கவலை அளிக்கும் கல்வி திட்டம்! தரம் உயர்த்துமா தமிழகம்?

கவலை அளிக்கும் கல்வி திட்டம்! தரம் உயர்த்துமா தமிழகம்?

– எஸ்.பாலசுப்பிரமணியன்

"எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்" என்று மகாகவி பாடிய பண்புள்ள பாரத தேசம் இன்று காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. தனி மனிதனில் ஆரம்பித்து அரசியல், ஆன்மிகம் என எங்கும்; எதிலும் ஒழுக்கம் என்பது தேவையற்ற பண்பு எனக் கருதப்படுகிறதோ என்று தோன்றுகிறது. ஆன்மீகம், கலாச்சாரம், அரசியல், நாகரிகம் என்பதெல்லாம் வெறும் பேச்சளவில் மட்டுமே நிற்கத் தொடங்கிவிட்டன.

இன்றைய நாட்களில், தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு சென்று பணி புரிவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. சில வருடங்கள் முன்பு வரை, எந்த ஒரு துறையிலும் நமது மாநில மக்கள் எங்கும் சென்று பணீயாற்றத் தயாராக இருந்தனர், இன்று கல்வி வியாபாரம் செய்யும் அரசியல்வாதிகள், மக்கள் மனதில் துவேஷ மனப்பான்மையைத் தூண்டிவிட்டு, மொழி வெறியை வளர்த்து விட்டு, பிற மொழிகள் மீது விரோதம் கொள்ள வைத்து நம்மை கிணற்றுத் தவளைகளாக, எந்த ஒரு போட்டித் தேர்வையும் எதிர்கொள்ளும் வல்லமை அற்றவர்களாக மாற்றி வைத்துள்ளனர். எந்தக் கலையிலும், ஆண், பெண் என்ற பேதமின்றி, சிறந்து விளங்கிய ஈடில்லா வித்தகர்களை கண்டவர்கள் நாம். இன்று?

ஒரு காலத்தில், நம்மவர்கள் டெல்லியில் மத்திய அரசுப் பணி, வங்காளம், ஆந்திரத்தில் ரயில்வே துறை, பீகாரில் உருக்கு ஆலை, கர்நாடகாவில் பொதுத்துறை, மஹாராஷ்ட்ராவில் தனியார் துறை என்று பல்வேறு அலுவலகங்களிலும் பிரவேசித்து, தங்கள் உழைப்பாலும், திறமையாலும் உயர்ந்து பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தனர். இன்று சொந்த மாநிலத்திலேயே எந்த துறையிலும் நம்மால் மேல்பதவிகள் பெற இயலாவண்ணம் நமது திறமைகள் மழுங்கடிக்கப்பட்டுள்ளன. வங்கி குமாஸ்தா முதல் அரசு செயலாளர்கள், ரயில்வே, காவல் அதிகாரிகள் வரை, கட்டுமான தொழில், சாலைப்பணி, ஓட்டல், சுங்கச்சாவடி, அழகு நிலையம் என எதிலும் பிற மாநில தொழிலாளர்களே நிறைந்துள்ளனர். இது வெறுக்கப்படதக்கதல்ல. சிந்திக்கப்படத்தக்கது.

நமது மாநிலத்தில் தொழில் வாய்ப்புகள் அதிகம் உள்ளன; அவை நடை பெறுவதற்கான சூழல் நன்றாக உள்ளது என்பது நிரூபணம் ஆகிறது. ஆயின், அதில் பணிபுரிய நாம் தகுதி பெறவில்லை என்பதும் உறுதியாகிறது. நாம் எவ்வாறு பிற மாநிலங்கள் சென்று நம்மை நிலை நிறுத்திக்கொண்டோமோ, அது போல் இன்று பிறர் செய்கின்றனர். இது நம்மை மேலும் செழுமைப்படுத்திக்கொள்ள உதவியிருக்க வேண்டும். மாறாக, நாம் அதனை பொறாமை கொண்டு நோக்குமாறு கற்பிக்கப்பட்டுள்ளோம். நமது தேச மக்கள் என்ற விசால நோக்கினை விடுத்து, அவர்களை விரோத மனப்பான்மையுடன் அணுக பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். இது சந்தர்ப்ப அரசியல்வாதிகளின் தந்திர வேலைகளில் ஒன்றே!இலவசங்கள் இன்று எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றன. படிப்பதற்கு மாணவர்களை ஈர்த்து வருவதற்கும், திக்கற்றவர்க்கு உதவிக்கரம் நீட்டுவதற்கும் கொண்டு வரப்பட்ட சில நலத்திட்டங்கள் இன்று ஓட்டு ஒன்றே குறி என்ற வகையில் பயன்படுத்தப் படுகிறது!  மாணவர்களுக்கு தொழிற்கல்வி பற்றிய புரிதல் இல்லை; தொழில்கள் நசிந்து கொண்டிருக்கின்றன. விவசாய நிலங்கள் மீண்டும் தரிசு ஆக்கப்பட்டு, வீட்டு மனைகள் ஆகின்றன.

புற்றீசல் போல் பெருகி உள்ள பொறியியல் மற்றும் மருத்துவக்கல்வி நிலையங்களில் முறையான படிப்பு கிடைப்பதில்லை. வெளிவரும் பட்டதாரிகள், இன்று எந்த ஒரு நிறுவனத்திலும் தேர்ந்தெடுக்கப்படாமல், ஒதுக்கப்படும் நிலைமை கண்கூடு! அவர்களால் படிப்புக்கென வாங்கிய கடனைக் கட்ட முடியவில்லை. இதனைக் கட்டவேண்டாம் என்று கூறுவதற்கும் ஒரு துர்போதனைக் கூட்டம் உள்ளது. இதனால் மாணவன் முதல், விவசாயி, தொழில் முனைவோர் என பலரும் கடனைத் திருப்பிச்செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என கருதும் நிலை உருவாகியுள்ளது.

இந்த சீர்கேடுகளை எப்படித்தான் சரிசெய்வது?! இவை சாத்தியப்பட, கல்வி நிலையங்கள் ஒழுக்கம் என்பதை ஆரம்பத்தில் இருந்தே உறுதி செய்ய வேண்டும். முறையான கல்வித் திட்டம் எல்லோருக்கும் பாரபட்சமின்றி கிடைத்திட அரசு, கல்வி நிலையங்களை மேம்படுத்த வேண்டும். இன்று அரசு, கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் ஆகியவை தெளிவான வழிகாட்டுதலுடன், எந்த தலையீடும் இன்றி செய்ல்படச் செய்ய வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் மற்றும்; பொது மக்கள் பயன்பெற முடியும். ''இந்தியா, இளைஞர்களின் கையில்..'' என்ற டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் கனவு அப்போதுதான் மெய்யப்படக் கூடிய சூழ்நிலை உருவாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com