ஆளுநர்களும் அரசியலும்...

ஆளுநர்களும் அரசியலும்...

டந்த சில வாரங்களாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள், முதல்வர்களுக்கு இடையே நேரடியாகவும் மறைமுகமாகவும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதன் விளைவாக , “ஆளுநர்களுக்கு உரிய அதிகாரங்களைக் குறைக்க வேண்டும்” என மாநிலக் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. தற்போது மேற்கு வங்கம், கேரளா, தெலுங்கானா, தமிழகம் ஆகிய நான்கு மாநிலங்களிலும் ஆளுநர், முதல்வர் இடையேயான மறைமுகப் பனிப்போர் தொடங்கியிருக்கிறது.

மேற்கு வங்கத்தில் ஆளுநருடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்தார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. கடந்த பல மாதங்களாக மாநில அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களைப் பகிரங்கமாக தெரிவித்து வந்தார் அம்மாநில ஆளுநராகப் பொறுப்பு வகித்த ஜகதீப் தங்கர். தற்போது இடைக்கால ஆளுநராக இல.கணேசன் பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசுக்கும் ஆளுநர் மாளிகைகும் இடையேயான மறைமுக மோதல் சற்றே தணிந்திருக்கிறது.

இதேபோல், தெலங்கானாவிலும் முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் அம்மாநில ஆளுநர் தமிழிசைக்கும் அவ்வப்போது மறைமுக மோதல் ஏற்பட்டு வருகிறது. மாநில முதல்வர் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை.

கேரளாவில் பல்கலைக்கழகங்களில் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைப்பது உள்ளிட்ட சில மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிப் முகமதுகான் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். பல பல்கலைக்கழகத் துணை வேந்தர்களைப் பதவி நீக்கமும் செய்துவிட்டார். மேலும், பொதுவெளியில் தன் முடிவை விமர்சித்ததுக்காக ஓர் அமைச்சரை ‘பதவியிலிருந்து நீக்க வேண்டும்’ என்று மாநில முதல்வருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். இதனால் கேரளாவில் ஆளுநர், முதல்வர் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

தமிழகத்தில் ஆளுநர் ரவிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே நேரடி மோதல் ஏதும் இல்லை என்றாலும், சட்டமன்றத்தில் நிறைவேற்றபட்ட சில மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில் மிகுந்த தாமதம் ஏற்படுவதாக தி.மு.க. அரசு தொடர்ந்து குரல் எழுப்பிக்கொண்டிருக்கிறது. மேலும், ஆளுநர் பங்குகொள்ளும் விழாக்களில் அரசியல்வாதிபோல “மதம், கல்வி, திருக்குறள் போன்றவற்றில் தன் கருத்துகளைப் பேசிவருகிறார்” என்ற குற்றச்சாட்டையும் திமுக வைக்கிறது.

இதன் உச்சக்கட்டமாக ஆளுநரைத் திரும்பப் பெறுங்கள் என்று குடியரசுத்தலைவருக்கு ஆளும் கட்சியும் அதன் கூட்டணி கட்சியினரும் மனு அளிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

புதுச்சேரி மாநில பொறுப்பு ஆளுநராகவிருக்கும் தமிழிசை, “தமிழக ஆளுநர் தவறாக எதுவும் பேசவில்லை. ஆளுநரின் நடவடிக்கைகள்தான் அரசியலாக்கப்படுகிறது” என்று கருத்து தெரிவித்திருந்தார். இதைக் கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள், ‘தமிழக அரசியலில் தமிழிசை தலையிட வேண்டாம்’ என்று குரல் எழுப்பியிருக்கின்றன.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து தன் கருத்துகளைப் பொதுவெளியில் பேசி வருகிறார். அரசியல் கருத்துகள் மட்டுமில்லாமல், ‘அண்மையில் நடந்த கோவை வெடி விபத்தை தமிழக அரசு சரியாக கையாளவில்லை’ என்ற குற்றச்சாட்டையும் எழுப்பியிருக்கிறார். அவர் கருத்துகளை ஆதரிப்போர் அவரும் ஒரு தனிநபர் அவருக்கு கருத்துகள் இருக்க கூடாதா? என்கிறார்கள்.

நம் ஜனநாயகத்தில் எந்த ஒரு தனி நபருக்கு அவர்தம் கருத்துகளை பேச எழுத அரசியல் அமைப்பு சட்டம் உரிமை வழங்கியிருக்கிறது. ஆனால், அந்த உரிமை அரசுப் பதவியிருக்கும்போது அதுவும் கண்ணியம்மிக்க ஆளுநர் பதவியில் செயலாற்றும்போது கிடையாது.

இந்திய அரசியலில் ஆளுநர்கள், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவருக்கு இந்தியக் குடியரசுத் தலைவரைப் போல் மாநிலத்தில் ஆட்சி செய்யவேண்டிய பதவியிலிருக்கும்போது ஆளுநர்கள் தன் தனிப்பட்ட கருத்துகளை பொது வெளியில் பகிர்வது அந்த பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் செயலாகும்

மதிப்பிற்குரிய ஆளுநர்களே ! உங்கள் பொறுப்பிலுள்ள மாநிலத்தில் அரசியல் செய்யாதீர்கள்.

அதைச் செய்ய அந்த மாநிலங்களில் நிறைய அரசியல் கட்சிகள் இருக்கின்றன.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com