முதியோர் இல்லங்கள் வரமா? சாபமா?

முதியோர் இல்லங்கள் வரமா? சாபமா?

டந்த சில வருடங்களாக முதியோர் இல்லங்கள் எல்லா இடங்களிலும் காளான் போல தோன்றி இருப்பதை நாம் அறிவோம். ஏன் இப்படி? முதியோர்களை பேணி காப்பது என்ன அவ்வளவு சிரமமா? இந்த சமூகத்தில் நாம் ஏன் இவ்வாறு மாறி கொண்டிருக்கிறோம் என்பதை சிறிது சிந்தித்து பார்ப்போம்.

இந்த கட்டுரையில் எழுதிய எல்லா விஷயங்களும், பிற கட்டுரைகளிருந்து படித்து புரிந்து கொண்ட  ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துக்களே ஆகும். குறிப்பிட்ட எவரையும் குறைசொல்லவோ, சங்கடப்படுத்தவோ எழுதப் படவில்லை.

மருத்துவத்துறையின் அபார வளர்ச்சிக் காரணமாக ஏராளமான நோய்கள் குணப்படுத்த படுகின்றன. இதனால் பொதுவாக எல்லோரும் அதிக நாள் உயிர் வாழ்கிறார்கள். இதனால் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆனால் அவர்களின் வயது முதிர்வால் ஏற்படும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன.

இந்த அதிவேக யுகத்தில் மனித நேயம் சிறிது குறைந்து விட்டதை நாம் ஒப்பு கொள்ள தான் வேண்டும்.எல்லோரும் தங்கள் நலத்தை பேணி காப்பதில் உறுதிகொண்டு சுயநலவாதிகளாக மாறி கொண்டிருக்கின்றோமோ என்று அய்யப்பட வேண்டியிருக்கிறது.

நம்மை இந்த நவீன உலகத்திற்கு அறிமுகப்படுத்திய, சகல சவுகரியங்களையும், அதற்கேற்ற படிப்பு ஆகியவற்றை நமக்கு ஏற்படுத்தி கொடுத்த முதியோர்களை அவர்களது இப்போதய அத்யாவசிய தேவைகளை புரிந்து கொண்டு, அவர்களிடம் தன்மையாக நடக்க வேண்டும் என்று இந்த இளைய சமுதாயம் என் புரிந்து கொள்ள மறுக்கிறது?அவர்கள் நம்மை இத்தனை காலம் பேணி காத்ததற்கு நாம் கை மாறு செய்ய வேண்டாமா?

இந்த சூழலுக்கு யார் காரணம் என்று யோசிக்கும் பொழுது இரு சாரார்களையும் அவர்களது எண்ணங்களையும் அறிய வேண்டும்.

வயது முதிர்ந்தவர்களையும் தங்கள் குடும்பத்தையும் பேணி காக்கும் தம்பதியர்களின் நிலைமையும் நமக்கு புரிய வேண்டும். இரு வேறுபட்ட சந்ததிகளுக்கு நடுவே சில சமயம் தத்தளிக்கிறார்கள். இதைத்தான் "Generation  gap " என்கிறார்கள். எல்லோரும் விட்டு கொடுத்தால் மட்டுமே ஒரு நிம்மதியான சூழலை உருவாக்க முடியும். இந்த விட்டுக்கொடுத்தல் இல்லாத காரணத்தால் தான் இவர்களும் முதியோர்களை இல்லத்தில் சேர்க்க முடிவெடுக்கிறார்கள். பிரச்னைகளுக்கு இதுவா தீர்வு? பேசி புரியவெக்க முடியாதது ஏதும் உண்டா? இத்தகைய நிலைமையில்  முதியோர்களுக்கு இது  சாபமே.

இந்த கேள்விகள் ஒரு புறம் இருக்க, இக்காலத்தில் முதியோர்களும் சிறிது மாறுபட்ட சிந்தனைகளுடன் இருப்பதை நாம் ஒப்பு  கொள்ளத்தான் வேண்டும். நாம் பிறருக்கு தொந்தரவாக இருக்க கூடாது , நமது வாழ்க்கையை பிக்கல் பிடுங்கல் இல்லாமல், ஒரு கவலையும் இல்லாமல் நிம்மதியாக, உல்லாசமாக கழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் திட்டமிட்டு தாமாகவே இம்மாதிரி இல்லங்களில் சேர்ந்து தங்கள் ஓய்வுற்ற காலத்தை நன்றாக செலவழிக்க தொடங்குகிறார்கள்.பொதுவாகவே,இம்மாதிரி நோக்கு உடைய பெற்றோர்களின் பிள்ளைகள் வெளி நாட்டில் நன்றாக வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். இத்தகைய முதியோர்களுக்கு இந்த இல்லங்கள் ஒரு வரமாகவே அமையும். தோட்டத்துடன் கூடிய வீடு, தங்களை ஒத்த சக மனிதர்கள், வீட்டை பேணி காக்க பணியாட்கள் , மருத்துவ உதவி, உணவு வசதி, ஆகியவை எல்லாம் இவர்களுக்கு நிம்மதி அளிக்கின்றன.

இதையெல்லாம் பார்க்கும் போது வயது முதியவர்கள் தாமாகவே இந்த சூழலில் இருக்க விரும்பினால் அவர்களை இந்த முதியோர் இல்லங்களில் இருக்க அனுமதிக்க வேண்டும். பிள்ளைகள், பேர  பிள்ளைகள் அவ்வப்போது வந்து அவர்களை பார்த்துவிட்டு போகலாம். ஆனால் சுயநல நோக்குடன் தங்கள் சுகத்திற்க்காக மட்டுமே அவர்களை இம்மாதிரி இல்லங்களில் சேர்ப்பது சற்று ஒப்பு கொள்ளமுடியாத விஷயமாகும்.

வீட்டில் முதியவர்களை தனியாக விட்டு எங்கும் செல்ல முடியவில்லை என்று ஆதங்க படுபவர்கள் தற்காலிகமாக இந்த நிலையங்களில் சேர்த்துவிட்டு திரும்பி வந்ததும்  அழைத்து கொள்ளலாம். இதனால் இரு தரப்போருக்கும் மகிழ்ச்சி. இப்படி பேசி தங்கள் நிலைமையை புரியவைத்தால் எல்லா குழப்பங்களுக்கும் தீர்வு கிடைக்கும். இரு சாராரும்  முயற்சிக்க வேண்டும். இதனால் குடும்பங்களில் பாசம் வளர்ந்து, மகிழ்ச்சி நிலவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com