மடிக்கணினியை மூடி வைத்து விட்டு கை விரல்களை சொடுக்கு எடுத்துக் கொண்டேன். மணி இரவு பத்தரையைத் தாண்டியிருந்தது. கண்கள் உறக்கத்திற்குக் கெஞ்சின. மடிக்கணினியினை மேஜை மேல் பத்திரப்படுத்திவிட்டு படுக்கை அறைக் கதவை சத்தம் வராது திறந்தேன். அதிர்ச்சியானேன். ”வாங்க... வாங்க...” என வரவேற்றாள் மிருதுளாக் குட்டி! ஏழு வயதாகும் குட்டி தேவதை. “என்னடா தங்கம் பண்றே இன்னும் தூங்காம...” “தூக்கம் வரலைப்பா...” ஆஹா, இன்றைக்கு என்னுடைய தூக்கமும் அவ்வளவு தானா. காலையில் நேரமாக எழுந்து மிச்சம் வைத்திருக்கும் சிலபல வேலைகளையும் முடித்தாக வேண்டுமே நான். அலைபேசியில் அலாரம் வைத்துவிட்டு படுக்கையில் சரிந்தேன். அதற்காகவே காத்திருந்த மாதிரி மிருதுளா ஆரம்பித்தாள். “அப்பா... நாம ஒரு கேம் விளையாடுவோமா... நானே புதுசாக் கண்டுபிடிச்சது!” “நாளைக்கு விளையாடுவோம் பாப்பா... எனக்குத் தூக்கம் வருது” போர்வையால் முகத்தை மூடிக் கொண்டேன். சில நொடிகளில் போர்வை நைசாக இழுக்கப்பட்டு ”ஒரு கதையாவது சொல்லுப்பா...” என்றாள். “ஒரு ஊருல ஒரு பாட்டி இருந்தாங்களாம்..” “வடை சுட்டாங்க. காக்கா வந்தது. அதுதானே..! வேற கதை சொல்லுப்பா.” “வேற கதை யோசிச்சி நாளைக்கு சொல்றேன். இப்போ தூங்குடா செல்லம்.” “அப்போ இதே கதையை மாத்தி புது கதையா உருவாக்குவோமா...” எழுந்து உட்கார்ந்து கொண்டாள். ”பாட்டி வடை சுட வேணாம். பாட்டிக்கு பதிலா இந்த தடவை காக்கா வடை சுடட்டும்.” “காக்கா வடை சுடுதா...” தூக்கம் ஓடிப் போனது எனக்கு. ”அடுத்து என்ன, பாட்டி பறந்து வர்றாங்களா..?” சின்ன மூளையை உசுப்பி விட்டுக் கொண்டாள் மிருதுளா. “இப்போ நான்தான் அந்தக் காக்கா. நீங்க தான் பாட்டியாம். என்கிட்டே வந்து வடை கேளுங்க.” அவளின் விளையாட்டு சுவாரசியம் தர ஆரம்பித்தது. இது எதுவரை போகும், பார்க்கலாம்! “காக்கா காக்கா... பாட்டிக்கு ரொம்ப பசிக்குது. மயக்கம் வருது. ரெண்டு வடை தாயேன்...” “காசு தா பாட்டி, வடை தர்றேன்.” “காசு இல்லையே காக்கா.” “சும்மா எப்படித் தர முடியும்? முதலாளி பார்த்தா என்னை வேலைய விட்டே துரத்திடுவாரு.” மயக்கம் வருவது போல நடித்தேன். ”காக்கா நீ வடை கொடுக்கலை ன்னா அவ்ளோ தான்...” “சரி இந்தா சாப்பிடு...” மிருதுளா வடை தருவது போல நடித்தாள். வாங்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டேன்! “அருமையா இருக்குது பாப்பா... ஸாரி... காக்கா. நான் வரட்டுமா.” “கொஞ்சம் இரு பாட்டி” கை நீட்டி என்னைத் தடுத்தாள். ”இந்தாங்க இந்தப் பாத்திரம் முழுக்க வடைக வெச்சிருக்கேன்.” “எல்லாம் எனக்குத்தானா.” அதை வாங்கிக் கொள்வதாக நடித்தேன். “பக்கத்து கிராமத்துல திருவிழா நடக்குது. அங்கே போய் எல்லா வடையையும் வித்துட்டு வா பாட்டி. அப்படி நீ வித்துட்டு வந்தா முதலாளிகிட்ட சொல்லி மத்தியானம் உனக்கு காளான் பிரியாணி தரச் சொல்றேன்..” ஆச்சரியமாகப் பார்த்தேன். இந்தக் குட்டி மூளைக்குள் இத்தனை சிந்தனையா. “ஆஹா காளான் பிரியாணியா... இதோ இப்பவே போறேன்...” பாத்திரத்தை வாங்கிக் கொண்டேன். “அவ்வளவுதானே. கதை முடிஞ்சுதா. உழைப்பே உயர்வு தரும்! இது தானே கதையோட நீதி! தூங்கலாமா.” “தூங்கறதா... இன்னும் கதையில நரியே வரலையே...” “நரிக்கு எங்கே போறது... யாரு நடிப்பா..?” மிருதுளா என் மனைவி ஜனனியைப் பார்த்தாள். “அம்மா தான் நரியாம்.” “ஏண்டி நானா நரி. என்னைப் பார்த்தா நரி மாதிரியா இருக்கு..?” கோபத்துடன் எழுந்து உட்கார்ந்தாள் ஜனனி. “இன்னும் தூங்கலையா நீ.” ”தூங்க விட்டாத் தானே. மாறி மாறி ரெண்டுபேரும் பேசிட்டிருந்தா மனுசிக்கு எப்படித் தூக்கம் வரும்?” “அம்மா நீ தான் நரியாம். பாட்டி கொண்டு போன வடையை ஏமாத்திப் பிடுங்குவியாம்.” “போடி எனக்கு பஜ்ஜிதான் பிடிக்கும்.” “அட கதைக்குத் தானே.” என்றேன். “நான் இப்போ திருவிழாவுக்கு வந்துட்டேன். வடை வித்துட்டிருக்கேன். வடை, சூடான வடை ஒண்ணு வாங்கினா ஒண்ணு இலவசம்..” “இது வேறயா.” ஜனனி சிரித்தாள். “நான் என்ன பண்ணனும்..” மிருதுளா “நான் காக்கா. என்னோட வேலை முடிஞ்சு போச்சு. இனி நீங்க ரெண்டு பேரும் தான் கதைல இருக்கீங்க..” “நடுராத்திரியில இப்படி ஒரு கூத்தா... கடவுளே... என்னங்க ஏமாறத் தயாரா.” பழி வாங்கும் பார்வையில் பார்த்தாள். “வடை எவ்வளவு பாட்டி. நல்லா டேஸ்டா இருக்குமா.” “அதெல்லாம் நல்லா ருசியா இருக்கும் நரி.” “எல்லாத்தையும் நான் ஒருத்தனே வாங்கிக்கறேன் பாட்டி. சாம்பிளுக்கு ஒண்ணு சாப்பிடக் கொடு. நல்லாயிருந்தா மட்டும்தான் காசு தருவேன்.” “சாம்பிள் வடைக்குப் பணம் தா முதல்ல.” “அட. சாம்பிளுக்குக் கூடவா காசு தரணும்?” “உன் திட்டம் எனக்குத் தெரியும். இது நல்லா இல்லை, அந்த வடை கொடும்பே. அதையும் தின்னுட்டு இது நல்லாயில்லை, அதை எடுன்னு சொல்லுவே. இப்படி ஒசியிலே எல்லாத்தையும் தின்னுட்டு ஓடிப் போயிடுவே.” “சூப்பர் பாட்டி..! நரி இப்படித்தான் நம்மளை ஏமாத்தும்!” – மிருதுளா. “இவ்வளவு தான் உன் ராஜ தந்திரமா...” என்றேன் கிண்டலாக. ஜனனி சீரியசானாள். “பாட்டி நான் நல்ல நரி பாட்டி. அப்படியெல்லாம் பண்ணமாட்டேன்.” “ஆமா உங்க பரம்பரையைப் பத்தித் தெரியாது.” வேண்டுமென்றே ஜனனியை வம்புக்கு இழுத்தேன். இதை விட நல்ல சந்தர்ப்பம் வாய்க்குமா என்ன? ஜனனி எனக்கு பதிலடி தர வேகமாக யோசித்தாள். என்னை ஜெயிப்பது அவளுக்கு கெளரவப் பிரச்னை ஆகி விட்டது! எப்படி வடை பிடுங்குவது! கதைக்கு ஒட்டி, கொஞ்சம் லாஜிக்கும், நம்பும்படியும் இருக்க வேண்டுமே. “உனக்குத் தெரியாதா அம்மன் கோயிலுக்குப் பின்னாடி வயதானவர்களுக்கெல்லாம் சுவையான அன்னதானம் நடக்குது பாட்டி. அது முடியறதுக்குள்ள சீக்கிரம் போய் சாப்பிட்டுட்டு வந்துடு பாட்டி. நான் வேணா வடை அண்டாவை பத்திரமாப் பார்த்துக்கறேன்.” “எனக்குப் பசி இல்லை நரி. பாவம் நாலு இடத்துக்குப் போய் அலைஞ்சு திரிஞ்சு வந்திருப்பே. உனக்குத்தான் வயிரு பசிச்சிருக்கும். நீ வேணாப் போ.” மிருதுளா யார் ஜெயிப்பார்கள் என சுவாரசியமாக வேடிக்கை பார்த்தது. “இரு இப்ப வர்றேன்..” என்ற ஜனனி சில நொடிகளில் கைவிரித்து “இது என்னன்னு தெரியுதா? செத்துப் போன கரப்பான் பூச்சி! இதை உன் வடை அண்டாக்குள்ள இருந்து எடுத்தேன்னு ஒரு குரல் கொடுத்தா எல்லோரும் ஓடி வந்து உன் வடை அண்டாவைக் கவுத்து விட்டுடுவாங்க. மொத்தமும் காலி. கெட்டுப் போன வடையை விக்கிறியான்னு உன்னைத் துரத்தி விட்டுடுவங்க! ஒழுங்கா பத்து வடையை என்கிட்டே தள்ளு. சாப்பிட்டுட்டு அமைதியாக் கிளம்பிடுவேன்..” நான் ஏமாந்து போனதாக நடித்து ”சரி பத்தெல்லாம் கிடையாது. மூணு வடைதான். உனக்கு எந்த வடை வேணுமோ நீயே எடுத்துக்கோ. ஓடிப் போயிடு நிக்காதே...” “அப்படி வா வழிக்கு..!” ஜனனி வடை அண்டாவுக்குள் கை விடுவது போல நடிக்க அவளது கைகளைப் பிடித்துக் கொண்டேன். ”ஓடி வாங்க, ஓடி வாங்க! நரி என்னை ஏமாத்தி வடை திருடுது, ஓடி வாங்க. அதோ பாரு நரி எத்தனை பேரு ஓடி வர்றாங்கன்னு. கரப்பான்பூச்சியப் போட்டு என் வியாபாரத்தைக் கெடுக்கப் பார்த்தேல்ல.. அவ்வளவு தான் உன் கதை, இன்னையோட முடிஞ்சது..!” ஜனனியும் ”அய்யயோ என்னை விட்டுடுங்க. நான் இனி யாரையும் ஏமாத்த மாட்டேன். காட்டுக்கே ஓடிப் போறேன்.” என திரும்பி உட்கார்ந்து ஓடிப் போவதாக நடித்தாள். “அய் சூப்பர் சூப்பர்” கை தட்டி சிரித்தாள் மிருதுளா. நானும், ஜனனியும் ஒருவரை ஒருவர் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டோம். “போதும்டா செல்லம். கதை முடிஞ்சுது. கெட்டது நினைச்சா கெட்டது தான் நடக்கும்! வினை விதைத்தவன் வினை அறுப்பான், இதுதான் கதை சொல்லும் நீதி! தூங்கலாம்டா செல்லம்..” என்றேன் கண்கள் சொக்க. “சரி” என்றபடி போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள் மிருதுளாவும். ஜனனியும் நானும் பெருமூச்சு விட்டபடி படுக்கையில் சாய்ந்தோம். சில நொடிகள் கழிந்து என் கன்னத்தை யாரோ கடித்தார்கள். குட்டிப் பற்கள். தொடர்ந்து மிருதுளா குட்டியின் கிசுகிசுப்பான குரல். “இன்னைக்கு சமாளிச்சுட்டீங்க. நாளைக்கு முயல், ஆமை கதை இருக்கு. ரெண்டு பேரும் ரெடியாகிக்குங்க.”