நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி, ‘இந்தியாவின் சுவிட்சர்லாந்து' என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள தட்பவெட்ப நிலையும் சுவிட்சர்லாந்தின் தட்பவெட்ப நிலையும் ஒரே மாதிரியாக இருப்பதால் இவ்வாறு அழைக்கப்ப டுகிறது. நீலகிரி மாவட்டம் உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெறக் காரணமாக இருந்தவர் ஜான் சல்லிவன் ஆவார். இவரே நீலகிரியின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
1788ம் ஆண்டு ஜூன் மாதம்15ம் தேதி லண்டனில் பிறந்த இவர், கிழக்கிந்திய கம்பெனியின் எழுத்தராக 1804ம் ஆண்டு சேர்ந்து பின் 1816ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட் சிக்காலத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினார். அப்போது கோத்தகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்தபோது கோவையின் மாவட்ட ஆட்சியராக ஜான் சல்லிவன் பொறுப்பேற்ற பிறகு 1819ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ம் தேதி, பிரான்சு நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்கை ஆர்வலரான சேன் பாபிசுட் லூயிசுட னும் (Jean Baptiste Louis), படகா பழங்குடியின வழிகாட்டியுடனும் உதகமண்டலம் பகுதிக்கு வந்தார்.
சுமார் மூன்று வார காலம் அந்தப் பகுதியை சுற்றிப் பார்த்தார். இந்தப் பகுதியின் இயற்கைச் சுற்றுச்சூழல் ஜான் சல்லிவனை மிகவும் கவர்ந்ததால் கோத்தகிரி அருகே திம்பட்டி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கன்னேரிமுக்கு என்னுமிடத்தில் தனது முகாம் அலுவலகத்தை அமைத்தார். இதுவே உதகையின் முதல் அரசு அலுவலகம் ஆகும். நீலகிரியின் முதல்கட்டடமான இது இன்றளவும் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் உள்ளது. இந்த இடம் தற்போது ஜான் சல்லிவன் நினைவிடமாக உள்ளது. இதற்குப் பின்னரே உதகையில் உள்ள ஸ்டோன் ஹவுஸ் கட்டப்பட்டது.
இவர் காலத்தில் நீலகிரிக்கு வர போதிய வசதி இல்லாத காரணத்தாலும், அடர்ந்த வனப்பகுதியாக இருந்ததாலும் இங்கு வாழ்ந்த மக்கள் வெளியுலகத் தொடர்பு இல்லாமல் இருந்தனர். இதன் பிறகு இந்தப் பகுதியைக் கோடை வாசஸ்தலமாக மாற்ற எண்ணி, இந்தப் பகுதியில் நிறைய குடியேற்றங்களை உருவாக்கினார். மேலும், மக்கள் எளிதில் இந்தப் பகுதியை அணுகவேண்டி 1820ம் ஆண்டு சிறுமுகையில் இருந்து ஒரு புதிய தரைவழிப் பாதையை ஏற்படுத்தினார்.
1830 வரை கோவை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய ஜான் சல்லிவன் ஊட்டி நகரின் நடுவில் ஒரு மிகப்பெரிய ஏரியையும் வெட்டினார். மேலும், மலையின் பல பகுதிகளில் ஓடிய சிறிய ஓடைகளை அந்த ஏரியுடன் இணைத்து அதன் நீர் வளத்தை உறுதி செய்தார்.
இதன் பிறகு ஐரோப்பிய, தென்னாப்பிரிக்க நாடுகளில் இருந்து பல வகையான மலர்கள், காய்கள், பழம் தரும் மர வகைகளை இறக்குமதி செய்து நீலகிரி மாவட்டத்தில் நட்டார். இவரின் வருகைக்குப் பிறகே உதகமண்டலத்தில் தேநீர் மற்றும் கேரட், பீட்ரூட் ஆகியன பயிர் செய்யப்பட்டன. கோத்தகிரியின் பொருளாதார வளர்ச்சிக்கு இவரே காரணம். நீலகிரி வரலாற்றில் ஜான் சல்லிவனுக்கு முக்கிய இடம் உண்டு. கன்னேரிமுக்கு கிராமத்தில் உள்ள நினைவகத்தில் அவரது நினைவு நாள் மற்றும் பிறந்த நாள் அரசு சார் பில் வருடா வருடம்அனுசரிக்கப்படுவது வழக்கம்.