பக்கத்து பென்ச்!

சிறுகதை
பக்கத்து பென்ச்!
Published on

ரவணன் திகைப்புடன் அவளைத் திரும்பிப் பார்த்தான். “இப்ப என்ன சொன்னே நீ?”

“கிஸ்ன்னு சொன்னேன்” என்றாள் அவள். “உடனே காய்ஞ்ச மாடு கம்மங்கொல்லையில பாய்ஞ்சமாதிரி உதட்டைக் குவிச்சுக் கிட்டு முன்னாடி வந்துடாதே” என்று கண்ணடித்தாள், “நான் சொன்னது கட்டளை இல்லை, பெயர்ச் சொல்.”

“எனக்கு ஒண்ணுமே புரியலை மீரா!”

“நீதான் பத்தாங்கிளாஸோட தமிழ் இலக்கணத்தைச் சுத்தமா மறந்தாச்சுன்னு எனக்குத் தெரியுமே” கேலியாக அழகு காட்டினாள். “கிஸ்ன்னு நான் சொன்னது, நம்ம பக்கத்து பெஞ்ச்ல நடக்கற கசமுசாவை.”

“எங்கே?” என்றபடி வேகமாகத் தலையைத் திருப்ப முயன்றவனை அவள் வலுக்கட்டாயமாகப் பிடித்து நிறுத்தினாள். “ஏண்டா மடையா, ஒனக்குச் சுத்தமா அறிவே கிடையாதா? இப்படித் திடீர்ன்னு திரும்பிப் பார்த்தா அவங்க நம்மைப் பத்தி என்ன நினைப்பாங்க?”

“ம்க்கும், இத்தனை பெரிய பார்க்ல பப்ளிக்கா கிஸ்ஸடிக்கற அளவுக்குத் துணிச்சல் உள்ள பார்ட்டிங்க, நாம என்ன நினைக்க றோம்ங்கறதைப்பத்தியா கவலைப்படப்போறாங்க?” என்றான் சர வணன். ஆனாலும் கொஞ்சம் நாசூக் காகவே திரும்பிப் பார்த்தான்.

இதற்குள் அந்த ஜோடி உஷாராகிப் பிரிந்திருந்தது. கருப்பு வெள்ளைப் படங்களில் வரும் காதலர்கள்போல கண்ணியமான தூரத்தில் தள்ளியே உட்கார்ந்திருந்தார்கள்.

சரவணன் ஏமாற்றத்துடன் மீராவை முறைத்தான், “என்னவோ கிஸ்ஸுன்னு பெருசா சொன்னே? இது வெறும் புஸ்ஸால்ல இருக்கு?”

“அல்பம்” கையில் இருந்த செய்தித்தாளைச் சுருட்டி அவன் தலையில் தட்டினாள் மீரா. “அடுத்தவங்க கிஸ்ஸடிக்கறதைப் பார்க்க அப்படி என்னடா ஆசை உனக்கு?”

“இங்கே மட்டும் என்ன வாழுதாம்? மொதல்ல அதைப் பார்த்துச் சொன்னதே நீதானே?”

“சேச்சே, நான் என்ன அவங்க வீட்டுக்குள்ளயா போய் எட்டிப்பார்த்தேன்? எதேச்சையாக் கண்ணுலபட்டது, உன்கிட்ட சொன்னேன்! அவ்ளோதான்.”

சரவணன் மறுபடி அந்த பெஞ்சைக் கவனித்தான். அவர்கள் ஏதோ மும்முரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அடுத்த முத்தத்துக்கான ஆயத்தங்களைக் காணோம்.

அந்த இருவருடைய முகத்திலும் அப்பாவிக்களை சொட்டியது. இந்தப் பூனையும் காதல் பண்ணுமா என்கிற ரேஞ்சுக்கு உத்தமர்களாகத் தெரிந்தார்கள். ஆனால், இன்னும் பொழுதுகூட இருட்டாத வெளிச்சத்தில், சைக்கிள் கேப்பில் பகிரங்கமாக கிஸ்ஸடித்திருக்கிறார்கள். பலே பலே!

“என்னடா அங்கயே வேடிக்கை பார்க்கறே?”

“ஒண்ணுமில்லை” என்றான் சரவணன்.

“கிளம்பலாமா?”

“ஓகே!” அவள் பெஞ்சுக்குக் கீழே விட்டிருந்த செருப்பைத்தேடி எடுத்து அணிந்துகொண்டாள். பையைத் தோளில் மாட்டிக்கொண்டு கிளம்பினாள்.

அவர்கள் அந்தப் பக்கத்து பெஞ்சைத் தாண்டும்போது, அந்தக் காதல் ஜோடி கொஞ்சம் கவனம் சிதறித் திரும்பினாற் போலிருந்தது. ஆனால் மறுவிநாடி, மீண்டும் பேச்சில் மும்முரமாகிவிட்டார்கள்.

நகரின் மையத்தில் இருக்கிற பார்க் இது. எங்கே பார்த்தாலும் அழகாகச் செதுக்கப்பட்ட புல்வெளிகள், அலங்காரப் புதர்கள், ஆங்காங்கே பூச்செடிகள், மையத்தில் வறண்டு கிடக்கும் செயற்கை நீரூற்று, அதற்குப் பக்கத்தில் குழந்தைகள் விளை யாடுவதற்கான ஏற்பாடுகள். சுற்றிலும் நடைபயிற்சி செய்கிறவர் களுக்காக வசதியான பாதைகள், அவற்றை ஒட்டினாற்போல் பல வண்ண சிமென்ட் பெஞ்ச்கள்.

பக்கத்தில் ஏழெட்டுக் கல்லூரிகள் இருப்பதாலோ என்னவோ, தினசரி மாலை நான்கு மணியானதும், இந்தப் பூங்காவில் ஏராளமான காதல் புறாக்கள் குவியத் தொடங்கிவிடுவது வழக்கம். அநேகமாக எல்லா பெஞ்ச்க்களிலும் ஜோடி ஜோடியாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். சில நாட்களில் உள்புற பெஞ்”க்கள் தீர்ந்துபோய், பல ஜோடிகள் வெளியே கம்பி காம்பவுண்ட் ஓரமாக நெருங்கி உட்கார்ந்திருப்பதும் உண்டு.

இவர்களில் பெரும்பாலானோர் நிஜமாகவே கண்ணியக் காதலர்கள்தான். அவளுடைய சுரிதார் நுனிகூட அவன்மீது பட்டு விடாது. பேச்சு, பேச்சு, பேச்சுதான், சிரிப்புதான், கற்பனைகள்தான், திட்டமிடல்கள்தான்.

சிலர், தைரியமாக நெருங்கி அமர்வார்கள், தோள்மீது கைபோடு வார்கள், ஒருவர் இன்னொருவரைப் பார்க்கும் விதமாகத் திரும்பி உட்கார்ந்து பேசியபடி கால்களால் முத்தமிட்டுக்கொள்வார்கள். ஒருவர் கையில் இன்னொருவர் கையைப் பொத்திக்கொண்டு ஆராய்வார்கள்.

இன்னும் சில ஜோடிகள், செல்போன் அல்லது கம்ப்யூட்டரில் மூழ்கியிருக்கும். ஒரே ஹெட்போனை ஆளுக்கு ஒரு காதாகப் பகிர்ந்துகொண்டு பாட்டுக் கேட்கும். அவ்வப்போது ஏதாவது சிரித்துப் பேசிக்கொள்ளும்.

பெரும்பாலான ஜோடிப் பறவைகளில், ஆண்கள் தங்கள் அடையாளத்தைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. பத்துக்கு ஒரு பெண்மட்டும் துப்பட்டாவால் தலையைப் போர்த்தி, முகத்தையும் கணிசமாக மூடிக்கொண்டிருப்பாள். ஆனால் பேச்சுமட்டும் நிற்காது.

இவர்கள் இப்படித் தீவிரமாகக் காதல் பண்ணிக் கொண்டிருக்கும் போது, நகரின் சீனியர் சிட்டிசன்கள் பலர் அந்தப் பூங்காவைச் சுற்றி வருவார்கள். அரை டிரவுசர், டிராக் சூட் தொடங்கி முழு சஃபாரி சூட், சுரிதார், பட்டுப்புடைவை, கைத்தடி, ஸ்போர்ட்ஸ் ஷூ, ஸ்வெட்டர், சால்வை என்று விதவிதமான அலங்காரங்களில் இவர் கள் தொப்பையைக் குறைப்பதற்காகவோ சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதற்காகவோ மெதுநடையோ ஜாகிங்கோ வரும்போது, எல்லாருடைய கண்கள்மட்டும் தவறாமல் இந்த ஜோடிகள்மீதுதான் அலைபாயும்.

அந்த முதியவர்கள் எதிர்பார்ப்பதுதான் என்ன? காதல் ஜோடிகளாகப் பூங்காவில் சும்மா உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதே தவறு என்கிற குற்றச்சாட்டா? அல்லது, அதையும் மீறி ஏதாவது கலாசாரச் சீரழிவைத் தங்கள் கண்முன்னே காண நேர்ந்துவிடுமோ என்கிற பதற்றமா? அல்லது, அப்படி ஏதேனும் நிகழ்ந்து விடாதா என்கிற ஏக்கமா? பெரிதாக ஒன்றும் நிகழவில்லையே என்கிற ஏமாற்றமா?

சரவணன், மீராவுக்கு இந்தப் ‘பெரிசு’ களை வேடிக்கை பார்ப்பது ரொம்பப் பிடிக்கும். ஒவ்வொருவருடைய பார்வை போகிற விதத்தை வைத்து, அவர்களது எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கும் என்று ஊகித்துச் சிரிப்பார்கள். “அந்தப் பெரியவர் மூஞ்சைப் பாரேன், ஃப்ரீ ஷோ எதுவும் கிடைக்கலையேங்கற வருத்தத்துல இஞ்சி தின்ன எதுவோ மாதிரி நடக் கறாரு.”

பெரும்பாலான பூங்காப் பெரியவர்களுக்குத் தெரியாத விஷயம், இவர்களெல்லாம் வீட்டுக்குக் கிளம்பிச் சென்று டி.வி.யில் நியூஸ் பார்க்க ஆரம்பித்த பிறகு, இன்னும் சரியாகச் சொல்வதென்றால் ராத்திரி ஏழு மணி தாண்டியபின்னர்தான் அங்குள்ள காதலர்  களுக்குத் தைரியம் கூடும். இன்னும் நெருங்கி அமர்வார்கள், ஆங்காங்கே சில முத்தங்கள், அதையும் தாண்டிய குறும்புகள் அரங்கேறும்.

பொது இடத்தில் ஓரளவுக்குமேல் அத்துமீற முடியாதுதான். ஆனாலும், நாளுக்கு நாள் இந்த ஜோடிகளின் சராசரி தைரிய அளவு அதிகரித்துக் கொண்டே செல்வதாக மீராவுக்குத் தோன்றும். சரவணனும் பெருமூச்சுடன் அதை ஆமோதிப்பான்.

பெருமூச்சுக்குக் காரணம், மீரா என்னதான் மற்ற காதலர்களை வேடிக்கை பார்த்தாலும், சரவணனை மட்டும் பக்கத்தில் நெருங்கவிடமாட்டாள். சாதாரணமாகக் கையைப் பிடித்துக்கொண்டு உட்காரலாம் என்றால்கூட, ‘அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்’ என்று தடை போட்டுவிடுவாள்.

“மீரா, இது செவன்டீஸ் டயலாக், இப்போ சொல்றியே” என்பான் சரவணன். “நீயே பாக்கறேல்ல? இப்பல்லாம் லவ்வர்ஸ் எவ்ளோ அட்வான்ஸ்டா இருக்காங்க!”

“அட முட்டாளே, அவங்களைப் பார்த்து நாம தினமும் சிரிக்கறோம், இந்த ஊரே சிரிக்குது. அப்படி மத்தவங்களுக்குக் கேலிப்பொருளா ஆகறதுக்காகவா நாம காதலிக்கறோம்?”

மீரா இப்படி நூற்றுக்கிழவிபோல் பேசுவது சரவணனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. இன்னொரு பக்கம், அவளுடைய ஒழுக்கத் தீவிரத்தை அவன் ரசிக்கவும் செய்தான்.

அவர்கள் மெதுவாக நடந்து பார்க் வாசலை நெருங்கும்போது, “ஏய், சரவணன்!” என்றாள் மீரா. “கொஞ்சம் மெதுவா வலதுபக்கம் பாரேன், ஒரு ஜோடி உலகத்தையே மறந்து படுதீவிரமா ரொமான்ஸ் பண்ணிக் கிட்டிருக்கு!”

வழக்கமாக அவளோடு சரிக்குச் சரியாக ஜோடிகளை நோட்டமிட்டுக் கமெண்ட் அடிக்கிற சரவணனுக்கு, அன்று ஏதோ தயக்கம். சற்றுமுன் தான் ஒரு முத்தக் காட்சியை எட்டிப்பார்க்கத் துடித்ததையெல்லாம் மறந்து, “மீரா, இதையெல்லாம் நாம பார்க்கறது கொஞ்சம் அநாகரிகம்தான், இல்லையா?” என்றான்.

மீரா சட்டென்று நின்றுவிட்டாள். “வாட்?”

“என்னதான் பப்ளிக் ப்ளேஸ்ன்னாலும், இது அவங்களோட பர்ஸனல் மேட்டர். காதலிக்கறாங்க, கொஞ்சிக்கறாங்க, கட்டிப்பிடிக்கறாங்க, கிஸ்ஸடிக்கறாங்க, தைரியம் உள்ளவங்க அதுக்கு மேலயும் போறாங்க. அது அவங்க உரிமை, நாம அவங்களை வேடிக்கை பார்க்கறது நியாயமில்லையே!”

அவள் வெடித்துச் சிரித்துவிட்டாள். “என்னடா இது? திடீர்ன்னு இவ்ளோ நல்லவனாகிட்டே?”

சரவணனால் அந்தக் கேலியைத் தாங்கமுடியவில்லை. எல்லாவற்றையும் மறந்து, “வா, போலாம்!” என்றான்.

ஆட்டோ பயணம் முழுவதும், அவர்கள் ஒரு வார்த்தைகூடப் பேசிக்கொள்ளவில்லை. கோபமெல்லாம் கிடையாது. தெரியாமல் சரவணன் கேட்டுவிட்ட கேள்வி, அவர்கள் இருவரையுமே உறுத்தியிருந்தது.

மீராவின் ஹாஸ்டல் வாசலில் ஆட்டோ நின்றதும், சரவணனும் இறங்கிக்கொண்டான். டிரைவருக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, “குட் நைட்!” என்றான் அவளிடம்.

சிறிது நேரம் சரவணனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் மீரா. பின்னர் மெதுவான குரலில் “ஸாரிடா” என்றாள்.

“எ... எ... எதுக்கு?”

பதில் சொல்லாமல் திரும்பி நடந்தாள் அவள். வழக்கமாக அவளுடைய ஹாஸ்டல் வாசலில் இறங்கிய பிறகும் சிறிது நேரம் மரத்தடியில் நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். இன்று அது இல்லை.

அவனுக்கும் மனம் கனத்திருந்தது. இரவுச் சாப்பாட்டைக்கூட நினைக்கத் தோன்றாமல் வீடு நோக்கி நடந்தான்.

மறுநாள் காலை, சரவணன் மிக முக்கியமான ரிப்போர்ட் ஒன்றில் தப்பு கண்டுபிடித்தபடி கொட்டாவியை அடக்கப் போராடிக்கொண்டிருந்த நேரம், மீராவிடமிருந்து போன் வந்தது. “பிஸியா?”

“கொஞ்சம்” என்றான் அவன். “சொல்லு, என்ன விஷயம்?”

“இன்னிக்கு மீட் பண்றோம்தானே?”

“அஃப் கோர்ஸ், வழக்கமான பார்க்தானே?”

“வேணாம் வேற எங்கயாவது போகலாமா?”

“சினிமா?”

“ஓகே!” என்றவள் சிறு இடைவெளிவிட்டு “வெச்சுட்டியா?” என்றாள்.

“இல்லை மீரா, சொல்லு!”

“சரவணன்...”

“ம்ம்...”

“என் மனசுல அழுக்கு இருக்குன்னு நீ நினைக்கறியா?”

“நோ நோ” சட்டென்று சொன்னான் அவன்.

“காலேஜ் டேஸ்லேர்ந்து நாம பழகறோம், எனக்கு உன்னைப்பத்தித் தெரியாதா மீரா?”

அவள் சற்று மௌனமானாள். பின்னர் “எனக்கே என்னைப்பத்தித் தெரியலையோன்னு கொஞ்சம் சந்தேகமா இருக்கு சரவணன்” என்றாள். “நேத்து நைட் முழுக்க நீ சொன்னதைத்தான் யோசிச்சுக்கிட்டிருந்தேன். அடுத்தவங்களை வேடிக்கை பார்க்கற இந்த அநாகரிகமான பழக்கம் நமக்கு ஏன் வந்தது? எப்படி வந்தது? ஒருவேளை நம்ம மனசுக்குள்ள இருக்கற வக்கிரத்தோட வெளிப்பாடுதானா இது?”

“அதெல்லாம் இல்லைம்மா, நம்மைச் சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கற சாதாரணக் குறுகுறுப்புதான். ரோட்ல யாராவது கீழே விழுந்துட்டா அவங்களைச் சுத்திச் சட்டுன்னு ஒரு கூட்டம் கூடுதுல்லையா? அதுபோலதான் இதுவும். நத்திங் ராங்!”

“சரவணன், மத்த லவ்வர்ஸ் மாதிரி நாம பொது இடத்துல ரொம்ப நெருங்கி, அன்னியோன்னியமா நடந்துக்கறதில்லை, அவ்ளோ ஏன், ரோட்ல சாதாரணமா கைகோத்துக்கிட்டு நடக்கறதுகூட எனக்குப் பிடிக்காது, உனக்கே தெரியும்” என்றாள் மீரா. “ஆனா, அவ்ளோ சுத்தமா இருக்கற நமக்கு, அடுத்தவங்களோட அசுத்தத்தைப் பார்க்கறதுக்கு ஏன் இந்தத் துடிப்பு? ஒருவேளை, நாமும் அப்படி இருக்கணும்னுதான் உள் ளுக்குள்ள ஆசைப்படறமோ? அதுக்குத் தைரியம் இல்லாம, அடுத்தவங்களைக் கிண்டலடிக்கறோமா?”

“சுத்தம், அசுத்தம்ங்கறதெல்லாம் ரொம்பப் பெரிய வார்த்தை மீரா. நம்மோட ஒழுக்க ஸ்கேலை வெச்சு உலகத்தை அளக்கறது பெரிய தப்பு” என்றான் சரவணன். “இவ்ளோ பேசறேனே, நான்மட்டும் என்ன பெரிய உத்தமனா? நேத்திக்குக்கூட உன்னோட சேர்ந்து நானும் அந்த ஜோடிங்களை நோட்டம் விட்டேனே!

நேசம்ங்கறது நாலு சுவத்துக்குள்ள காட்டப் படணும்ங்கறது ஒரு கட்சி. இடம் எதுவானா என்ன? என் அன்பை நான் காட்டுவேன்ங்கறது இன்னொரு கட்சி. பரதநாட்டியம், ப்ரேக் டான்ஸ் மாதிரிதான், ஒண்ணைவிட இன்னொண்ணு தாழ்த்தியோ உŒத் தியோ இல்லை. அவங்களைப் பார்த்து நாம மாறவும் வேணாம், நம்ம கட்டுப்பாடுகளை அவங்கமேல திணிக்கவும் வேணாம்.”

“நிஜமாவா சொல்றே? உனக்கு என்மேல கோவமெல்லாம் இல்லையே?”

“நிச்சயமா இல்லை மீரா” என்று சிரித்தான் சரவணன். “ஈவினிங் பார்ப்போம். சினிமால்லாம் வேணாம், அதே பார்க்ல.”

பூங்கா வாசல். காகிதக் கூம்புகளில் கொண்டைக் கடலைச் சுண்டலுடன் காத்திருந்தாள் மீரா. “ஏண்டா லேட்?”

“கிளம்பற நேரத்துல மேனேஜர் பய பிடிச்சுக்கிட்டான். அவனைச் சமாளிச்சு அனுப்பிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுச்சு!” என்றான் அவன். “ரொம்ப நேரமாக் காத்திருக்கியா?”

“ஆமா, ஏழெட்டு வருஷமா!”

“இந்தப் பேச்சுக்கொண்ணும் குறைச்சலே இல்லை” என்று சிரித்தபடி அவன் சுண்டல் பொட்டலத்தை வாங்கிக்கொண்டான். தங்களுடைய வழக்கமான பெஞ்சை நோக்கி நடந்தார்கள். அதன் இரு மூலைகளில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்தார்கள்.

பின்குறிப்பு:-

கல்கி 26  மே  2013 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடைக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com