காக்கைச்சிறகினிலே...

 காக்கைச்சிறகினிலே...

ட் எனும் ஒரு அடிப்பின் சுரீர் என்று ஒரு கொத்தல். இது நடந்தது அவன் தலையில். நடந்த நாள் ஒரு ஞாயிறு மாலை. நடந்த இடம் அவன் வீட்டு வாசலில். நடந்த நேரம் மாலை மூன்று மணி முப்பத்தைந்து நிமிடத்தில். நடத்திக்காட்டியது....? இதற்கு ஒரு கணிப்பு எடுத்தால் வரக்கூடிய பதில்கள்  மனைவி - இது ஐம்பது விழுக்காடுகளுக்கு மேல் உள்ள பதிலாக இருக்கக்கூடும். பின் தந்தை, தாய், நண்பன்.... இப்படிப்பட்ட பதில்களும் இருக்கலாம். ஆனால் இவை எதுவும் சரியானதல்ல. சரியான பதில்....? யாரும் நினைத்துப்பார்க்க முடியாதது. அவனை அப்படித்தாக்கியது ஒரு காக்கை.

அவனின் ஒரு ஞாயிற்றுக்கிழமைக்கான எழுதப்படாத நிகழ்ச்சி நிரல், காலை ஒன்பதுக்கு விழிப்பு, பத்து மணிக்கு எண்ணெய்க்குளியல், பண்ணிரெண்டு மணிக்கு உணவு, ஒரு மணிக்கு ஒரு சின்ன சியஸ்டா, மூன்று மணிக்குக் காஃபி, பின் கைகளில் நொறுக்குத்தீனியுடன் மூன்றரை மணி வாக்கில் வாசலுக்குச்சென்று தெருவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டை உற்சாகமாகப் பார்ப்பது, பின்.... இவை இப்போது தேவை இல்லை.

அன்றும் கைகளில் நிறைய மற்றும் வாயில் ஒரே ஒரு காரா சேவுடன்  அவன் நேரக்கணக்குத் தவறாமல் வாசலுக்கு வந்து நின்ற உடன்தான் அது நடந்தது. சத்தம் போடாமல் ஏதோ ஒரு மரத்தில் மறைந்துகொண்டு பார்த்துக் கொண்டிருந்த அந்த காக்கை, ஒரே சீராக ஜெட் வேகத்தில் மரத்தில் இருந்து ஸ்விஷ் இட்டபடி 45டிகிரி வாக்கில் பறந்து வருவதை இவன் பார்ப்பதற்கு முன்பே, அவசரமாக தன் சிறகினால் இவன் தலையில் அழுத்தமாக ஒரு தட்டுத்தட்டி பின் கூர்மையான அலகால் ஒரே ஒரு குத்து.... அம்மா, உரக்கச் சத்தமிட்டபடி அவன் கைகளிலிருந்த காரா சேவை கீழே சிதறவிட, அதைக்கூட லட்சியம் செய்யாமல் எங்கோ சென்று மறைந்தது.

இது காரா சேவால் நடந்த தாக்குதல் என்றுதான் நினைத்தான். தலை முடியை அகலப்பிரித்து லேசாக ரத்தம் கசியத் தொடங்கி இருந்த தலை காயத்திற்கு மருந்து போட்டுக்கொண்டிருந்த மனைவியிடம் சந்தேகத்தை எழுப்பினான்.

"நீ என்ன நினைக்கிற? காரா சேவிற்காகத்தான் வந்திருக்குமோ..."

"இல்லையா பின்ன... ஒரு தடவை இப்படித்தான், நானும் என் தங்கையும் மொட்டை மாடியில் பேசிண்டிருந்தோம். என் கைகளில் கோகுலாஷ்டமி முறுக்கு. எங்கேயிருந்தோ பறந்து வந்து லபக்குன்னு தூக்கிக்கிட்டு போயிடுத்து ஒரு காக்கா"

" அது சரிதான் லஷ்மி. முறுக்கை தூக்கிக்கிட்டு போயிடுத்து. ஆனா இங்கே அப்படி இல்லியே. காராசேவை பார்த்தும் கண்டுகாம இல்ல போயிடுத்து."

அவன் பேச்சை அதோடு நிறுத்தி இருக்கலாம். விதி யாரை விட்டது.

"அதுக்குக்கூட காராசேவோட டேஸ்ட் சகிக்கவில்லையென்று தெரிஞ்சுபோயிடுத்துன்னு தோணுது"

காக்கா குத்திட்ட இடத்திலேயே ‘நங்’ என்ற சத்தத்தோடு குட்டு ஒன்று விழ, அவன் மறுபடியும் ‘ஆ’ என்று அலறினான்.

மனைவியிடம் நக்கல் அடித்தாலும், காராசேவைதான் தாக்குதலுக்கான காரணம் என்று அவன் முழுமனதாக நம்பியதால், அடுத்த நாள் காலை வழக்கம்போல் ஆபீஸ் கிளம்ப வாசலில் நிறுத்தி இருந்த ஸ்கூட்டர் முன் நின்றான். நடு மண்டை வீக்கத்தால் ஒழுங்காக வாரப்படாத தலையை கைகளால் கோதி சரி செய்யும்போது, எங்கிருந்தோ, இப்போது 30 டிகிரி வாட்டத்தில் பறந்து வந்த காக்கை மறுபடியும் ஒரு அடி மற்றும் குத்து என்று கணக்கு மாறாமல் கொடுத்து விட்டு அவசரமாகச் சென்று மறைந்தது.

அய்யோ.....வலியை விடப் பயத்தால் அதிகமாகக் கத்தியபடி உள்ளே ஓடினான்.

" என்ன ஆச்சு, டிபன் பாக்சை மறந்தாச்சா?" சீரியலிலிருந்து பார்வையை விலக்காத லஷ்மி.

" கா..கா..கா.."

" அட, மத்தியானம் இப்படி கத்தினா சரியா இருக்குமான்னு ட்ரயலா?"

"முட்டாள் லஷ்மி, காக்கா மறுபடியும் அடிச்சு கடிச்சுடுத்து"

" காக்கா கடிக்காதே...புதுசா இல்ல இருக்கு"

" ம்...இந்த ஆராய்ச்சிக்கு இதுவா நேரம். மனுசன் காரணம் புரியாமல் தவிக்கிறேன். வலி வேற உயிர் போறது" தலையை லேசாகத் தடவிப்பார்த்தான்.கைகளில் மெல்லியதாக சிவப்புக்கோடு.

லக்ஷ்மிக்குக் கண்களில் லேசாகப் பயம் தெரிந்தது.

" காக்காயா....மறுபடியுமா? நான் இப்போதானே வெளியே போய் வரேன். என்னை ஒண்ணும் செய்யலியே"

 ••••• •••••

வசரமாக ஆபீசுக்கு போன் செய்தான்.

"ஆமாம் சார், வெளியே வந்தாலே தலையை தாக்குது. ஆமாம், அப்படியேதான்....அதான் லீவு. வரமுடியாது சார்....பயமா இருக்கு"

லீவ் சொல்லிவிட்டு ஜன்னல் ஓரம் அமர்ந்து காக்காய் வருகிறதா என்று பார்க்கத் தொடங்கினான்.

"இங்க பாருங்கோ, அப்பாகிட்டக் கேட்டேன். ரொம்ப சிம்பிள் சொல்யூஷன் கொடுத்துட்டார். கைகளில் வடையோ இல்லை பஜ்ஜியோ நீட்டிப் பிடித்தபடி உங்களை வெளியே போகச்சொல்றார். அப்போ அந்த காக்கா அந்த வடையை எடுத்துகிட்டு போயிடும். அப்புறம் தைரியமா நீங்கப் போகலாமாம்"

லேசாக யோசித்தான். இதுவும் சரியாகத்தான் இருக்கும் போல் தோன்ற

"சரி... நீ பஜ்ஜி ஒண்ணு போட்டு சீக்கிரம் எடுத்துகிட்டு வா...ஆங்...அப்புறம் அது வெங்காய பஜ்ஜியா இருக்கட்டும்"

எது எப்படிப் போனாலும், எப்பேர்ப்பட்ட சமயமாயிருந்தாலும் லக்ஷ்மியால் வாதாடாமல் இருக்க முடியாது.

"அது எதுக்கு. எலிக்குத்தான் வாசனை காட்ட வெங்காயம். இப்போ எலியா பிடிக்கப்போகிறோம்?"

அவனுக்கு வந்த எரிச்சலில் தலையில் அடித்துக்கொள்ள அது காக்கா கொத்திய இடத்தில் பட்டு மறுபடியும் ‘ஆ’ என்று அலறினான்.

லேசான தயக்கத்தோடு சரியான பதில் கிடைக்காத ஏமாற்றத்தோடு பஜ்ஜி போட உள்ளே சென்றாள்.

சுடச்சுட பஜ்ஜி வந்தது. ஒரு நிமிடம் அதன் வாசனையில் ஊந்தப்பட்டு வாயில் பிய்த்துப் போட்டுக்கொள்ளும் ஆசையைச் சற்றே தள்ளி வைத்து வெகு ஜாக்கிரதையாக கைகளில் வெடிகுண்டு இருப்பது போல் முடிந்த வரை கைகளை மிகத் தள்ளிப்பிடித்தபடி வாசலில் கால்களை எடுத்து வைத்தான்.

சட்டென்று பறந்து வந்த காக்கா லபக்கிட்டது.

பல நாள் மலச்சிக்கல் ரிலீஸ் ஆகும் போது ஏற்படும் ஒரு ரிலீப் உணர்ச்சியுடன்.

" லஷ்மி... ஜெயிச்சுட்டேன்... நான் ஜெயிச்சுட்டேன்" என்று கத்தி முடிப்பதற்குள் எங்கிருந்தோ அதே 30 டிகிரி கோணத்தில் பறந்து வந்து அவன் தலையில் அடி மற்றும் குத்து ஒன்றைக் கொடுத்துச்சென்றது அந்த பொல்லாத காக்கா.

"அய்யோ....மறுபடியுமா?"

"என்னங்க இது, ஏதோ ஒரு காக்கைக்குத் தப்பும் தவறுமா பஜ்ஜியைக் கொடுத்து?கொஞ்சம் கூட சாமர்த்தியம் இல்லை"

அவனுக்கு வலியில் கண்களில் கண்ணீர், எரிச்சலில் வார்த்தைகளில்  கணீர். வெகு சத்தத்தோடு பெரியதாகச் சத்தம் இட்டான்.

" ஆமாம், நான் என்ன காக்காய் ஆராய்ச்சியாளனா. இழவு  எல்லா  காக்கையும் ஒரேபோல்தான் இருக்கு. எது  வந்ததுன்னு  எப்படித்  தெரியும்." 

அவசரமாக உள்ளே சென்று கதவை மூடினான்.

அவன் போட்ட கூச்சல் தெருவில் அனைவர் காதிலும் நன்றாக விழ அவரவர் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள்.

அடுத்த வீட்டு நடேசன் " சோழி போட்டு பாத்துரலாம். தெரிஞ்ச சோழி ஜோசியர் இருக்கார். பேசட்டுமா?"

எதிர் வீட்டு சுப்பாராவ்" ஏனுரே, நனபா ஒந்து யோசன. காக்கா மாஸ்க் போடுங்க, ஏமாந்துடும்"

கோடி வீட்டு கோமளா" ஒரு நாயைக் கூட்டிக்கிட்டு வெளியே வாங்க.காக்கா பயந்துபோயிடுமில்ல"

ஒரு யோசனை

" தலையை முதலில் பாதுகாத்துக்கணும். இனிமேல் தலையில் ஹெல்மெட் அணியாமல் வெளியே வர வேண்டாம் "

இது நல்ல யோசனையாகத் தோன்ற, தலையில் ஹெல்மெட் அணிந்தபடி மெதுவாகக் காலை வெளியே எடுத்து வைத்தான். எங்கிருந்தோ  வேகமாக பறந்து வந்து ஹெல்மெட்டின் மீது தன் கடமையை ஆற்றிவிட்டுச் சென்றது.

 மற்ற யோசனைகள் பிடிக்காமல் தானே யோசித்து ஒரு வழியைக் கண்டு பிடித்தான்.  கூட்டத்தின்  நடுவே  தகர  டப்பா,  ஊசி  பாசி  மணி ,  ரேபான் க்ளாஸ் மற்றும் லீ ஜீன்ஸ் ஜான் ப்ளேயர்ஸ் சர்ட்டுடன் அந்தக்கடை வாசலில் அமர்ந்திருந்த நரிக்குறவனிடம் சென்றான்.

"ஒரு வேலை கொடுத்தா செய்வீங்களா?"

"இன்னா சாமி, செய்யமாட்டேன்னு சொல்வேனா? இன்னா செய்யணும் சொல்லு சாமி"

"வீடு பக்கத்திலே ஒரு காக்காவை தீர்த்துகட்டணும்" தலையில் ஹெல்மெட் சினிமா மொட்டை வில்லனின் லுக் கொடுக்க, தீர்த்துகட்டணும் என்ற பிரயோகம் மேலும் சந்தேகத்தை வலுப்படுத்த, நரிக்குறவன்  அவனைச்  சந்தேகத்துடன் பார்த்தான். பின்

" ஆவர்திக்கில்ல சாமி. ஓணான், எலி, புறா, குருவி  என்  பூனையை  ஏன் மனுசங்களைக்கூட  அடிப்போம்.  ஆனா காக்காவை மட்டும் தொடமாட்டோம். "

செய்வதறியாமல் ஹெல்மெட் தலையைத்  தொங்கவிட்டுக் கொண்டே வீடு வந்து சேர்ந்தான்.

"வாடா, பணம் கேட்டா தரமாட்டே. ஆனால்,  கவசகுண்டலம் போல் ஹெல்மெட் போட்டு கர்ணன்  மாதிரி இருக்கியாமே....வைப் சொன்னா" எப்போதும் கடன் கேட்டுத் தொல்லைப்படுத்தும் நண்பன் வீட்டில் காத்திருந்தான்.

" டேய், மொதல்ல கூகிள் பண்ணிப்பாரு. அப்போதான் காக்கா எப்பேர்ப்பட்ட பறவைன்னு புரியும். தெரியுமா, காக்கைக்கு மிக அதிக ஞாபகசக்தியாம். எதையும் மறக்காதாம். இதேபோல மத்தியப்பிரதேஷ்ல ஷிவா கேவடுக்கும் நடந்ததுன்னு பேப்பர் நியூஸ் படிச்ச ஞாபகம்.  எனக்கென்னவோ அந்த காக்கா உன்னை எதற்காகவோ  பழி தீர்க்கத்தான் அப்படி பண்ணுதுன்னு தோணுது. யோசி, காக்கைக்கு வெச்சது எதையானு நீ பிடுங்கி  சாப்பிட்டியா?"

அவசரமாக யோசிக்க ஆரம்பித்தான். எதுவும் நினைவிற்கு வரவில்லை. அவன் படும் அவஸ்தையைப் பார்த்து  லஷ்மி  எடுத்துக்கொடுத்தாள்.

"ஒரு முறை எலிக்கு வைக்க நான் வெச்சிருந்த வடையை  நீங்க லபக்கிடலை, பர்பிக்குத் துருவி வைத்திருந்த தேங்காய்த் துருவலை ஒரு அள்ளு வாயில் போட்டுகலை  சாப்பாட்டு விஷயத்தில் உங்களுக்கு லேசா கட்டுப்பாடு  இல்லதான். யோசிங்கோ, காக்காக்கு வெச்ச எதைத்தின்று தொலச்சேள்?"

ஹெல்மெட்டை கழட்டி வைத்து பின் ஜாக்கிரதையாக  அடிபட்ட நடு மண்டையைச் சுற்றித் தேய்த்து விட்டபடி யோசித்தான். எதுவும் தோன்றவில்லை.

" சரி, ராத்திரி முழக்க யோசிச்சு வைக்கிறேன். காலைல பார்ப்போம் " நண்பன் கடன் கேட்பதற்கு முன்  அவசரமாகப் பேச்சை முடித்துவைத்தான்.

காக்காவைப்பற்றிக் கண்டதையும் கூகிளில் படித்து பின் அவன் உறங்கப் போகும் போது இரவு ஒரு மணி.

கனவில் நீயா ஸ்ரீபிரியா காக்கா போல் மாறி ஒரே தீபம் ஒன்றே உள்ளம் பாட, பழி தீர்க்கும் காக்கா பற்றிய பயமோ அல்லது பாடி நடனம் ஆடியது இப்போது உள்ள ஸ்ரீபிரியா என்பதாலோ, ஏதோ ஒன்றினால் ஏகத்திற்குப் பயந்து அவன் பற்கள் கிடுக்கி போட, உடல் எக்சார்சிஸ்ட் போல் தூக்கிப்போட, லஷ்மி அவசரத்திற்கு வேப்பிலை கிடைக்காமல் எதற்கும் இருக்கட்டும் என்று சமையலுக்கு வைத்திருந்த கருவேப்பிலையால் அவனை சுற்றிப்போட...

அடுத்த நாள் நாடி ஜோசியரைப்பார்த்து காரணத்தைத் தெரிந்து கொள்ள முடிவு செய்தான்.

அந்த சின்ன அறையில் ஒருவர் துடையில் மற்றவர் பாதி அமர்ந்தபடி மிகவும் நெருக்கி அடித்த கூட்டமாக எல்லோரும் காத்திருந்தார்கள்.ஓர் மூலையில் கழட்டி வைத்த ஹெல்மெட்டை மடியில் வைத்தபடி இவனும்.அங்கேயும் இங்கேயும் நடந்தபடி நாடி ஜோசியரின் சிஷ்யர்கள். அவ்வப்போது ஒரு பூல்ஸ் காப் நோட் புத்தகத்தை அமர்ந்திருக்கும் ஒருவர் முன் நீட்டி, மற்றும் ஒருவர் ஒரு கையால் இங்க் பாடை நீட்டியபடி, அமர்ந்திருப்பவரின் இடது கை கட்டைவிரல் ரேகையை பதித்துச்செலவதுமாக இருந்தார்கள். இவன் கைரேயை பதித்து சென்று ஒருமணி நேரம் ஆகிவிட்டது. காத்திருந்தான்.

" சார், உங்க கைரேகையோட மாட்ச் கிடைச்சுடுத்து. வாங்க. உங்க நாடியைப்படிச்சு சொல்ல அய்யா காத்துகிட்டுருக்காரு."

மெதுவாக எழுந்து இருட்டாக இருந்த உள் அறைக்குள் சென்றான். ஊதுபத்தி, பஞ்சாமிர்தம், பூக்கள் என்று கலவையாக ஒரு வாசம். இன்றோ நாளையோ பொடித்து விழக்கூடிய நிலையில் சில ஏடுகள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன

"வாங்க, உங்க ரேகை நல்லா மேட்ச் ஆவுது. இருந்தாலும் சில கேள்விங்க. உங்க பேரு ஆனா,உனா,மூனா இதுல ஏதாவது ஒண்ணுல தொடங்குங்களா?”

அரவிந்த் மையமாகத் தலையை ஆட்டினான்.

" அது முருகர், ராமர், கணேசன், இப்படி சாமியோடு பேருங்களா?"

மறுபடியும் தலசைத்தல்.

" அப்ப உங்களோடதுதான் இந்த நாடி. சரி சொல்லுங்க, உங்க கேள்வி என்ன? இந்த பிறப்பா, சென்ற பிறப்புக்களா?"

" அய்யோ, இந்தப்பிறப்பு பத்தி கவலை இல்லீங்க. போன பிறப்புதான்."

அவசரமாகப் பல ஓலைகளஒ சுற்றி தனியே வைத்தார்.

" சரி, கேளுங்க. ஒரு கேள்விக்கு இரண்டாயிரம் சார்ஜ். தெரியும்தானே. "

பக்கத்தில் ஒரு பட்டயக்கணக்காளர் தோரணையில் நின்றிருந்த ஒரு சிஷ்யன்

" குருஜி, ஒரு கேள்விக்குத்தான் பணம் கட்டியிருக்காரு"

அவனை ஏதோ ஒரு அல்பத்தைப்பார்ப்பது போல் பார்த்து பின்

" ஒரு கேள்விக்கு மட்டும்தான் பதில். கேட்டோ. சரி பறை"

அவன் மெதுவாகத் தயக்கத்துடன்

" போன ஜென்மம் எதிலாவது நான் காக்கைக்குத் துரோகம் செஞ்சிருக்கேனா சாமி பத்து சொல்லனும்"

லேசாகத் திடுக்கிட்டு தட்டுகெட்டப்பின்னர் சுதாரித்தவாறு

" ம்....பாக்கிறேன்"

அவன் காத்திருந்தான்.லேசாகக் குழப்பமாக இருந்தது. ஒரு வேளை நாடியில் தெரியாவிட்டால். பணம் திருப்பித்தருவார்களா? கேட்டுவிட்டான்.

" ஒரு சந்தேகம். இதற்குப் பதில் வராவிட்டால் பணம் வாபஸ் தருவீங்களா?"

அவசரமாக அவர் பதிலளித்தார்.

" ஆங்.... இதோ  இருக்குல்ல,  ஆமாம்,  பாவம்தான்  மிகப்  பாவம்தான். செஞ்சிருக்கியே...."  மணிரத்தினம் பட டைலாக்ஸ் போல் விட்டு விட்டுப்பேசித் திகிலூட்டினார்.

" சாமி, அந்த காக்கா இந்த ஜென்மத்திலே என்னைத் தலையில் கொத்தி அடிச்சு பழி தீர்துக்க பாக்குது. என்ன பாவம் சொன்னீங்கன்னா, பரிகாரம் செஞ்சுடுவேன்"

காக்கா பழி கதையில் லேசாக ஆடிப்போன நாடி  ஜோசியர், மெதுவாக சொல்லத்தொடங்கினார்.

" சின்ன வயசிலே காக்கா வடை கதை கேட்டுருக்கீங்களா? அதுதான் உங்க கதை"

" அய்யோ சாமி, காக்கையை ஏமாற்றி வடையைப் பிடுங்கிக்கொண்ட அந்த நரியா நான் போன ஜென்மத்தில்?"

ஜோசியர் லேசாக நெற்றியைச் சுருக்கிக்கொண்டார்.

" இல்லை, அந்த பாட்டி"

"ஆனால், பாட்டி வடையைப் பிடுங்கி எடுக்கலியே"

"ஆம், சரிதான், நரி பிடுங்கிச்சென்ற நாள் என்று  இல்லாமல்,  மற்ற நாட்களிலெல்லாம் மகா கேவலமாகச் செய்த வடையைக் காக்கைக்குப் போட்டு அவைகள்  கூண்டோடு வெறுத்துச் சாகும்படி செய்திருக்கீங்க. அப்படி  அழிந்த  ஒரு  குடும்பத்தோட  காக்கை  தான்  இப்போ பழி வாங்குது"

அவனுக்கு இப்போது காரணம் புரிந்தது.

" இதற்கு என்ன பரிகாரம்?"

" இது இரண்டாவது கேள்வி. பணம் கட்டுங்க பதில் சொல்றேன்".

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com