அயல்நாட்டிலிருந்து வந்த தமிழ்நாட்டு மாப்பிள்ளைகளும், மருமகளும்!

அயல்நாட்டிலிருந்து வந்த தமிழ்நாட்டு மாப்பிள்ளைகளும், மருமகளும்!

கடல் கடந்து விரியும் நம் கலை

கலைஞர்கள் – குருமார்கள் – கலைநிறுவனங்கள்

ஆற்றும் அற்புதபணி ! ஓர் அறிமுகம்.

இசையால் இணைந்த தம்பதி!


இயற்கையிலேயே இனிமையான குரல் வளம் அமைவது இறைவன் தந்த வரம். அமெரிக்காவில் ஹூஸ்டன் யூத் மியூசிக் அஸோஸியேனஷனின் (HYMA) தலைவராகப் பணியாற்றிய, குழந்தை மேதை க்ருதி பட்டின் குரல் வளத்தில் மயங்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். இசைக் குடும்பத்தில் பிறந்த இவர் முதலில் தன் பாட்டி கிருஷ்ணவேணியிடமும், பிறகு  தன் தாய் ராஜேஸ்வரியிடம் இசை பயின்றார். தொடர்ந்து அவருடைய மாமா, வயலின் வித்வான் விட்டல் ராமமூர்த்தியிடமும், வயலின் மேதை லால்குடி  ஜெயராமன் அவர்களின் இசைப் பட்டறையிலும் பயின்று பட்டை தீட்டிய வைரமாக மிளிர்ந்தார். இவர் ஒரு வயலின் மற்றும் பரத நாட்டிய கலைஞரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது. குறுகிய காலத்தில் தனது அபாரத் திறமையால் முன்னணி விதூஷியாக வலம் வருகிறார்.

ராக ஆலாபனையை  கமகக் குழைவுகளுடன் வழங்குவது, மத்தாப்பு சிதறல் மாதிரி கல்பனா ஸ்வரங்களை வண்ண மயமாகப் பாடுவது, கடினமான ராகம், தானம், பல்லவிகளை மிகவும் ரசிக்கதக்க முறையில் வழங்கி ரசிகர்களை குஷிப் படுத்துவது இவையெல்லாம் இவருடைய சங்கீதத்தின் மேன்மையாகும்.


இவர் முன்னனி வயலின் கலைஞரான  விட்டல் ரங்கனை திருமணம் செய்துகொண்டு  தமிழ்நாட்டு மருமகளாக இசைத்துறையில் முத்திரைப் பதிக்கிறார். இந்த இளம் தம்பதி சேர்ந்து வயலின்   இசை நிகழ்ச்சிகளை  அளித்து வருகின்றனர். க்ருதி பட்டின் வாய்ப்பாட்டு கச்சேரிக்கு விட்டல் ரங்கன் பக்க பலமாக இருந்து, பக்க வாத்ய கலைஞராக பங்கேற்று கச்சேரியை மெறுகேற்றுகிறார்.

டாலர் தேசத்து வசீகரா!


வித்வான் சந்தீப் நாராயணின் அம்மா, விதூஷி ஷோபா நாராயண் தன்  வீட்டில்  குழந்தைகளுக்கு இசை பயிற்றுவித்து வந்தார். அவர் பாட்டு சொல்லிக் கொடுப்பதைக் கேட்டு, சந்தீப் இம்மி பிசகாமல் பாடுவதைக் கண்டு அக மகிழ்ந்தார். சந்தீப்பின் நான்காவது வயதில் முறைப்படி அவருக்கு இசை கற்பிக்கத் தொடங்கினார்.

பெற்றோர் இருவருமே பாடகர்கள். இவருடைய சகோதரர்கள் இருவரும் புல்லாங்குழல் மற்றும் மிருதங்க வித்வான்கள். வீட்டில் சங்கீதம் எப்பொழுதும் ஒலித்துக்கொண்டிருக்கும் சூழல். இதுவே, சந்தீப் இசை கற்க ஏதுவாக அமைந்தது. தந்தை கே. எஸ். நாராயண் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் 1980ல் சவுத் இந்தியன் ம்யூஸிக் அகாடமி (SIMA) என்ற அமைப்பைத் தொடங்கினார். இது அந்த ஜில்லாவின் கர்நாடக இசைக்கான முதல் சபை என்பது குறிப்பிடத்தக்கது.

1996 வருடம் சந்தீப்பின் முதல் கச்சேரி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. இசை மீது இவருக்கு இருந்த காதல், ஈடுபாட்டைக் கண்ட அவரது பெற்றோர் இவரை, பள்ளி விடுமுறை நாட்களில் சென்னைக்கு அனுப்பினார்கள். இந்தியாவில், பிரபலமான வித்வான் கல்கத்தா கிருஷ்ணமூர்த்தியிடம் இசை கற்றார். பிறகு சங்கீத கலாநிதி சஞ்சய் சுப்ரமணியன் அவர்களிடம் சேர்ந்து இசையின் பலவித நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்து கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தார். சஞ்சய்  சுப்ரமணியன் அவர்களும் கல்கத்தா கிருஷ்ணமுர்த்தி அவர்களின்  மாணவர்தான்.

சபாக்கள் முதலில் இந்த அமெரிக்க இளைஞருக்கு வாய்ப்பு தர மிகவும் தயங்கினர். பிறகு, இவருடைய அபாரத் திறமையைக் கண்டு வியந்து, போட்டி போட்டுக்பலரும் வாய்ப்புக்களை வாரி வழங்கினார்கள்.
2006ம் வருடம் இவர் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து சென்னைக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்தார். இவர் செய்த 'ரிவர்ஸ் மைக்ரேஷன்' அந்நாளில் பெரிதும் பேசப்பட்டது. அதன் பிறகு பலர் அமெரிக்காவிலிருந்து கர்நாடக இசையின் தலைநகராமான சென்னைக்கு குடிபெயர்ந்தாலும், இந்த விஷயத்தில் இவர்தான் எல்லோருக்கும் முன்னோடி.

இவருடைய சங்கீதத்தின் சிறப்பு, ராக லக்ஷணத்தை அதன்  ஜீவ ஸ்வரங்களுடன் மிக அழகாக ஆலாபனையில் கொண்டு வருதல், ப்ருகாக்கள் நிறைந்த சங்கதிகள், அபூர்வ, வக்ர ராகங்களை அநாயசமாகக் கையாள்வது, பிரிமிக்கத்தக்க ஸ்வரப் ப்ரஸ்தாரங்களை அள்ளித் தெளிப்பது போன்ற அம்சங்களாகும். மார்கழி சங்கீத ஸீஸனில் இவர் பாடாத சபாக்களே இல்லை எனலாம். பல நாடுகளுக்குச் சென்று கச்சேரிகளும் சிறப்பு வகுப்புகளும் நடத்தி வருகிறார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பரத நாட்டியக் கலைஞர் ராதாவை (ஆன்மீக குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் மகள்) மணந்து தமிழ்நாட்டின் மாப்பிள்ளையாகி விட்டார் இந்த இசைப் பேரொளி.

உலகம் போற்றும் வாலிபக் கலைஞர்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலிருந்து வந்த மற்றொரு நட்சத்திர வித்வான் ராமகிருஷ்ணமூர்த்தி  ‘ராம்கி’யின் இசை ஆர்வத்தைக் கண்டு, அவரது தாயார் அவரை 7 வயதிலேயே குரு பத்மா குட்டி அவர்களிடம் இசை பயில அனுப்பினார். மாணவர்கள்  அடிப்படை விஷயங்களை நன்றாகக் கற்க வேண்டும் என்ற குருவின் மிகக் கண்டிப்பான அணுகுமுறை, சித்தாந்தத்தின் வாயிலாகக் கற்ற பாடங்கள், இவருக்கு பின்னாளில் வெற்றிக்கனியைத்  தட்டிச் செல்வதற்கு ஏதுவாக இருந்தது.

2001ல் இவர் வயலின் வித்வான் டெல்லி சுந்தரராஜன், வித்வான்கள் வைரமங்கலம் லக்ஷ்மி நாராயணன், ஸி. ஆர். வைத்தியநாதன்,  செங்கல்பட்டு ரங்கநாதன் ஆகியோரிடமிருந்து அடுத்த கட்ட இசை நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். இசைதான் தனது வாழ்க்கை என்ற தன் முடிவில் அவர் தீவிர நம்பிக்கை வைத்திருந்தார். 2011ல் கலிஃபோர்னியாவில் பட்டப் படிப்பை முடித்த கையோடு சென்னையில் நிரந்தரமாகக் குடியேறினார். தற்போது, பிரபல வயலின் வித்வான் ஆர்.  கே. ஸ்ரீராம் குமாரிடம் இசைப் பயின்று வருகிறார்.

கச்சேரி ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே இவர்  ரசிகர்களைக் கவர்ந்து விடுவார். புன்னகையுடன் கூடிய இவர் சங்கீதம் கவர்ச்சிகரமானது. இவரது கச்சேரியின் வெற்றிக்கு வழி வகுப்பது அடிநாதமாக இருக்கின்ற இவருடைய குரலின் இனிமைதான். ராக, ஸாஹித்ய பாவங்கள், தெள்ளத்தெளிவான உச்சரிப்பு, பாரம்பரிய சங்கதிகள், சக கலைஞர்களைப் பாராட்டுதல், லயம் மிகுந்த கல்பனா ஸ்வரங்கள் போன்ற அம்சங்களால் சங்கீத உலகில் இன்று இவர் கொடி கட்டிப் பறக்கிறார். பக்தி ராகங்களை இவர் மெய்மறந்து உருகிப் பாடி, ரசிகர்களை ஒருவித மோன நிலைக்கு அழைத்துச் சென்று விடுவார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வளைகுடா நாடுகளில் அடிக்கடி கச்சேரிகள் செய்து வருபவர்.


மியூசிக் அகாடமியின் சிறந்த ஸீனியர் பாடகர் விருதை 2016ல் பெற்றார். மார்கழி சங்கீத ஸீஸனில் எல்லா சபாக்களிலும் இவருடைய கச்சேரிக்குக் கூட்டம் அலைமோதுவதில் வியப்பொன்றுமில்லை.


அயல்நாட்டிலிருந்து வந்து தமிழ்நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு தமிழ் நாட்டு மாப்பிள்ளையாகி விட்டார்.
மூர்த்தி சிறிதானாலும் இவரது கீர்த்தி பெரியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com