவிலும் ஏராளமான ரசிகர்கர்கள் உண்டு!
விஜய் நடேசனுக்கு மிருதங்கம் பரிச்சயம் ஆனது அவருடைய ஏழாவது வயதில். மும்பையில் மிருதங்க ஆசிரியர் நந்தகுமாரிடம் பயிலத் தொடங்கி, பின்னாளில் சங்கீத கலாநிதி டிவி கோபாலகிருஷ்ணனால் மெருகூட்டப்பட்டவர்.
டி என் கிருஷ்ணன், ஓ.எஸ். தியாகராஜன், டி.என்.சேஷகோபாலன், போன்ற மூத்த வித்வான்கள் தொடங்கி இன்றைய தலைமுறையைச் சேர்ந்த அபிஷேக் ரகுராம், பாலக்காடு ராம்பிரசாத், சாகேத் ராமன் போன்றவர்களுக்கும் பக்கவாத்தியம் வாசித்து தனக்கென ஓர் தனி முத்திரை பதித்திருப்பவர் இவர்.
அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், பெல்ஜியம், நெதர்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் என்று உலகம் சுற்றி கச்சேரி செய்து வருகிறார். இவரும் அகில இந்திய வானொலியின் ஏ கிரேடு கலைஞர். காஞ்சி மடத்தின் ஆஸ்தான வித்வான்.
திருப்பூர் கிருஷ்ணன் தன் தலைமை உரையில் மகரிஷி யாக்ஞ வல்கியர் மற்றும் அவரது மனைவி மைத்ரேயி குறித்த கதையை மேற்கோள்காட்டி, வீணைக் கலைஞர்கள் தங்கள் தெய்வீகமான இசையை வழங்கி, அதன் மூலமாகவே சொர்க்கத்துக்குப் போகமுடியும்! வீணை இசைக்கு அத்தகைய சக்தி உள்ளது என்று குறிப்பிட்டார்.
தீவிர தேச பக்தர், அபார எழுத்தாளர், நேர்மையான பத்திரிகை ஆசிரியர், மதுவிலக்கின் தீவிர ஆதரவாளர், தனி மனித, சமூக ஒழுக்கங்களை வலியுறுத்தியவர்… அப்படிப்பட்ட மாமனிதரான கல்கி துவக்கிய பத்திரிகையோடும், அவரது குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறையினரோடும் தான் தொடர்ந்து நல்லுறவு கொண்டிருப்பதையும், “கல்கி எழுத்தாளர்” என தான் குறிப்பிடப்படுவதையும் பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டார் விழாத் தலைவர் திருப்பூர் கிருஷ்ணன்..
அடுத்து, ஹம்சத்வனி சுந்தர் உரை நிகழ்த்த, விருது பெற்ற கலைஞர்கள் ஏற்புரை வழங்கினார்கள். நிகழ்ச்சியை சுவைபடத் தொகுத்து வழங்கினார் நிர்வாக அறங்காவலர் சீதா ரவி. அமரர் கல்கி, விருது பெற்ற கலைஞர்கள் குறித்து பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்ட சீதா ரவி சொன்ன ஓர் தகவல் அவையினர் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
திருவண்ணாமலையில், இயற்கையோடு ஒன்றிய பகுதியில் வசித்துவரும் வீணைக் கலைஞர் ரமணாவின் வீட்டுவளாகத்துக்குள் அடிக்கடி பாம்புகளின் நடமாட்டத்தைக் காணமுடியுமாம். இந்த பாம்புகளை பத்திரமாக தங்களுடைய இயற்கை இருப்பிடத்திற்கு கொண்டு விடும் முயற்சியை மேற்கொள்ள நினைத்த ரமணா, அதற்காகவே ஆர்வத்துடன் முறைப்படி பாம்பு பிடிக்கும் பயிற்சியை பெற்றிருக்கிறாராம்!
பேச்சுக் கச்சேரியைத் தொடர்ந்து ரமணாவின் வீணைக் கச்சேரி அரங்கத்தினரை ஆட்கொண்டது.
இளம் வித்வான் வழங்கிய இசையின் இனிமை குறித்து தேவவிரதன் அவர்களின் விமர்சனம்:
‘இசை, இளமை, இனிமை’ இவை மூன்றும் ஓர் கலைஞரிடம் இணைந்து காண்பது எவ்வளவு அரிய அனுபவம்?
இந்த ஆண்டிற்கான கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை விருது பெற்ற இளம் இசைக் கலைஞர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சியைக் கேட்டபோது இந்த அரிய அனுபவம் உண்டானது. மழலை மேதையிலிருந்து, மாணவனாகி, இன்று உலகளவில் ரசிகர்கள் கொண்ட இளம் வித்வானாக வளர்ந்து, தன் வீணை இசையால் சங்கீத உலகில் ஒளி வீசும் ரமணா பாலசந்திரனின் வீணைக் கச்சேரியை கேட்டபோது சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்த உணர்ச்சி ஏற்பட்டது. அந்த தேனிசை மழைக்கு பக்க பலமாக, கணீரென ஒலித்தது உடன் விருது பெற்ற கலைஞர் விஜய் நடேசனின் மிருதங்க நாதம்.
ரமணாவின் விரல்கள் வீணையில் துடிப்புடன் தாவுகின்றன என்றால், விஜய்யின் விரல்களோ மிருதங்கத்தில் விளையாடுகின்றன! பாபநாசம் சிவனின் ‘கணபதியே கருணாநிதியே’ வில் தொடங்கி, கரகரப்ரியாவின் ஸ்வரங்களில் சற்று விளையாடி, பூர்வி கல்யாணி ராகத்தின் சுகத்தைத் தொட்டுக்காட்டி, ‘ஆனந்த நடமாடுவார்’ என்று நர்த்தனம் செய்துவிட்டு, கானடா ராகத்தை கனத்துடனும், கவனத்துடனும் விவரித்து, விஸ்தாரமான ஆலாபனையை ராகம், தானம், பல்லவிக்கு அர்ப்பணித்து, பலவித நுணுக்கங்களுடன் ‘ராமா தயாநிதே கருணா நிதே’ என்ற மிஸ்ர சாபு பல்லவியில் நீண்ட பயணம் மேற்கொண்டு, கல்பனா ஸ்வரக் கோர்வைகளில் முழுகி எழுந்து, கல்கியின் ‘பூங்குயில் கூவும்’ (காபி ராகம்) மற்றும் மகாகவி பாரதியின் ‘பகைவனுக் கருள்வாய்’ என்ற ராகமாலிகையுடன் கச்சேரியை நிறைவு செய்த ரமணா பாலசந்திரன், விஜய் பி. நடேசன் மற்றும் திருச்சி கிருஷ்ணசுவாமி (கடம்) ஆகியோரின் இசை நிகழ்ச்சி கர்நாடக இசையின் நுணுக்கங்களையும், எழிலையும் பல வண்ணங்களில் ஒளிரச் செய்தது.
பூர்விக கல்யாணி ராக கல்பனா ஸ்வர வாசிப்பில் நடந்த இசை, தாள, ஸ்வர உரையாடல் மிக உயர்வாக அமைந்தது என்றால், தனி ஆவர்த்தனத்தில் தாள வாத்திய கலைஞர்கள் விஜய்-கிருஷ்ணசாமி இடையே நடந்தது என்னவோ சபாஷ் போட வைத்த சரியான லய போட்டி!
இசைக் கருவிகளை வாசிப்பவர்கள், பாடிக்கொண்டே வாசிப்பது சற்று அபூர்வம். ரமணா தன் நேர்த்திமிகு வீணை இசையுடன் மிக இனிமையாகப் பாடுகிறார் என்பது சிறப்பு.
கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையினர் 26 ஆண்டுகளாக தொடர்ந்து சாஸ்திரிய இசைக்கு ஆற்றிவரும் பணி பாராட்டுக்குரியது. அறக்கட்டளையின் தேர்வுகள் எப்போதுமே சிறந்ததிலும், மிகச்சிறந்தவையாகவே அமையும்.
இந்த ஆண்டும் அப்படியே.