எமிலியாவை ஈர்த்த வேத கோஷங்கள்!

எமிலியாவை ஈர்த்த வேத கோஷங்கள்!

கடல் கடந்து விரியும் நம் கலை

கலைஞர்கள் – குருமார்கள் – கலை நிறுவனங்கள்

ஆற்றும் அற்புதப் பணி! ஓர் அறிமுகம்.

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ஸ்லோவேனியா (Slovenia) நாட்டில் வசிக்கும் எமிலியா கெர்கன் (Emilija Kercan),  நமது ஆன்மிகச் சிந்தனைகள், அத்வைத சித்தாந்தம், பக்தி, பஜனைப் பாடல்கள், கர்நாடக இசை மற்றும் வேத கோஷங்களால்  ஈர்க்கப்பட்டு 2002ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு விஜயம் செய்ய ஆரம்பித்தார்.

கேரளாவில் இருக்கும் 'சின்மயா விஷ்வ வித்யாபீட்'  பல்கலைக் கழகத்தில் குருகுலவாச முறையில் ஆறு வருடங்கள் பயின்று, அத்வைத வேதாந்த பாடத்தில்  'போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமா'  பெற்றார். "Bhagavathgeetha for Westerners by Jack Hawley" எழுதிய புத்தகத்தை 2010ம் ஆண்டு இவர் தன் தாய்மொழியில் மொழிபெயர்த்தார். கர்நாடக சங்கீதம் மற்றும் அத்வைத சித்தாந்தத்தில் உண்டான அதீத ஈடுபாட்டால், தன் சகோதரருடன் இணைந்து 'கோபுரம்' என்ற இலாப நோக்கு இல்லாத ஒரு தொண்டு நிறுவனத்தைத் தன் நாட்டில் 2010இல் நிறுவி, வேதம் ஓதுதல், அத்வைத  வேதாந்தக் கல்விக்கான பயிற்சிகளை அளித்து வருகிறார். கர்நாடக இசை பற்றிய விரிவுரை மற்றும் கச்சேரிகளையும் நடத்துகிறார். தொலைத் தொடர்பில் பட்டபடிப்பு படித்த இவர், தன் சகோதரருடன் சேர்ந்து 50 பொறியாளர்களைக் கொண்ட ஒரு மென்பொருள் நிறுவனத்தை நிறுவி, நிர்வாக இயக்குநராகப் பணிபுரிந்தும் வருகிறார்.

 நம் நாட்டின் பஜனை சம்பிரதாய இசையினாலும் வேதாந்த தத்துவங்களாலும் வெகுவாக ஈர்க்கப்பட்டு 2002ம் வருடம் முதல் வருடாவருடம் ஸ்ரீ சத்ய பாபா ஆசிரமத்துக்கு வரத் தொடங்கிய இவர், அங்குதான் கர்நாடக இசையை முதன் முதலில் கேட்டு மகிழ்ந்து, இந்த அரிய கலையைக் கற்க வேண்டும் என்ற முடிவுக்கும் வந்தாராம்.

தற்பொழுது சித்ரவீணா ரவிகிரண் அவர்களிடம் இசை பயின்று வரும் எமிலியா கெர்கன்,  “என் வீட்டில் சித்ரவீணை இருக்கிறது. அதைக் கற்று தேர்ந்து கச்சேரி செய்ய வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. என்னுடைய  சொந்த ஊரான Ljubljanaவில் 2018இல் கச்சேரி செய்தேன். பிறகு பிற நகரங்களிலும் சுற்றியிருக்கும் பல நாடுகளிலும் கச்சேரிகள் செய்துள்ளேன். என் குரு பெரிய நாடுகளிலும், பெரிய அரங்கத்திலும் பாடுவதற்கு எனக்குப் பயிற்சியளித்து தயார் செய்து வருகிறார். விரைவில் அது கைகூடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்று தன் எதிர்கால லட்சியத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

கர்நாடக இசைக்கும்  மேற்கத்திய இசைக்கும் உள்ள வேறுபாடுகளைக் குறித்த தமது கருத்துகளையும் பகிர்ந்துகொள்கிறார்.

“உலகளாவிய இசைக்கு மொழி எதுவும் கிடையாது என்றாலும், ஒரு புதிய இசை வடிவத்தைக் கற்றுக்கொள்ளும்பொழுது, நாம் நமது மூளையை reprogram செய்து, முதலில் ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்ள நம்மைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

மேற்கத்திய வழிமுறையில் இசை அளவு, குறிப்பு, அதிர்வெண்கள் ஒரு  அறுதிக்கு உட்பட்டது. ஆனால், கர்நாடக ராகம், ஸ்வரங்கள் நாம் தேர்வு செய்யும் சுருதியின் சட்ஜத்தைப் பொருத்தே அமையும். மேல் நாட்டு இசைக்கு அடிப்படையாக இருப்பது harmony & tonic progression.

கர்நாடக இசைக்கு அடிப்படை melody மற்றும் single note played in specific order. ஸ்வரங்களை வரிசைப்படுத்துவது, ஸ்வரக் கோர்வைகளை ஓர் அழகான மாலையாகத் தொடுப்பது, விதவிதமான சங்கதிகள் எல்லாம் சேர்ந்தே ஒரு ராக வடிவமாக உருப் பெறுகிறது. ஒரு ராகத்தைப் புரிந்துகொள்வது என்பது ஒரு மனிதரைப் புரிந்துகொள்வது போல. பல வருடங்கள் ஒரு ராகத்தைக் கற்றாலும் இன்னும் புதிதாகக் கற்றுக் கொள்ள வாய்ப்பு இருப்பதுதான் இந்த பாரம்பரிய இசையின் தனிச் சிறப்பு.

எனக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பது கர்நாடக இசையின் கமகங்கள்தான். மேற்கத்திய இசையில் நேர்கோட்டில் வரும் சங்கதிகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த இசையின் கமகங்களுக்கு நிகராக எதுவுமே கிடையாது. தோடி ராகத்தில் வரும் 'Ga'வுக்கும், பியானோவில் வரும் 'Ga'வுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. வகுப்பில் ராக ஆலாபனை பாடும்பொழுதோ, கேட்கும்பொழுதோ, அதை ஸ்வரப்படுத்துவதற்கு என் காதுகள் முதலில் பழகவில்லை. மிகவும் பிரயத்தனப்பட்டு notation எழுதக் கற்றுக்கொண்டேன்.
பாடிக் கொண்டே தாளம் போடுவது என்பது கர்நாடக இசையின் மற்றுமொறு சிறப்பம்சமாகும். கடினமான லயக் கோர்வைகளுடன் பாடுவது முதலில் சிரமமாக இருந்தாலும் பாடப் பாட அது பழகிவிடுகிறது.

கர்நாடக இசையில் இருக்கும் மனோதர்மம் சார்ந்த ஆலாபனை, நிரவல், ஸ்வரப்ரஸ்தாரங்கள் மேற்கத்திய இசையில் இல்லை. கர்நாடக இசை செவி வழியாக குரு முகாந்திரமாக தலைமுறை தலைமுறையாகக்  கற்பிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தலைமுறையினரும்  புதுப்புது யுக்திகளைக் கையாண்டு இந்த இசைக்காக பாடுபட்டு இதை உயர்ந்த நிலைக்கு நகர்த்தி செல்கிறார்கள்.”

நமது பாரம்பரிய இசை மீது எமிலியா வைத்திருக்கும் மதிப்பும் அவரது கருத்துகளின் ஆழமும் நன்றாகவே புலப்படுகின்றன.

“உங்கள் நாட்டில் கர்நாடக இசைக்கு இருக்கும் வரவேற்பு  எப்படி?” என்று கேட்டதற்கு,

“சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பெரும்பாலான ரசிகர்கள் முதன் முதலாகக் கேட்ட மாத்திரத்தில் இந்த அரிய இசைக்கு மயங்கி விடுகிறார்கள். என்னுடைய கச்சேரிகளில் ஒவ்வொரு ராகம் மற்றும் பாடல்களைப் பற்றி சிறிய விளக்கவுரை கொடுத்து ரசிகர்களுக்குப் புரிய வைக்கிறேன். அதனால் ரசிகர்கள் இந்த தெய்வீக இசையின் மேன்மையைப் புரிந்துகொண்டு ரசிப்பதைப் பார்க்கும்போது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று உற்சாகத்துடன் பகிர்ந்துகொள்கிறார்

“இந்தியாவில் உங்களுக்குப் பிடித்த விஷயம் பற்றி…” என்று கேட்டால், “இந்தியாவின் பாரம்பரியமிக்க கலாச்சாரம், அத்வைத வேதாந்தம், கர்நாடக இசை, பல விதமான  மொழிகள் எல்லாமே பிடிக்கும்.  சென்னையைப் பொருத்தவரை பல சபாக்களில் நடக்கும் கச்சேரிகள் மற்றும் விளக்கவரை (lec-dem) நிகழ்ச்சிகள் மிகவும் பிடிக்கும். மார்கழி சங்கீத ஸீஸனில் sabha hopping செய்து பல கலைஞர்களின் இசையிலிருந்து நுணுக்கமான விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது,” என்கிறார் எமிலியா.

உலகின் எந்த மூலையில் பிறந்தால் என்ன? ஆர்வம் மட்டும் இருந்தால், பாரம்பரியமிக்க நம் சங்கீதம் எவருக்கும் கைகூடும் என்பதற்கு எமிலியா ஓர் எடுத்துக்காட்டு!

அப்படித்தானே ரசிகர்களே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com