அயல் வானில் ஒளிரும் விண்மீன்கள்

அயல் வானில் ஒளிரும் விண்மீன்கள்

கடல் கடந்து விரியும் நம் கலை

கலைஞர்கள் – குருமார்கள் – கலை நிறுவனங்கள்

ஆற்றும் அற்புதப் பணி! ஓர் அறிமுகம்.

கர்நாடக சங்கீதத்தின் பொற்காலம் என்று தற்காலத்தைக் குறிப்பிடலாமா? உலகம் முழுவதிலிருந்தும் இளைய தலைமுறையைச் சேர்ந்த பலர் மிக ஆர்வமாகக் கர்நாடக சங்கீதத்தைக் கற்றுத் தேர்ந்து, தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். 

காலம் பொற்காலமாக மட்டுமல்லாமல், போட்டிக் களமாகவும் இருக்கிறது. அந்த அளவுக்குகு பலர் தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் தலை சிறந்து விளங்குகிறார்கள். இந்தக் கட்டுரையில் அயல்வானில் பிறந்து, பாரம்பரியம் மிக்க நம் சங்கீதத்தைக் கற்று, ஜொலிக்கும் சில நட்சத்திரங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இவர்களோடு, நாட்டியத்தைத் தனது மூச்சாகக் கருதும் ஒரு இளம்பெண்ணைப் பற்றியும் அறிவோம்!

விஷாகா - நடனம்

16 வயது இளம்பெண் விஷாகா, ஆஸ்திரேலியாவின் சிட்னி மாகாணத்தில் தனது உயர்கல்விப் படிப்பை மேற்கொண்டு வருகிறார். 3 1/2 வயதில் சிதம்பரம் ஆர். சுரேஷ் அவர்களிடம் சிட்னியில் பரதம் பயிலத் தொடங்கிய விஷாகா, தனது பத்தாவது வயதில் அரங்கேற்றத்தை மேற்கொண்டார். பரதத்தை வெறும் பொழுதுபோக்கு அம்சமாக அல்ல, தன் தினசரி வாழ்க்கையின் ஓர் அங்கமாகப் பார்க்கிறார் அவர். அவரைப் பொருத்தவரை நடனம்தான் வாழ்க்கை. நடனம் என்பது மூச்சு விடுவது போல!

குழந்தையாக விஷாகா நடக்கத் தொடங்க சிறிது தாமதமாகியது. அவருடைய தாய் பெரும் கவலையுடன்  சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சென்று, "விஷாகா நடக்காவிட்டால் பரவாயில்லை. ஆனால் அவள் நடனம் ஆட வேண்டும்", என்று வேண்டிக கொண்டிருக்கிறார். அவர் தாய் ஹம்சாவும் ஒரு நடனக்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆடற்கலையின் அரசன் நடராஜன், அந்தத் தாயின் வேண்டுதலை அப்படியே நிறைவேற்றி இருக்கிறார். விஷாகா இன்று நடனமாடிக்கொண்டே இருக்கிறார்.

சென்னையில் ஸ்ரீஜித் கிருஷ்ணா மற்றும் பிரகா பிரெஸல் ஆகியோரால் வழிநடத்தப்படுகிறார். நடன வடிவமைப்பாளராகவும் செயல்படுகிறார் விஷாகா. ஜாஸ், தற்கால நடனம், நாடகம் ஆகியவற்றை சிறப்புப் பாடமாகப் பள்ளியில் படிக்கிறார். வயலின் மற்றும் வாய்ப்பாட்டை பாலாஜி ஜெகநாதனிடமும் பயின்று வருகிறார்.

தான் கற்ற கலையின் வாயிலாக சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டிருக்கிறார்  விஷாகா. நடனம் முதுமையைத் தாமதிக்கிறது என்று ஆராய்ச்சிகள் சொல்வதை அடிப்படையாகக் கொண்டு, வயது முதிர்ந்தோருக்கு நடனத்தை ஒரு தெரபியாக அளித்து வருகிறார். கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நடனத்தைக் கொண்டு ஏதாவது உதவ முடியுமா என்ற எண்ணத்திலும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் இந்த இளம் கலைஞர்.

அனிருத் ராஜா - வாய்ப்பாட்டு

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாநிலத்தில் பிறந்து தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதல் வருடம் கல்லூரிப் படிப்பை மேற்கொண்டிருக்கும் அனிருத், கர்நாடக இசைப் பயிற்சியை  நான்கு வயதில்  தொடங்கியவர்.  இன்று அபரிமிதமானதொரு வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருகஅறிவும்!

ஆரம்பப் பாடத்தைத் வித்வான் ஹரி தேவநாத் மற்றும் சங்கீத கலாநிதி நெய்வேலி சந்தான கோபாலன் அவர்களின் சீடர் விவேக் சுந்தர்ராமன் ஸ்ரீ பாதுகா அகாடமியிலும் தொடங்கியவர், சந்தானகோபாலன் அவர்களின் சிஷ்ய குலத்திலும் ஒருவராகச் சில காலம் பயின்றார். தற்போது  கர்நாடக சங்கீத முன்னணி வித்வான் சந்திப் நாராயணன் அவர்களிடம் பயின்று வருகிறார்.

அமெரிக்க அளவில் நடத்தப்பட்ட பல இசை போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியாளராக வாகை சூடி இருக்கிறார் அனிருத். 2014 ஆம் ஆண்டின் 'கர்நாடிக் மியூசிக் ஐடல்' போட்டியின் வெற்றியாளர். கோவிட் காலத்தின் போது இசை நிறுவனங்கள் வலைத்தளங்கள் வாயிலாக நடத்திய பல நிகழ்ச்சிகளில் முழு நீளக் கச்சேரிகள் வழங்கி இருக்கும் அனிருத், சென்னையின் மார்கழி இசை விழாவிலும் பல மேடைக் கச்சேரிகளை வழங்கி வருகிறார்.

க்ளீவ்லாண்ட் தியாகராஜ ஆராதனை விழாவிலும் தொடர்ந்து பங்கு பெறுகிறார். திருமதி சுகுணா வரதாச்சாரி அவர்களின் வழிகாட்டுதலோடு 'சம்பிரதாயா' நிகழ்ச்சியிலும், குரு ஸ்ரீ காரைக்குடி மணி அவர்கள் வழங்கிய 'ஹோமேஜ் டு நந்திகேஸ்வரா' என்ற நிகழ்ச்சியிலும் பங்குபெறும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

கர்நாடக சங்கீதம் தன் வாழ்க்கையின் அங்கமாக எப்போதும் இருக்கும் என்று சொல்லும் அனிருத் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையிலும் மிகுந்த ஆர்வம்கொண்டிருக்கிறார். பிற்காலத்தில் தானே தொழில் தொடங்கும் எண்ணமும் இருக்கிறது என்றும், ஆனாலும் தன்னுடைய கோடை விடுமுறைக் காலத்தின் போது சென்னை வந்து தமது குரு சந்திப் அவர்களிடம் கற்றுக்கொள்ளவும், ஒவ்வொரு மார்கழி இசை விழாவின் போது சென்னையில் வந்து இசையில் மூழ்கவும் ஆசை என்று கூறுகிறார்.

ஒரு மாணவன், தன் குருவிடமிருந்து கற்றுக் கொள்ளும்போது அவரைப் போலவே பாடுவது என்பது தவிர்க்க முடியாதுதான். அவருடைய காப்பியாக இல்லாமல் இருப்பதற்கு என்ன செய்யக்கூடும் என்ற என் கேள்விக்கு,

"எந்தக் கலை வடிவத்தையும் கற்றுக்கொள்ளும்போது அதை அப்படியே பிரதிபலிப்பதுதான் என் சங்கீதத்தின் அடித்தளமாக அமைகிறது.  ஜி என் பி, தஞ்சாவூர் எஸ். கல்யாணராமன், டி. என். சேஷ கோபாலன், சஞ்சய் சுப்பிரமணியம் போன்ற பல வித்வான்களின் ஒலிப்பதிவுகளை மீண்டும் மீண்டும் கேட்டு சில பாடல்களைக் கற்கும்போது, அந்தப் பாடல்களை நான் அவர்களைப் போல பாடுவது என்பது தவிர்க்க இயலாது போகிறது. அதேபோல்தான் என் குருவிடம் கற்றுக் கொள்வதும். என்னுடைய குருவிடமிருந்து நான் கற்கும்போது அவர் எதிர்பார்ப்பதை அப்படியே வழங்குவதுதான் முதல் படி. ஆனால் நீண்ட கால பயிற்சிக்குப் பிறகு, கற்றுக்கொண்ட அந்த கீர்த்தனையில் என்னுடைய தனித்துவத்தையும் புகுத்தி அதை என் பாடலாக ஒலிக்கச் செய்ய வேண்டும். ஒரு கலைஞனாக, வளர வளர நான் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் அது.

எனக்கு ஃபியூஷன் இசை உருவாக்கத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. கர்நாடக சங்கீத ஸ்வரங்களை எனக்கு பிடித்த ஹிப் ஹாப் அல்லது பாப் சங்கீதத்தில் இணைத்து பியூஷன் சங்கீதத்தை நான் உருவாக்குகிறேன். மொழி ஒரு தடையே இல்லை. வெளிநாட்டு சங்கீதத்திற்கும் ஏன் திரைப்பாடல்களுக்கும் கூட கர்நாடக சங்கீதம் ஒரு அடித்தளமாக அமைகிறது. எந்த வகையான பாடலிலும் நாம் ராகத்தைக் கண்டு கொள்ள முடியும். ஆங்கில மற்றும் தமிழ்ப் பாடல்களில் ஸ்வர வரிசைகளை இணைத்து மனதிற்குப் புத்துணர்வு தரும் புதிய இசையை உருவாக்க நான் முயற்சி செய்கிறேன்", என்கிறார் இளம் கலைஞர் அனுருத் ராஜா.

உமா ரங்கநாதன் - வாய்ப்பாட்டு

நார்வே நாட்டில் வசிப்பவர். தமது ஐந்தாவது வயதில் கற்கத் தொடங்கிய இவருடைய வாழ்க்கையை முழுமையாகச் சங்கீதம் ஆக்ரமித்திருக்கிறது. டாக்டர். ராதா வெங்கடாசலம், டாக்டர். K. வாகீஷ், விதூஷி ராஜராஜேஸ்வரி பட் போன்ற தலைசிறந்த குருமார்களிடமிருந்து பயிற்சி பெற்ற இவர் தற்போது, முன்னணி கர்நாடக சங்கீதக் கலைஞர் காயத்ரி வெங்கட்ராகவன் அவர்களிடம் மேடைக் கலைஞராகப் பரிமளிக்க பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மிருதங்கக் கலைஞர் ஈரோடு நாகராஜ் அவர்களிடம் லயத்திலும் தீவிரப் பயிற்சியில்  ஈடுபட்டிருக்கிறார். இவர் ஒர் இசை ஆசிரியரும் கூட.

ஏப்ரல் 2012 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்ற அவை, புகழ்பெற்ற லண்டன் நேரு மையம் ஆகிய இடங்களில் பாடும் வாய்ப்பு உமாவுக்குக் கிடைத்தது.  இந்தியாவின் பல இசை அரங்கங்களிலும் பாடி வருகிறார்.

அமெரிக்காவின் சர்வதேச டிவினிடி நிறுவனம் தயாரித்த ராதே ராதே, ஸ்டோரி ஆப் லவ் ஃபார் தி சுப்ரீம், பக்தி சுகந்தம், ராமானுஜர் - ஒரு வரலாற்று நாடகம் போன்ற நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்திருக்கிறார்.

இசையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, மனதளவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு செயலாற்றி வருகிறார். இசையின் மருத்துவக் குணங்களை ஆராய்ந்து, அதன் மூலம் மனநோயைக் குணப்படுத்தும் எண்ணம் கொண்டுள்ள இவர்  சான்றிதழ் பெற்ற ஒர் இசை தெரப்பிஸ்ட்.

பரதநாட்டியத்திலும் பயிற்சி பெற்ற இவர் புது தில்லி திருமதி ஜெயலட்சுமி ஈஸ்வர் அவர்களின் மாணவி. லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் மற்றும் பொலிடிகல் சயின்ஸ் கல்லூரியில் ஹ்யூமன்  ரிசோர்ஸ் மேனேஜ்மென்டில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், நார்வேயில் எனர்ஜி துறையில் பணியில் உள்ளார்.

"என் குரு விதுஷி காயத்ரி வெங்கட்ராகவன் அவர்களின் வழி என்பது பல தலைசிறந்த வல்லுநர்களின் சங்கீதத்திலிருந்து கற்றுக்கொண்டு, அதன்  ஈர்ப்பிலிருந்து உருவான கலவை எனலாம். எனக்கு அவர் கற்றுத் தரும்போது, பாடப்படும் கிருதியின் பாடாந்திரத்தையும் அதன் பாரம்பரியத்தையும் மாற்றக்கூடாது என்று சொல்வார். மனோதர்மம் போன்ற இடங்களில் எங்களுடைய தனித்தன்மையைக் காட்டுவதற்கு என்னைப் போன்ற மாணவர்களுக்கு ஊக்கம் தருவார். ஆனால், நான் இன்னும் என்னுடைய ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கிறேன். என் குரு மற்றும் பலருடைய சங்கீதத்தால் ஈர்க்கப்படுகிறேன். இசை என்பது என் வாழ்க்கையோடு கலந்த ஒரு விஷயம் என்பது நன்றாகப் புரிகிறது.

நான் ஒரு முழு நேரக் கலைஞராகவோ, இசை ஆசிரியர் அல்லது இசை ஆராய்ச்சியாளராகவோ மாறுவது குறித்து என்னுடைய எதிர்காலம் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் கண்டிப்பாக நம் சங்கீதத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, சிரத்தையோடு கச்சேரிகளை வழங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. வாழ்நாள் முழுவதும் சங்கீதத்தைக் கற்க வேண்டும். நிறைய கேட்க வேண்டும். சங்கீதத்தை கற்பிக்கவும் கச்சேரிகள் வழங்கவும் அதிக ஈர்ப்பு இருக்கிறது. ஆனால், உயர்ந்த நம் சங்கீதத்திலிருந்து அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. அவற்றையும் அறிய வேண்டும்!”

அரவிந்த் மகாலிங்கம் - வாய்ப்பாட்டு

அமெரிக்காவின் பாஸ்டன் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த அரவிந்த், பிறந்தநாள் முதல் சங்கீதச் சூழலால் ஆசீர்வதிக்கப்பட்டவர். தந்தை மகாலிங்கம் சந்தானகிருஷ்ணன் ஒரு மிருதங்க வித்வான். பாட்டனார் நாம சங்கீர்த்தனக் கலைஞர் ஆதம்பாக்கம் சந்தானகிருஷ்ணன் பாகவதர். ஒவ்வொரு வருடமும் தாத்தா, பாட்டியின் வருகை, கர்நாடக சங்கீதம், நாம சங்கீர்த்தனம் மற்றும் காலத்தால் அழிக்க முடியாத திரை இசைப் பாடல்களின் மீது ஆர்வம் இவை அனைத்துமேதான் தமிழ் மொழியை சரளமாக பேசவும், இசை ஆர்வத்தைத் தூண்டவும் காரணங்களாக அமைந்தன என்கிறார் அரவிந்த். புவனா சந்திரமௌலி அவர்களிடம் தமிழ் மொழியை பயின்று வருகிறார்.

தமது ஆறாவது வயதில் (மறைந்த) கீதா முரளி அவர்களிடம் சங்கீதப் பயிற்சியை முறையாக மேற்கொண்டார் அரவிந்த். பாவபூர்வமான சங்கீதம் வழங்க அவர்தான் கற்றுத் தந்திருக்கிறார்.  2016 ஆம் வருடம் முதல் முன்னணி இசைக்கலைஞர் பாலக்காடு ராம் பிரசாத் அவர்களிடம் மனோதர்ம சங்கீதத்தையும் கச்சேரிகள் வழங்குவதில் சிறப்புப் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். குருவின் வழிகாட்டுதலோடு அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், கே.வி. நாராயண சுவாமி, ஆலத்தூர் சகோதரர்கள், ஜி.என். பாலசுப்ரமணியம், டி.கே பட்டம்மாள், எம்எல் வசந்தகுமாரி, செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் போன்ற விற்பன்னர்களின் ஒலிப்பதிவுகளைக் கேட்டு சங்கீதத்தின் ஆழத்தை அறிய முயல்கிறார். பாலக்காடு மணி ஐயர் பரம்பரை வழி வந்த சங்கீதத்தை நுணுக்கங்களோடும் அதே நேரத்தில் பக்தி பாவத்தோடும் வழங்குவது இவரின் சிறப்பு.

தமிழ்த் திரை இசையில், இசை மேதை ஜி. ராமநாதன் அவர்களின் உருவாக்கத்தில் வந்த காலத்தால் அழிக்க முடியாத திரைப்படப் பாடல்கள் இவருக்கு மிகவும் பிடித்தமானவை. உலக இசையை ரசிப்பவர். ஹார்மோனியம் இசைக்கிறார்.  ஜாஸ் பியானோ கற்று வருகிறார்.

இசைப் போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்ற அரவிந்த், கடந்த ஐந்து வருடங்களாக சிறிய அளவில் கச்சேரிகள் செய்து வருகிறார். இந்த வருடம் சென்னை இசை விழாவில் வாணி மகாலில் முழுக் கச்சேரி செய்யும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

எதிர்காலத்தில் Data scientist ஆக உருவாக வேண்டும் என்ற திட்டத்தில் இப்போது கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் அரவிந்த், ஒரு நாள் சங்கீதத்தைத் தன் முதன்மையான பணியாக மேற்கொள்வேன் என்கிறார்.

தமது குரு பாலக்காடு மணி ஐயர் இசைப் பள்ளியில் ஆசிரியராகவும் இருக்கும் அரவிந்துக்கு கர்நாடக சங்கீதத்தில்  சிறப்பாகத் திகழ வேண்டும் என்பதுதான் விருப்பம். தான் ஒரு ஆசிரியராக மாறும்போது, இசையின் புதிய பரிமாணத்தை உணர்வதாகக் கூறுகிறார். "ஒரு சங்கதியை மாணவனுக்குக் கற்றுத் தரும் போது, அவன் ஏதாவது ஒரு இடத்தில் கஷ்டப்பட்டால் எனக்கு அது புதிய கோணத்தில் சிந்திக்கக் கற்றுத் தருகிறது. எனக்கு எளிதாக வருவது மற்றவருக்குக் கடினமாக இருக்கலாம் அல்லது அவருக்கு எளிதாக வருவது எனக்குக் கடினமாக இருக்கலாம். ஆனால், ஒரு கீர்த்தனையை மீண்டும் மீண்டும் கற்கும்போது அதன் அடிப்படையைப் புரிந்துகொண்டு அதன் ஆழத்தை அறிய உதவுகிறது. தன் மாணவர்களுக்குக் கற்றுத் தருவதிலிருந்து தான் எவ்வளவு கற்றுக் கொள்கிறேன் என்பதை  என் குரு அடிக்கடி குறிப்பிடுவார். அதை இந்தச் சிறிய கால அனுபவத்திலேயே நான் உணர்ந்து கொண்டேன்", என்கிறார் அரவிந்த்.

சஞ்சய் ஷர்மா - வயலின்/மிருதங்கம்

கடந்த 15 ஆண்டுகளாக வயலின் பயின்று வரும் சஞ்சய் சர்மா ஆரம்பப் பாடத்தை சந்தியா ஸ்ரீநாத் அவர்களிடம் தொடங்கினார். வயலின் இசையை ஸ்ரீகாந்த் மல்ல ஜாய்ஸூலா, ஜெயமங்களா பள்ளியின் ராஜலட்சுமி கிருஷ்ணன் ஆகியோரிடம் பயின்றிருக்கிறார். வித்வான் டெல்லி சுந்தர்ராஜன் அவர்களிடமிருந்து தற்போது மேம்பட்ட பயிற்சி பெற்று வருகிறார்.

தனது 12 வது வயதில் முதல் - இரண்டு மணி நேர தனிக் கச்சேரி வழங்கிய சஞ்சய், இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பல கச்சேரிகள் வழங்கி இருக்கிறார். முன்னணிக் கலைஞர்கள் ஆர். சூர்ய பிரகாஷ், டாக்டர் கே. என். ரங்கநாதர் ஷர்மா, அசோக் ரமணி, நேமனி சோமயாஜுலு, வி. கே. ராமன் போன்றவர்களுக்குப் பக்க வாத்தியமாகவும், பரதநாட்டிய, கர்நாடக சங்கீத அரங்கேற்ற நிகழ்ச்சிகளுக்கும் வயலின் இசைத்திருக்கிறார்.

க்ளீவ்லாண்ட் தியாகராஜா ஆராதனை உட்பட பல போட்டிகளில் கலந்துகொண்டு வயலின் இசையில் பரிசுகள் பெற்றிருக்கிறார் சஞ்சய். சென்னை இசை விழாவில்  பல வருடங்களாக கலந்து கொண்டு, தனி வயலின் கச்சேரிகளும், பக்கவாத்தியமும் இசைக்கும் இவர்,  வித்வான் நெய்வேலி நாராயணன் அவர்களிடம் மிருதங்கமும் கற்று மிருதங்கப் பக்கவாத்தியமும் இசைக்கிறார். 

வயோலா வாத்தியத்தில் மேற்கத்திய இசையைக் கற்றிருக்கும் சஞ்சய், மேரி லாண்ட் மாநிலத்தின் சார்பில் வயோலா இசைத்திருக்கிறார்.  

மேரி லாண்ட் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்து இப்பொழுது நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தைத் தொடர்கிறார்.

பாடகருக்கு இரு பக்கமும் அமர்ந்து இரு வேறு வாத்தியங்களை இசைப்பது பற்றிக் கேட்டபோது, "நான் வாசிக்கும் ஒவ்வொரு வாத்தியத்தைப் பற்றிய புதிய பரிமாணங்களை இது எனக்குத் தருகிறது” என்கிறார். மேலும், மிருதங்கத்தில் நான் வாசிக்கும் அத்தனை கோர்வைகளையும் வயலினில் நான் வாசிக்க முடியாது. எந்த வகையான கணக்குகளைத் தர முடியும் என்பது அந்தப் பாடலின் வேகம் மற்றும்  இடத்தைப் பொருத்தே அமையும்.  சாதாரணமாக மிருதங்கத்தில் மட்டுமே வாசிக்கக்கூடிய கோர்வைகளை நான் வயலினில் முயற்சி செய்து வாசிப்பது எனக்கு சந்தோஷத்தை தரும் ஒரு விஷயம். முற்றிலும் வித்தியாசப்படுத்தி இரண்டு வாத்தியங்களை வாசிப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எதற்காக அந்த வாத்தியத்தை அந்த வகையில் வாசிக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளும்போது மகிழ்ச்சி கூடுகிறது,” என்று விளக்கம் அளிக்கிறார்.

தொடர்ந்து இரண்டு வாத்தியங்களையும் நீங்கள் வாசிப்பீர்களா என்று கேட்டதற்கு,  "கடந்த சில ஆண்டுகளாக வயலின் பக்கம் நான் அதிகம் சாய்வது எனக்குப் புரிகிறது. மேடையில் மிருதங்கத்தை விட, வயலின் வாத்தியத்தின் பங்களிப்பை நான் அதிகமாக உணரத் தொடங்கியிருக்கிறேன். அது எனக்கு மிகுந்த சந்தோஷத்தையும் தருகிறது. ஆனால், நான் மிருதங்கம் வாசிப்பதையும் விரும்பிச் செய்கிறேன். முக்கியமாகத்  தனியாவர்த்தனம். கச்சேரியிலேயே எனக்கு மிகவும் விருப்பமான இடம்.  முழு நிகழ்ச்சியிலும் ஒரு முறையோ இரண்டு முறையோ நடக்கும் இந்த நிகழ்வு எந்தத் திசையில் செல்லும் என்பது ஒரு புரியாத புதிர். அந்தப் புதிர் என்னை ஒவ்வொரு கச்சேரியையும் இன்னும் இன்னும் எதிர்பார்க்க வைக்கிறது".

இந்த இளைஞர்களின் திறமையும் தன்னம்பிக்கையும் நம்மை பிரமிக்க வைக்கிறது.  இள வயதில், எண்ணங்களில் அவர்கள் வெளிப்படுத்தும் தெளிவு, அறிவின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. தேர்ந்தெடுத்த கலையில் இவர்கள் அனைவரும் நீடித்த உழைப்பைத் தந்து மேன்மேலும் சிறந்து, குருவருளும் திருவருளும் நிறையட்டும்!

கல்கி குழுமம் வாழ்த்துகிறது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com