குருவே மெச்சும் இளம் கலைஞர் ரசிகா!

குருவே மெச்சும் இளம் கலைஞர் ரசிகா!

கடல் கடந்து விரியும் நம் கலை

கலைஞர்கள் – குருமார்கள் – கலைநிறுவனங்கள்

ஆற்றும் அற்புதபணி ! ஓர் அறிமுகம்.

 “ரசிகா சிவக்குமார் அமெரிக்காவிலிருந்து தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி என்னிடம் சங்கீதம் பயிலும் ஒரு மாணவி. அவருடைய தாய் தந்தை இருவருமே இசைக்கலைஞர்கள். தந்தை ஒரு மிருதங்கக் கலைஞர். தாய் சங்கீதம் பயின்றவர். அவர்கள் 'ஹம்சநாதம்' என்ற ஒரு இசைப்பள்ளியை நடத்தி வருகிறார்கள். அவர்களின் மகளான ரசிகா மிகவும் ஆர்வமுள்ள, துடிப்பான ஒரு மாணவி. ஒரு பாடலைக் கற்றுக் கொடுத்த அடுத்த நிமிடம் அதற்கான நொட்டேஷனை எழுதித் தயாராக இருப்பாள். சிஷ்ய குலத்தில் அதாவது என்னுடைய சிஷ்யர்களுக்கு என்ன தேவைப்பட்டாலும் உடனடியாக உதவ முன் வரும் ஒரு நல்ல மாணவி. சமயத்தில் எனக்கே அந்த  நொட்டேஷன் தேவைப்படும்.

இந்த வருடம் தவில் வித்வான் வலையப்பட்டி சுப்பிரமணியம் அவர்களின்  இசை அமைப்பானது ரசிகாவை இளம் நட்சத்திரமாகத் தேர்ந்தெடுத்து விருது வழங்கி பாராட்ட இருக்கிறது. நல்ல திறமையும் ஞானமும் உள்ள பெண். நடனம் கற்றுக்கொள்கிறாள். வயலின் கற்றுக்கொள்கிறாள்.

எதிர்காலத்தில் மனோதர்மம் நன்கு வளர்ந்து பரிமளிக்க வாழ்த்துகிறேன்!” என்று தன் சிஷ்யை பற்றி பெருமிதத்தோடு கூறுகிறார். சங்கீத கலாநிதி நெய்வேலி சந்தான கோபாலன்.

திறமை வாய்ந்த அந்த இளம்பெண்ணைச் சந்திப்போமா?

ரசிகா சிவக்குமார் அமெரிக்காவின் பிலடெல்ஃபியா நகரில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 14 வயது நிரம்பிய யுவதி. சிறு குழந்தையாக இருக்கும்போதே ராகங்களை அறியும் திறன் பெற்ற இவர், தாய் உமா சிவகுமார் அவர்களிடமிருந்து மூன்று வயது முதல் கர்நாடக சங்கீதம் பயிலத் தொடங்கினார். பின்னாளில், ராஜேஸ்வரி பட் அவர்களிடமிருந்து பயிற்சி பெற்று வருகிறார். சங்கீத கலாநிதி நெய்வேலி சந்தானகோபாலன் அவர்களிடம் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சங்கீதம் பயிலும் இவர், பல மொழிகளில், பல்வேறு வாக்கேயக்காரர்களின் கிருதிகளைக் கற்பதோடு மட்டுமல்லாமல், ராகம், ஸ்வரம் மற்றும் பல்லவி பாடுவதிலும் நுணுக்கமான சங்கதிகளிலும் குருவின் வழிகாட்டுதலைப் பெறுகிறார். ரசிகாவின் இசை வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டும் அவருடைய குரு அவருக்குத் தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறார்.

தொழில்நுட்ப உதவியோடு சங்கீதம் பயின்றாலும் நேர மாற்றங்கள் எப்போதுமே ஒரு சவாலாக இவருக்கு இருந்ததில்லையாம். இரவு நேரமாக இருந்தாலும் சரி அதிகாலையாக இருந்தாலும் சரி சங்கீதம் கற்பதை சந்தோஷமான தருணமாகவும், தனக்குச் செறிவூட்டும் ஒரு அம்சமாகவும் பார்க்கிறார். கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து கச்சேரிகள் வழங்கிக்கொண்டிருக்கும் ரசிகா, சென்னை இசை விழாவில் கடந்த நான்கு வருடங்களாகப் பங்கு கொள்கிறார். அமெரிக்காவின் தலை சிறந்த  இசை விழாவான க்ளீவ்லாண்ட் ஆராதனை உட்பட,  பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்ற ரசிகா, அவருடைய குரு சொன்னது போல பரதநாட்டியம் மற்றும் இந்திய, மேற்கத்திய வயலின் இசையும் பயின்று வருகிறார். பள்ளி இசைக் குழுவில் 'முதல் வயலின்' வாசிப்பவர்.  நாடளவில் நடத்தப்படும் இசைக்குழுவில், தந்தி வாத்தியங்கள் இசைக்கும் குழுவில் ஒருவராக பங்கேற்றும் வருகிறார். 

ரசிகாவின் கலை வளர்ச்சியில் இசை ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இசையின் நுணுக்கங்களை அறிந்து, உணர்ந்து, எதிர்காலத்தில் ஒரு தலை சிறந்த கர்நாடக சங்கீதக் கலைஞராக திகழ கடுமையாக உழைக்கிறார் ரசிகா.

பள்ளிப்படிப்போடு கூடுதலாக இவ்வளவு விஷயங்களைக் கற்றுக் கொள்வதை எப்படி சமாளிக்கிறார் என்று கேட்டபோது, "நான் மிகுந்த கவனத்தோடு, நேரத்தை மிகச் சரியாகப் பயன்படுத்துகிறேன். பள்ளியில் எனக்கு கிடைக்கும் நேரத்தில் என்னுடைய வீட்டுப் பாடங்களை முடித்து விடுவதால், வீட்டுக்கு வந்தவுடன் சங்கீதத்தில் முழுவதுமாக கவனம் செலுத்த முடிகிறது. அமெரிக்காவில் இருந்துகொண்டு இந்தியாவில் இருக்கும் என்னுடைய குருவிடமிருந்து சங்கீதம் பயில்வதால், இரவு நீண்ட நேரம் விழித்திருப்பதும் அதிகாலையில் சீக்கிரம் எழுந்துகொள்வதும் மிக அத்தியாவசியமாகிறது. சில சமயங்களில் சவாலாக இருந்தாலும் இதைப் பாரமாக நான் எண்ணுவதில்லை. அதனால் சந்தோஷமாகச் செய்ய முடிகிறது.

பல்வேறு மொழிகளில் கற்கும் கிருதிகளின் அர்த்தங்களை உணர நீங்கள் எடுக்கும் முயற்சி என்ன?

என் தாய் மொழி தமிழ். தமிழில் என்னால் பேச, எழுத, படிக்க முடியும்.  புதிய மொழிகளை அறிவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. கடந்த மூன்று வருடங்களாக சமஸ்கிருத மொழியையும் கற்று வருகிறேன். இது, எனக்கு சமஸ்கிருத பாடல்களில் உள்ள ஆழ்ந்த அர்த்தங்களைக்கூட புரிந்து பாடுவதற்கு உதவியாக இருக்கிறது. என்னுடைய குருவும் ஒவ்வொரு பாடலுக்குமான வார்த்தைகளை சரியாகப் பிரித்துப் பொருளை உணர்த்துவார். நான் ஆன்லைனில் கிடைக்கும் உபகரணங்களைப் பயன்படுத்தியும், புத்தகங்களை படித்தும் பொருள்  உணர்ந்து கொள்கிறேன்.

பரதநாட்டியமும் நீங்கள் கற்கிறீர்கள். அதில் உயர்ந்த நிலையை அடைய எண்ணம் உண்டா?

கலாக்ஷேத்திர வழியில் ஷீஜித் நம்பியார் அவர்களிடமிருந்து நான் பரதம் பயின்று வருகிறேன். என்னுடைய முழுக் கவனமும் வாய்ப்பாட்டில் தான் உள்ளது. எனினும் நடனத்திலும் மிகுந்த ஆர்வத்தோடு தொடர்ந்து பயிற்சி

மேற்கொள்கிறேன். என்னை ஆரோக்கியமாக, புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ள அது உதவுகிறது. தொடர்ந்து கற்க விரும்புகிறேன். அதிலும் நான் சாதிப்பேனா என்பதைக் காலம்தான் நிருபிக்க வேண்டும்.

குருவிடமிருந்து நேரடியாகக் கற்கும் மாணவர்கள் பெறும் கவனத்தோடு ஒப்பிடுகையில்,  தொழில்நுட்ப உதவியோடு கற்கும் உங்களுக்கு எத்தகைய குறைபாடுகள் உள்ளன? அதை எப்படி நீங்கள் நிவர்த்தி செய்கிறீர்கள்?

என் குரு நெய்வேலி சந்தானகோபாலன் சார் இடம் கற்பதற்கு நான் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அனைவரையும் அரவணைத்துக் கற்றுத் தருவதில் அவருக்கு நிகர் அவரே. அவர் ஒரு இசைக்களஞ்சியம். எங்கள் அனைவரையும் புதிதாகப் பெரிதாகச் சிந்திக்கத் தூண்டுவார். ஆரம்பகாலத்தில் அவரிடம் சிறிது பயம் இருந்தாலும், அந்த பயம் இப்போது மரியாதையாக மாறியிருக்கிறது. தான் பெற்ற அறிவு, ஞானம் அனைத்தையும் ஒரு ஊற்று போல தன் மாணவர்களுக்கு வாரி வழங்கும் என்னுடைய குருவிற்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com