மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!

கடல் கடந்து விரியும் நம் கலை

கலைஞர்கள் – குருமார்கள் – கலை நிறுவனங்கள்

ஆற்றும் அற்புதப் பணி! ஓர் அறிமுகம்.

கர்நாடக இசை வாய்ப்பாட்டு  கலைஞர், இசை ஆசிரியர், ஆரோஹணா ஆர்ட்ஸ் அகெடமியின் நிறுவனர், SciArt Services என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர், சங்கீத உபன்யாசகர், நாட்டிய நிகழ்ச்சிகளின் இசை அமைப்பாளர், மெல்ஹார்மனி என்ற தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், விஸ்கான்சின் மாநில ஆர்ட்ஸ் போர்ட் என்ற அமைப்பின் கர்நாடக இசைப் பிரிவின் மாஸ்டர் ட்ரெயினர், அஸோஸியேட் பேங்க்கின் ஸீனியர் வைஸ் பிரிசிடென்ட் போன்ற பன்முகங்களைக் கொண்டவர் அமெரிக்காவில் வசிக்கும் வனிதா சுரேஷ் அவர்கள்.

மேலும், இவர், "தாள ஆச்சார்யா" என்ற மென் பொருளைத் தனது கணவர் சுரேஷூடன் இணைந்து உருவாக்கி உள்ளார். சமூகத் தொண்டுக்காக 2021இல் பிரிசித்தி பெற்ற 'Amy Award' விருதினைப் பெற்றவர். இவரது படத்துடன் கட்டுரை வெளியிட்டு சிறப்பித்துள்ளது Madison Magazine.

இத்தனை பெருமைகளை கொண்டபோதும் மிகவும் அமைதியாகவும் எளிமையாகவும் காட்சியளிக்கும்  வனிதா சுரேஷ். அவர்கள் நமது கேள்விகளுக்கு அளித்த பதில்கள் இதோ…

SciArt Services என்ற அமைப்பை உருவாக்கும் எண்ணம் எவ்வாறு தோன்றியது ?

நானும் எனது கணவர் சுரேஷும் SciArt என்ற அமைப்பை 2009ல் ஆரம்பித்தோம். எனது கணவர் ஐ.ஐ.டி மற்றும் அமெரிக்காவின் புகழ்பெற்ற கார்னெல் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, இப்பொழுது மேடிசன் பல்கலைக்கழகத்தில்  பேராசிரியராகப் பணி புரிகிறார். நான் கணினித் துறையில் மேற்படிப்புப் பெற்று பணியாற்றி வருகிறேன். எங்கள் இருவருக்கும் விஞ்ஞானமும் கர்நாடக இசையும் மிகவும் பிடித்தமான விஷயமானதால் இந்த அமைப்புக்கு SciArt Services என்று பெயரிட்டு ஆரம்பித்தோம்.

இந்த அமைப்பு சமூகத்துக்கு எவ்வாறு உதவி செய்துகொண்டு வருகிறது?

சுரேஷ், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக, சுலபமாகக் கணக்கு மற்றும் கணினிப் பாடங்களைக் கற்பதற்காக ஒரு CADJS  என்ற அப்ளிகேஷனை உருவாக்கி, அதை அமெரிக்க ஏழை மாணவர்களுக்கு இலவசமாகப் போதித்தார். இது அவர்களுக்குக் கல்லூரி படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு  உபயோகமாக  இருந்தது.

என்னுடைய 9வது வயதில் தந்தையை இழந்த தருணத்தில் எனது அம்மா எங்களைப் படிக்க வைப்பதற்கு நிறைய கஷ்டப்பட்டார். சுரேஷின் குடும்பப் பொருளாதார நிலைமையும் இதே மாதிரிதான். இதை மனதில் கொண்டு, நாங்கள்  இருவரும் இந்த அமைப்பின் மற்ற உறுப்பினர்களின் உதவியுடன் அமெரிக்கா மட்டும் இல்லாமல், இந்தியாவில் இருக்கும் ஏழை மாணவர்களின் பட்டப் படிப்பிற்கும் உண்டான செலவை ஏற்று உதவி செய்துகொண்டு வருகிறோம்.

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில், 'விஜய நவராத்திரி விழா' என்று ஒரு நிகழ்ச்சியை, 30க்கும் மேலான கலைஞர்களை வைத்து இந்தியாவில் நடத்தி, அதன் மூலம் வந்த கொடைப் பணத்தை சமுதாயத்தில் அடிமட்டத்தில் இருக்கும் குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்று உதவி செய்தோம்.

இந்தக் குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் எல்லோரும் மிக உயர்ந்த பதவியில் இருந்துகொண்டு தன்னார்வத் தொண்டர்களாக, சேவை மனப்பான்மையுடன் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

என் தந்தை வெங்கட்ராமனின் நினைவாக  இசை மேதைகள் வித்வான் டி கே. மூர்த்தி(2020), வித்வான் குருவாயூர் துரை(2021), எம். சந்திரசேகர் (2022) ஆகியோருக்கு வழங்கினோம். 'ரசிக சிரோன்மணி' என்ற பட்டத்தை கர்நாடக இசையின் மேம்பாட்டுக்காக உழைத்தவர்களுக்கு வழங்கினோம்.`

மெல்ஹார்மனியின் கீழ் கிழக்கு மேற்குலகின் உயர்ந்த இசை அமைப்பாளர்கள் விழாவை ஏற்படுத்தியுள்ளோம். அதற்கு பெயர் ,
Twin Composers Festival. ஊத்துக்காடு வேங்கட கவி-Bach, தியாகராஜா-Mozart, தீக்ஷிதர்-Beethoven, சாஸ்திரி-Schubert, ஸ்வாதித்திருநாள்–Mandelssohn. இப்படி, இந்த இசை விழாவின் நோக்கமே இருவித உன்னதமான இசை வடிவத்தையும் ஒன்றுபடுத்தி, இந்த அரிய படைப்புகளின் சிறப்பை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே.

கர்நாடக இசை அமெரிக்காவில் பிரபலமாக இருப்பதற்கு முக்கியக் காரணம் என்ன?

கணினித் துறையில் Agile Methodolgy என்று ஒரு அணுகுமுறை உண்டு. அதை  இசை கற்பிக்கும் முறையோடு ஒப்பீடு செய்தால், 'பராடக்ட் ஓனர்' என்று இங்கே குருவைச் சொல்லலாம். 'ஸ்க்ரம் மாஸ்டரு'க்குப் பெற்றோர்களை ஒப்பிடலாம். 'டீம் மெம்பரு'க்கு மாணவர்களை ஒப்பிடலாம். கர்நாடக இசையின் வளர்ச்சிக்குக் குரு, பெற்றோர்கள், மாணவர்களின் ஈடுபாடும் ஒத்துழைப்பும் இன்றியமையாதது.

இந்தியாவில் இருப்பது போன்ற  கட்டமைப்பு இங்கு இல்லைதான். ஆனாலும் க்ளீவ்லாண்ட் த்யாகராஜ ஆராதனையின் செயலர்  வி.வி.சுந்தரம் போன்ற இசை ஆர்வலர்களின்  அயராத உழைப்பினால், கர்நாடக இசையைக் கற்றுக்கொள்ளும் ஆர்வமும், அதனால் பல  சபாக்களும் முக்கிய நகரங்களில் வளர்ந்தன. நான் வசிக்கும் விஸ்கான்ஸின் மாநில அரசும் நம்முடைய பாரம்பரிய இசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இந்த மாநிலத்தின் முதல் கர்நாடக இசையின் 'மாஸ்டர் ட்ரெயினர்' என்ற பதவியை எனக்கு அளித்தார்கள்.

உங்களுடைய இசைப் பயணம் பற்றி?

என் பாட்டி மஹா வித்வான் ஸ்ரீ அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தார். என் பெற்றோர்களுக்கு சங்கீதம் என்றால் உயிர். சித்திகள் இருவரும் ரேடியோவில் கச்சேரி செய்வார்கள். வீட்டில் எப்பொழுதும் கிராமஃபோன் இசைத்தட்டு, வானொலி மூலமாகக் கர்நாடக இசையைக் கேட்போம். எனது 9வது வயதில் வீணை இசையை வித்வான்கள் G ரங்கராஜன் மற்றும் R ஸ்ரீநிவாசனிடமும் கற்றேன். ஸ்ரீரங்கம் கண்ணனிடம் முறைப்படி வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டேன்.

சென்னைக்கு வந்த பிறகு வித்வான் விஜய் சிவாவின் தாயார் அகிலா சிவாவிடமும், அமெரிக்கா வந்த பிறகு மதுரை மணி அய்யரின் சீடர் வித்வான் டி.என். பாலுவிடமும், லால்குடி கிருஷ்ணன், விஜய லக்ஷ்மி, சங்கரி கிருஷ்ணன் போன்ற விற்பன்னர்களிடமிருந்தும்  வாய்ப்பாட்டைக் கற்றுக்கொண்டேன். இப்பொழுது 10 வருடங்களாக சங்கீத சாம்ராட் வித்வான் சித்ரவீணை ரவிக்கிரணிடமும், ஆச்சார்ய பிதாமஹா வித்வான் சித்ரவீணை நரசிம்மன் அவர்களிடம்  பயின்று வருகிறேன்.  2014 முதல் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பல கச்சேரிகளை, குறிப்பாக மார்கழி இசை விழாவில் வழங்கியுள்ளேன். சங்கீத உபன்யாசத்தையும் செய்ய ஆரம்பித்துள்ளேன்.

இசையைக் கற்பிக்கும் ஆசிரியராக உங்கள் பணியைப் பற்றி?

15 வருடங்களாக 'ஆரோஹணா' என்ற இசைப் பள்ளியை ஆரம்பித்து  இசையைக் கற்றுக்கொடுத்து வருகிறேன். பல நேரங்களில் இரவு பத்து மணிக்கு மேல் கணினி மூலமாக வெகு தொலைவில் வசிக்கும் மாணவர்களுக்குப் பாடம் எடுப்பேன். என்னுடைய மாணவர்கள் பலர் சரளி வரிசையிலிருந்து சென்னை சங்கீத ஸீஸனில் கச்சேரி செய்கின்ற நிலைக்கு முன்னேறியிருக்கிறார்கள்.

கர்நாடக இசைக்கு ஈடு இணை கிடையாது. இந்த இசையை ஆர்வம் இருந்தால் எவரும், எந்த வயதிலும் கற்றுத் தேர்ந்து கச்சேரி செய்யலாம். இதற்கு என்னுடைய இசைப் பயணமே ஓர்  உதாரணம் என்று நான் கருதுகிறேன். நான் அமெரிக்காவில் நியூயார்க், டல்லஸ், சிகாகோ, சேன் ஹுயூஸே, க்ளீவ்லாண்ட் போன்ற பல நகரங்களிலும் கர்நாடக இசையின் தலைநகரமான சென்னையில் கிருஷ்ண கான சபா, பிரம்ம கான சபா, சென்னையில் திருவையாறு, கர்நாட்டிகா போன்ற பிரசித்தி பெற்ற சபாக்களிலும் மற்றும் பெங்களூரு நகரத்திலும் பல கச்சேரிகளை செய்துள்ளேன்.  

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதை நிரூபித்துள்ளார் இந்த விதூஷி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com