நம் பாரம்பரிய கோயில்களின் பரிதாப நிலை - பயணங்கள் உணர்த்தும் பாடங்கள்!

நம் பாரம்பரிய கோயில்களின் பரிதாப நிலை - பயணங்கள் உணர்த்தும் பாடங்கள்!

மதுசூதனன் கலைச்செல்வன் பகிர்வு!

கோயில்கள், கலை, கலாசாரம் பாரம்பரியம், கட்டுமானம், கட்டுமானப் பாதுகாப்பு, இப்படி எதைப்பற்றியும் நாம் தெரிந்துகொள்ள இவருடைய உரைகளைக் கேட்டால் போதும். அல்லது அவருடன் பயணங்கள் மேற்கொள்ளலாம். கேட்பவர்களின் ஆர்வம் குறையாமல் விஷயங்களை எடுத்துச் சொல்வது என்பது இவருடைய சிறப்பு. தமிழக அரசின் கோயில்கள் (கட்டமைப்பு) பாதுகாப்புக் குழு உறுப்பினராக இவர் செயலாற்றுகிறார். தமிழ்நாடு டாக்டர் ஜே. ஜெயலலிதா இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்தில் கல்விக்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

2017 ஆம் ஆண்டில்தான், தான் தேர்ந்தெடுத்த இப்பாதையில் அவர் முனைந்து செயல்படத் தொடங்கியிருக்கிறார். இந்த ஆறு வருடங்களுக்குள்ளாக அவர் ஆற்றி இருக்கும் சாதனைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. யார் இவர்?

கலைச்செல்வமாம் கலைச்செல்வனை சந்தித்தோம்:

Q

இளம் வயது, பள்ளி கல்லூரி படிப்பு?

A

சென்னையில் பிறந்து, சென்னையில் வளர்ந்து, சென்னையிலேயே வசிப்பவன் நான். பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவன்.  அண்ணா பல்கலைக்கழகத்தின் 'ஸ்கூல் ஆஃப் ஆர்கிடெக்சர் அண்ட் பிளானிங்'கில் பட்டப்படிப்பு. சத்யபாமா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பில் 'கோல்ட் மெடலிஸ்ட்'.  தற்போது காஞ்சி சங்கரா பல்கலைக்கழகத்தில்  'தமிழகக் கோயில்களின், நகரங்களின் வடிவமைப்பு, திருவண்ணாமலை நகர வடிவமைப்பு' என்பதில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.

Q

கோயில்கள்,  இலக்கிய ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

கல்வெட்டு படித்தல்
கல்வெட்டு படித்தல்
A

சிறுவயது முதலே கோயில்கள் சென்று வருவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. விடுமுறைக் காலத்தில்கூட எந்த ஊருக்குச் சென்றாலும் கோயில்களுக்கு செல்வதோடு அதன் தல வரலாற்றை அறிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. சென்னையில் சைதாப்பேட்டையில் வளர்ந்தேன். அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பல கோயில்கள் என்னுடைய ஆர்வத்தைத் தூண்டின. கோயில்கள் மற்றும் தமிழ் மொழியில் ஆர்வம் என்பது இயல்பாக அமைந்தது. ஆனால் மேல்படிப்பு என வரும்போது, நான் தமிழை முக்கியப் பாடமாக எடுத்துப் படிப்பதை என் பெற்றோர் விரும்பவில்லை. அதனால் இரு சாராருக்கும் பொதுவாக நான் கட்டிடக்கலையைத் தேர்ந்தெடுத்தேன். அதற்கான நுழைவுத் தேர்வே எனக்கு மிகுந்த ஊக்கம் தருவதாக இருந்தது. நல்ல மதிப்பெண்கள் எடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். 

கல்லூரிப் படிப்பில் கோயில்கள் கட்டமைப்பு பற்றிய பாடங்கள் குறைவானதாகவே இருந்தது. முழுமையான அறிவை வளர்த்துக்கொள்வதின் அவசியத்தை உணர்ந்து அதனால் நிறைய புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். இது சார்ந்த பல பட்டறைகளில் கலந்துகொண்டேன். பாரம்பரியம், கலாசார ஆய்வுகள், கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், நாட்டிய மரபுகள், கல்வெட்டுக்கள் படிக்க வகுப்புகள், செப்பு பட்டயங்களைப் படித்து அறிந்து கொள்ள மற்றும் தமிழ் இலக்கியம் என்று இது சார்ந்த பல துறைகளில் என்னுடைய அறிவை வளர்த்துக் கொள்ள முனைந்தேன்.  

Q

தன்னார்வத்தினால் இத்தனையும் பயின்ற உங்களுடைய தொடர் முன்னேற்றம் குறித்து…

A

தனியார் கல்லூரியில் 2019 வரை முழு நேர ஆசிரியராக நான் பணிபுரிந்து கொண்டிருந்தேன். ஆனால் ஒரு சில சவால்கள் என்னை வெளியே வரத் தூண்டின.  2016 ஆம் ஆண்டு தொடங்கி நான் சிறிய அளவில் உரைகள் வழங்கிக்கொண்டிருந்தேன். 2017 இல்தான் ஒரு நல்ல பேச்சாளராக அறியப்பட்டு அதில் முழு கவனம் செலுத்தத் தொடங்கினேன்.  2019 ஆம் ஆண்டு கல்லூரி வேலையும் விட்டு வெளிவந்து, கொரோனாவினால் உலகமே ஸ்தம்பித்து நின்றபோது என் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. 

நம் மரபு, பண்பாடு, கல்வெட்டுக்கள், கோயில்கள் பற்றிய சுற்றுலா நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருப்பது தடைப்பட்டது. அப்போதுதான் ஒரு YouTube Channel தொடங்கி, பொதுவான வரலாறு, பல்வேறு மன்னர்களின் கீழ் தமிழ்நாட்டின் கட்டிடக்கலை, படிமவியல் (Iconography) போன்ற பல தலைப்புகளில் உரைகள் வழங்கத் தொடங்கினேன்.

என் குடும்பத்தில் இத்துறையில் என்னை வழிநடத்த எவரும் இல்லை. எல்லாமே என் தனிப்பட்ட முயற்சியால் வந்ததுதான். இத்துறையில் ஒவ்வொரு நாளும் ஏற்படும் முன்னேற்றங்களை அறிந்து, அதில் என்னை மேம்படுத்திக்கொள்வதில் நான் தீவிர அக்கறை செலுத்தி வருகிறேன்.

Q

உங்களை வழிநடத்த உங்கள் குடும்பத்தில் யாரும் இல்லை என்றீர்கள். உங்கள் ‘குரு’ என்று யாரையாவது தேர்ந்தெடுத்து வழிபடுகிறீர்களா?

ஆன்மிக குரு
ஆன்மிக குரு
A

தருமபுர ஆதீனத்தில் ஆச்சாரியராக இருக்கும் 27 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தப் பரமாச்சாரியார் சுவாமிகள் என்னுடைய ஆன்மீக குரு. அவர்தான் எனக்கு தீக்ஷை வழங்கி மந்திரோபதேசம் தந்து என்னை வழி நடத்தினார். என்னுடைய குடும்ப விஷயங்கள் அல்லது தொழில் சார்ந்த விஷயங்கள் என எதுவாகினும் நான் அவரிடம் அறிவுரை பெறுவதில் தயக்கம் காட்டுவதில்லை. அவரிடமிருந்து சைவ சித்தாந்தம் மற்றும் பாடல்கள் கற்றதோடு மட்டுமல்லாது அவருடன் பயணங்களை மேற்கொண்டு, திட்டமிடுவதில் தொடங்கி, திட்டங்களை நடைமுறைப்படுத்துவது வரை அவர் தினசரி நடந்து கொள்ளும் முறையிலிருந்து பல விஷயங்களும் நான் கற்றுக் கொள்கிறேன். இன்றும் எல்லா விஷயங்களிலும் என்னை வழிநடத்துபவர் அவரே!

Q

தொழில்முறை சவால்கள் நிறைய இருக்குமே?

A

கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. என்னைப் போன்றே பலர் இத்துறையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதனால் நான் தனித்துத் தெரியவேண்டி நிறைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. தேர்ந்தெடுக்கும் தலைப்பில் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். மாற்றுக் கருத்துக்கள் என்ன இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். எதிர்மறையான கருத்துக்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். இப்பொழுது தகவல்கள் என்பது மிக எளிதாக அனைவருக்கும் கிடைக்கிறது. ஆனால் சரியான தகவல்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில்தான் என்னுடைய தேடல் இருக்கிறது. நாம் சொல்வதை மற்றவர்கள் சொல்வதிலிருந்து வித்தியாசமாகவும், விவரமாகவும் உண்மை தன்மையை பிரதிபலிக்கும் வகையிலும் அனைவருக்கும் புரியம்படியும் சொல்ல வேண்டும் என்பதே என் நோக்கம்.  இந்த பயணத்தில், நானும் நிறைய கற்றுக் கொள்கிறேன். அடுத்தவர்களுடனும் அதை பகிர்ந்து கொள்ள முடிவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

Q

நம் கோயில்களின் கட்டமைப்புப் பாதுகாப்பில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?  அந்த பாதுகாப்பிற்கான தற்போதைய நிலை எவ்வாறு உள்ளது?

புஷ்பகிரி கோயில்
புஷ்பகிரி கோயில்
A

கோயில்கள் பற்றிய பயணம் மேற்கொள்ளும்போதுதான் பாரம்பரியமிக்க புராதனமான ஆயிரக்கணக்கான கோயில்கள் சிதிலமடைந்த நிலையில் இருப்பதைக் காண முடிந்தது. கடந்த அரை நூற்றாண்டுகளாக ஏதோ காரணங்களினால் பராமரிப்பு அற்ற நிலை. சிறப்பான நம் பாரம்பரியத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறோமே என்ற வருத்தம் எழுந்தது.

இந்த விஷயம் சார்ந்த சமூக அக்கறை என்பது சமீப காலமாகத்தான் வளர்ந்து இருக்கிறது. இத்தகைய பயணங்களின் மூலம் மக்களிடையே அந்த ஆர்வத்தைத் தூண்டுவதற்கு என்னால் முடிகிறது.

பல்கலைக்கழக அளவில் இந்த  கோயில் கலை கலாசார பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த பாடங்களை இந்தியா முழுவதுமே ஒரு சில நிறுவனங்கள்தான் வழங்குகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கவுன்சில் ஆஃப் ஆர்கிடெக்சரைத் தொடர்பு கொண்டு இத்துறையில் ஒரு படிப்பைத் தொடங்க முனைந்து, முதன்முதலாக, முதுகலை பட்டப்படிப்புக்கான பாடத்தை அறிமுகம் செய்துள்ளேன்.

ஒவ்வொரு பகுதிக்கும் கட்டமைப்பு என்பது மாறுபடுகிறது. ஆகம விதிகள் மாறுபடுகின்றன. கலிங்கத்து வழிமுறைகள் கேரள மாநிலத்தின் பாணிகள் என்று பலவகைகள். அனுபவம் வாய்ந்த ஸ்தபதிகளைத் தொடர்பு கொண்டு அல்லது கட்டமைப்பில் ஈடுபடக்கூடிய அவ்வூர் மக்களைத் தொடர்பு கொண்டு, அது பற்றிய தகவல்களைச் சேகரிப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயமாகி அதுவே 'ரதம்' என்கிற என்னுடைய பயண முயற்சியில் கொண்டு சேர்த்திருக்கிறது. RATHAM என்பது "ரோடு ஆக்ஸஸ் டு டெம்பிள் ஹெரிடேஜ் அண்ட் மான்யுமென்ட்ஸ் (Road Access To Temple, Heritage And Monuments)". 

காசி மாநகருக்கு இதுவரை 27 பயணங்கள் மேற்கொண்டிருக்கிறேன். காசியைப் பற்றி பல புத்தகங்களை படித்து வெளியே அறியப்படாத பல கோயில்கள் பற்றிய தகவல்களை சேகரித்து இருக்கிறேன். மூன்று நாள், ஐந்து நாட்கள் பயணம் மேற்கொள்பவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது பற்றியும் தகவல்கள் சேகரித்து வைத்திருக்கிறேன்.

Q

எதிர்காலத் திட்டங்கள்?

A

ஒவ்வொரு நாளையும் அதன் போக்கில் எதிர்கொள்வது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அந்த நாள் தரும் சவால்கள், ஆச்சரியங்கள் என்னை உற்சாகப் படுத்துகின்றன. அதனால் எதிர்காலம் என்பது எனக்கு கேள்விக்குறியாக அல்ல, ஒரு ஆச்சரியக்குறியாகத்தான் காட்சி அளிக்கிறது

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com