-காயத்ரி
தென்காசி மாவட்டத்தில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயினருவியில் செம்மண் கலந்த நீர் இதுவரை இல்லாத அளவிற்கு ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் சுவாமி சன்னதி பஜாரில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், வியாபாரிகள் செய்வதறியாது தவித்த வண்ணம் உள்ளனர். குற்றாலம் பேருந்து நிலையத்தை ஒட்டி உள்ள பாலத்தின் மேல் பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், அங்கு கண்காணிப்புக்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் கனமழை காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் அந்த அருவிகளுக்குச் செல்லும் வழிகள் மூடப்பட்டன. வழக்கமாக இந்த சீசனில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் வந்து செல்வது வழக்கமான ஒன்று. ஆனால் தற்போது பெருமழை காரணமாக ஐயப்ப பக்தர்கள் வருகையும் குறைந்து விட்டது.