spot_img
0,00 INR

No products in the cart.

கூத்தனூரில் அருளும் கல்விக் கடவுள்

– லதானந்த்

தமிழ்நாட்டில் கல்விக் கடவுள் சரஸ்வதி தேவிக்கு தனிக்கோயில் அமைந்திருக்கும் திருத்தலம் திருவாரூர் மாவட்டம், கூத்தனூரில்தான். இந்தத் திருத்தலம் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 20 கிலோ மீட்டர் தொலைவில், பூந்தோட்டம் என்ற ஊரிலிருந்து பிரியும் நாச்சியார்கோவில் செல்லும் பாதையில் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்தத் தலம், ‘கூத்தனூர்’ எனப் பெயர் பெற்றதற்கு வரலாற்றுக் காரணம் உண்டு. உலாப் பாடுவதில் புகழ் பெற்ற ஒட்டக்கூத்தர், ஆரம்பத்தில் சாதாரணமான மனிதராகத்தான் இருந்திருக்கிறார். தாம் சிறந்த புலவராக வேண்டும் என அவர் சரஸ்வதி தேவியை வணங்கிக் கடுந்தவம் இருந்துள்ளார். அங்கே ஓடிக்கொண்டிருக்கும், ‘ஹரி நதி’ என்று அழைக்கப்படும் அரசலாற்றின் கரையில் மனமுருகிப் பிரார்த்தித்திருக்கிறார். அவரது பக்திக்கு செவிசாய்த்த கலைவாணி அழகுத் திருக்கோலத்துடன் அவருக்குத் தரிசனம் தந்து, அவரது நாவில் தாம்பூலம் தடவி அருள்பாலித்திருக்கிறாள். அந்த நொடி முதல் சகல ஞானத்தையும் ஒட்டக்கூத்தர் பெற்று, மாபெரும் புலவராக மாறினார். பாக்கள் பல யாத்தார். அவரது புகழ் திக்கெட்டும் பரவியது. அவரது திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக மன்னன் அவருக்கு அந்த ஊரையே வழங்கிச் சிறப்பித்தான். ஒட்டக்கூத்தருக்கு வழங்கப்பட்ட ஊராகையால் அந்தத் திருத்தலம், ‘கூத்தனூர்’ என்று அழைக்கப்படலாயிற்று.

இங்கே துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியரும் திவ்ய தரிசனம் தருவதால் இத்தலத்துக்கு, ‘அம்பாள்புரம்’ என்ற பெயரும் உண்டு. கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் கூத்தனூர் அருகே, ‘ருத்ர கங்கை’ என்ற இடத்தில் சங்கமமாவதாகவும் ஐதீகம் நிலவுகிறது. எனவே, ‘தென்னாட்டுப் பிரயாகை’ என்றும் இந்தத் திருத்தலத்தை பக்தர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஆதியில் தாழைப் புதர்கள் மண்டிய புதரில் சிலா ரூபமாக சரஸ்வதி தேவி காட்சியளித்ததால், ‘தாழைக் காடு’ என்ற பெயரும் இப்பதிக்கு உண்டு. இங்கே அரிநாதேஸ்வரர் – கமலாக்ஷி ஆலயம் இருப்பதால், ‘அரிநாதேஸ்வரம்’ என்ற பெயராலும் இத்தலத்தை அழைக்கின்றனர்.

இந்தத் திருக்கோயிலை அனைத்து பக்தர்களும் தரிசித்து அருள் பெறுகின்றனர் என்றாலும், மாணவ, மாணவிகளும், போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொள்வோரும் அதிக அளவில் வந்து வழிபடுகின்றனர்.

குறிப்பாக, விஜயதசமி என்று சொல்லப்படும் வித்யாரம்ப நாளில் தங்கள் குழந்தைகளை இங்கு அழைத்து வந்து நெல்லைப் பரப்பி அதில், ‘ஓம்’ என்று எழுதச் செய்து, அந்தக் குழந்தையின் கல்வியை இந்தப் புண்ணிய க்ஷேத்ரத்தில் துவக்குகின்றனர். ஆலயத்துக்குச் செல்லும் வழியெங்கும் பென்சில், பேனா, நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருட்கள் விற்கும் கடைகள் அதிகமாக இருக்கின்றன. அங்கே எழுதுபொருட்களை வாங்கி, சரஸ்வதி தேவியின் பாதாரவிந்தங்களில் பயபக்தியுடன் வைத்து, பூஜைகள் செய்து பெருவாரியான மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

தாழம் புதரில் மறைந்திருந்த சரஸ்வதி தேவியின் திருவுருவத்தை பிரதிஷ்டை செய்ததோடு, அதைத் தனிக்கோயிலாகவும் கட்டியவர் ஒட்டக்கூத்தரின் பேரனான ஒவ்வாத கூத்தர் என்பவராவார்.

கும்பகோணத்தில் சாரங்கபாணி தீட்சிதர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு புருஷோத்தமன் என்று ஒரு மகன். அந்தப் பிள்ளை வாய் பேசவியலாத ஊமை. அவர் சரஸ்வதி தேவியை நோக்கித் தவமிருந்தமையால், அன்னை அவருக்குப் பேசும் திறனையளித்து, எல்லையற்ற ஞானத்தையும் வாரி வழங்கினாள். புருஷோத்தம பாரதி என்னும் பெயரோடு அவர் பெரும் புலவராகத் திகழ்ந்தார். அவர் சரஸ்வதி கோயிலைப் பின்னாளில் விரிவுபடுத்தி மண்டபங்கள் அமைத்தார். மஹா கும்பாபிஷேகமும் செய்தார் எனக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

கோயிலில் அமைந்துள்ள பலிபீடத்தின் கீழ்ப்புறம் வலம்புரி விநாயகரின் திருவுருவம் காட்சியளிக்கிறது. தென்மேற்கு மூலையில் சுயம்புவாகத் தோன்றிய நர்த்தன விநாயகர் அருள்பாலிக்கிறார். மூலையில் இருப்பதால், ‘மூலைப் பிள்ளையார்’ என்கிற பெயரும் இவருக்கு உண்டு.

மஹா மண்டபத்தில் வடக்கு நோக்கி பிரம்மா காட்சியளிக்கிறார். வலது புறத்தில் பிரம்மபுரீஸ்வரர் காட்சி தருகிறார். சரஸ்வதி ஆலயத்தின் நுழைவாயிலின் மேல்புறத்தில் மஹாலட்சுமியின் சிலையும் உள்ளது. வெளிப்புறத்தில் ஒட்டக்கூத்தருக்கும் சிலை ஒன்று உண்டு. கோயில் வளாகத்திலேயே வித்யாரம்பக் கூடமும், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கென்று மேடை ஒன்றும் இருக்கின்றன. அன்னதானக் கூடமும் உள்ளது.

இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் கலைவாணி, தவக்கோலத்தில் வெண்தாமரை மலர் மீது பத்மாசனத்தில் அமர்ந்து காட்சியளிக்கிறார். மூல விக்ரஹ தேவியின் கைகளில் வீணை இல்லையென்பது குறிப்பிடத்தக்கது. அம்பாளை அலங்கரிக்கும் தருணங்களில் மட்டுமே வீணை சூட்டப்படுகிறது. நான்கு திருக்கரங்களோடு சரஸ்வதி தேவி அளிக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும். ஓலைச் சுவடிகள் ஒரு கரத்திலும், அட்சர மாலை ஒரு கரத்திலும், அமிர்த கலசம் இன்னொரு கரத்திலும் ஏந்தியிருக்கும் தேவியின் நான்காவது கரம் அபய ஹஸ்தமாக அருளை வழங்குகிறது.

ஒவ்வோர் ஆண்டும் சாரதா நவராத்திரி உத்ஸவத்தை பரவசத்தோடு பக்தர்கள் கொண்டாடு கிறார்கள். சரஸ்வதி பூஜையன்று விசேஷ ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்றைய தினம் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கலை நிகழ்ச்சிகளால் அந்தப் பகுதியே களைகட்டும். விஜயதசமியன்றும் அதற்கு அடுத்த நாளும் சரஸ்வதி தேவி அன்ன வாஹனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறாள்.

பௌர்ணமி சிறப்புப் பூஜைகள் வெகு விமரிசையாக நடத்தப்படுகின்றன. ஆண்டுக்கொரு முறை லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.

கூத்தனூர் சென்று சரஸ்வதி தேவியை வணங்குபவர்கள், அங்கே அருளும் ஸ்ரீ ஹரிநாதேஸ் வரர் கோயில், ஸ்ரீ லக்ஷ்மி நாராயண கோதண்டராமர் கோயில் ஆகியவற்றையும் தரிசித்து அருள் பெறலாம்.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,887FollowersFollow
3,050SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

வந்தியதேவனாக ‘வாத்தியார்’ எம்.ஜி.ஆர்!

0
ராகவ் குமார்  அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தமிழக மக்களிடையே நீங்கா இடம் பிடித்த அமரத்துவம் வாய்ந்த நாவல். இன்றுவரை தமிழின் முன்னணி புத்தகங்கள் வரிசையில் ‘பொன்னியின் செல்வன்’ நாவலுக்கு தனியிடம்...

கொங்கு மண்டலத்தில் நிலாபிள்ளை வழிபாடு!

0
- காயத்ரி தமிழர் பாரம்பரியத்தில் இறை வழிபாடுகளுடனும் இயற்கையுடனும் தொடர்புடையதாக தைப்பூசத்தை முன்னிட்டு, நிலாபிள்ளைக்கு சோறு மாற்றுதல் என்னும் கும்மி அடித்தல் நிகழ்ச்சி கொங்கு மண்டலத்தில் நடைபெற்று வருகிறது. தைப்பூசத் திருவிழாவிள்கு முன்னதாக தொடங்கும் இந்த...

‘காக்காப்பிடி வச்சேன்; கனுப்பிடி வச்சேன்!’

2
- ரேவதி பாலு. தை பிறந்தாலே பண்டிகைகள், குதூகலக் கொண்டாட்டங்கள்தான்! தை முதல் நாளை தைப் பொங்கலாகக் கொண்டாடும் நாம், அடுத்த நாளை உழவு மாடுகளைப் போற்றும் மாட்டுப் பொங்கலாகக் கொண்டாடுகிறோம். உழவர் திருநாளான...

70 ஹேர் பின் வளைவுகள்: கொல்லிமலையின் அற்புத அழகை பகிர்ந்த பிரபல தொழிலதிபர்!

0
-சாந்தி கார்த்திகேயன். பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்விட் செய்துள்ள ஒரு புகைப்படம், வைரலாகியுல்ளது. அதாவது, நார்வே தூதர் எரிக் சொல்ஹெய்ம் தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவைத்தான் ஆனந்த்...

இளைஞர் வாழ்க்கை மலர்கவே!

0
- பி.ஆர்.முத்து, சென்னை இந்தியாவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இளைஞர்கள் அதிக விழுக்காடுகள் உள்ளனர் என்று இறுமாந்திருந்தோமே... விரைவில் அவர்களைக் கொண்டு இந்தியாவை வல்லரசாக மாற்றுவோம் என எண்ணியிருந்தோமே! எதிர்பாராத தொற்றுநோய்தான் வந்து நம் கனவுகளை எல்லாம் சீர்குலைத்து விட்டதை எண்ணி...