மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்!

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்!

1960களின் மையப்பகுதி... என் பள்ளிப் பருவம்... அப்போது திரைஉலகில் கோலோச்சிய இரு பெரும் நட்சத்திரங்கள் எம்ஜிஆர் அவர்களும், சிவாஜிகணேசன் அவர்களும்தான்.

எம்ஜிஆர் அவர்களை அரசியல் தலைவராக எனக்கு அதிகம் தெரியாது. ஆனால், நடிகராக அவரது  மிகப்பெரிய ரசிகை நான்.

தலைவரின் படங்களின் பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கும். தனக்கு திருப்தி ஏற்படும் வரை, (எத்தனை தடவை எழுதினாலும்) அவர் ஒத்துக்கொள்ள மாட்டாராம். அதேபோல இசையமைப்பும் தனக்கு முழு திருப்தி வந்தால்தான் அப்பாடலை அங்கீகரிப்பார்.

அதனால்தான் அவர் பாடல்கள் பட்டித் தொட்டி எல்லாம் ஒலிக்கும். நல்ல கருத்துகள் நிறைந்த பாடல்கள் பல. இன்று வரை காலத்தில் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அவருடைய மெனக்கிடலே...

இப்போது பொன்னியின் செல்வனுக்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருந்ததோ அதேபோல உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. (ஒரு வெளிநாட்டு நடிகை உட்பட நான்கு கதாநாயகிகள்). ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ கண்காட்சியில் விசேஷமாக அனுமதிகள் வாங்கி படப்பிடிப்பு நடத்தப்பட்ட படம். மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.

படம் பிள்ளை
படம் பிள்ளை

இது எப்படி இருக்க, 1980களில் நான் திருமணம் ஆகி திருநெல்வேலியில் வசித்து வந்தபோது ஓரளவு அவருடைய மற்ற குணங்களும், தலைமை பண்பும், வள்ளல் தன்மையும், மிகப் பிரபலமாக ‘மக்கள் தலைவர்’ என்கிற அடைமொழியுடன் கூடிய அன்பும் அவர் ஒரு திரைப்பட நடிகர் மட்டுமல்ல, மக்களின் மனதில் உள்ள பெரும் தலைவர் என்பதை புரிந்துகொள்ள உதவியது.

ஒரு சமயம் நாங்கள் கங்கைகொண்டான் சப் ரிஜிஸ்டர் ஆபீஸில் பத்திரப்பதிவுக்காகச் சென்றுகொண்டிருந்தோம். சாலை வேலைகள் நடந்ததால் ஆங்காங்கே நிறைய பேர் கூடி வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

திடீரென்று சாலையில் ஒரே பரபரப்பு. எங்கள் காரை ஓரமாக நிறுத்த அறிவுறுத்தினர்  காவல் துறையினர். தலைவர் அந்த வழியாக திருநெல்வேலி சென்று கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள். சாலையின் இருமடங்கிலும் வேலை பார்த்துக் கொண்டிருந்த கட்டிட தொழிலாளிகளும், தார் சாலை போடுபவர்களும்  சாலையின் இருமருங்கிலும் திரண்டனர்.

கையை மேலே தூக்கி "தலைவா வாழ்க தலைவா வாழ்க" என்று கோஷமிட்டனர்.  அவர்கள் முகத்தில் இருந்த பரவசம்... அன்பு தலைவரைப் பார்த்துவிடுவோம் என்கிற ஆர்வம்... அப்போதுதான் எனக்குப் புரிந்தது அவர் ஏன் ‘மக்கள் திலகம்’ என்று போற்றப்படுகிறார் என்பது.

எங்களுக்கும் அதே ஆர்வம்... தன் காரை வேகமாக செலுத்தாமல் நிதானமாக செலுத்தச் சொல்லி இரு மருங்கிலும் நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்து  கையசைத்தும் கைகூப்பியும் நன்றி சொல்லிக்கொண்டே சென்றார்.

மிக அருகில் அவரைப் பார்த்தபோது... புல்லரித்தது என்னவோ உண்மை! தற்செயலாய் கிடைத்த பாக்கியம் என்று நினைத்துக் கொண்டோம் ..

மக்கள் மனதில் அவர் என்றும் இருக்கிறார் என்பதை அந்த ஒரு நிகழ்வே எங்களுக்கு உணர்த்தியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com