

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய ராணுவத்தால் தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்க பர்மா ரயில்பாதை உருவாக்கப்பட்டது. அந்தக் கடினமான கட்டுமானத் திட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசியத் தொழிலாளர்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களும் அனுபவித்த அறியப்படாத சோகமான வரலாற்றைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
வரலாற்றுப் பின்னணி
ஜப்பானியத் தீவுகளுக்கும் பர்மாவிற்கும் இடையேயான கடல் வழிகள் பாதுகாப்பாக இல்லை என உணர்ந்து, தரைவழியில் ரயில்வே இருப்பு பாதைகளை அமைக்க ஜப்பானியர்கள் திட்டமிட்டனர். ராணுவ விநியோக பாதைகளை விரைவுபடுத்துவதன் நோக்கத்தில் இந்தத் திட்டம் அமைக்கப்பட்டது. சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசியப்படை வீரர்களையும் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட நேசநாட்டு போர்க் கைதிகளையும் ஜப்பானியர்கள் வரவழைத்தனர். ரயில் பாதையை விரைவில் முடிக்க திட்டமிட்ட ஜப்பானியர்கள் அதற்காக பல கொடுஞ்செயல்களை செய்தனர். தொழிலாளர்கள் கடுமையான மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டனர்.
கட்டாய ஆட்சேர்ப்பு மற்றும் ஏமாற்று வேலை
ஜப்பானிய அதிகாரிகள் ஆரம்பத்தில் தொழிலாளர் களைக் கவரும் வகையில் அதிக ஊதியம், பாதுகாப்பான வேலை, நல்ல தங்கும் இடம், வசதிகள் என்று ஆசை வார்த்தைகள் காட்டி விளம்பரப்படுத்தினார். மலேயா தோட்டத் தொழிலாளர்களாக பணிபுரிந்த தமிழர்களை அங்கே பணியில் அமர்த்துவது அவர்களது நோக்கமாக இருந்தது. பல தமிழர்கள் தங்கள் குடும்பத்தினரை அங்கே அழைத்து வந்தனர். பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பி வந்தவர்களுக்கு அங்கே துன்பமும் துயரமும் காத்திருந்தது. ரயில்வே பாதை அமைக்கும் பணியில் தொழிலாளர்களை கட்டாயமாக கடத்தி ஜப்பானியர்கள் அதில் ஈடுபடுத்தினர்.
தமிழ் தொழிலாளர்களின் அவல நிலை
தாய்லாந்திற்கும் பர்மாவிற்கும் இடையில் 415 கிலோ மீட்டர் நீளம் உள்ள ரயில் பாதையை அமைக்க வேண்டி இருந்தது. தமிழர்கள் சிறிய அழுக்கான குடியிருப்புகளில் கூட்டமாக குடியமர்த்தப்பட்டனர். அங்கே கடுமையான கூட்ட நெரிசல் மற்றும் காற்றோட்டம் இல்லாத அறைகளில் தங்கியதால் அவை கல்லறை போன்ற அமைப்பை கொண்டிருந்தன.
முகாம்கள் சுகாதாரமற்றவையாக இருந்தன. அதனால் பலவிதமான நோய்கள் பரவின. உணவு பற்றாக்குறை கடுமையாக இருந்தது. போதுமான உணவுப் பொருள்கள் தரப்படவில்லை. எனவே கடுமையான உணவு பற்றாக்குறை நிலவியது. பசியும் பட்டினியமாக தமிழர்கள் துயருற்றனர். பலருக்கு கடுமையான நோய்கள் பரவி இறப்பை சந்தித்தனர் புதைக்கப்படாத சடலங்களில் இருந்து துர்நாற்றம் வீசியது. அவற்றை மொய்த்த ஈக்களின் கூட்டத்தால் நோய்கள் மேலும் பரவின.
மரண ரயில்வே கட்டுமானம்
பர்மா ரயில்வே கட்டுமானம் மரண ரயில்வே கட்டுமானம் என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானிய மற்றும் கொரிய மேற்பார்வையாளர்களின் தொடர்ச்சியான வன்முறை மற்றும் அச்சுறுத்தலின் காரணமாக தமிழர்கள் பல கொடுமைகளை அனுபவித்தனர். அடர்ந்த காடுகளை சுத்தம் செய்தல் கரைகளை கட்டுதல், தண்டவாளங்களை அமைத்தல் என்று அவர்களுக்கு கடுமையான வேலை தரப்பட்டது.
தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் வேகத்தைக் குறைத்தாலோ நோய்வாய்ப்பட்டாலோ அல்லது ஓய்வெடுக்க முயன்றாலோ அவர்களை கடுமையாக அடித்து, உதைத்தனர். வேலை செய்ய முடியாமல் பலவீனமானவர்கள் இறப்பை சந்தித்தனர். அந்த நேரத்தில் முகாம்களில் நோய்கள் கட்டுப்பாடில்லாமல் பரவின.
தமிழர்களுக்கு தேவையான மருந்து, அடிப்படை சுகாதாரம், தடுப்பூசிகள் போன்றவை வழங்கப் படவில்லை. அவர்களுக்கு ஆதரவான எந்த அமைப்பும் இல்லை. பசி, காலரா, வயிற்றுப்போக்கு, மலேரியா போன்ற நோய்களை தடுப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை, வேலைக்கு அழைத்து வரப்பட்ட ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்களில், 60 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கொடூரமான நிலைமைகளால் இறந்தனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இறந்து போனவர்கள் அடிப்படை சடங்குகள் அல்லது நினைவுச் சின்னங்கள் கூட இல்லாமல் ரயில் பாதையில் உள்ள குறிக்கப்படாத கல்லறைகளை அடக்கம் செய்யப் பட்டனர். அவர்களின் தியாகங்கள் வரலாற்றால் பெரும்பாலும் மறைக்கப்பட்டன.
தமிழர்களின் மனிதாபிமானம்
தங்கள் சொந்த துன்பங்களுக்கு மத்தியிலும் தமிழ் தொழிலாளர்கள் சில சமயங்களில் அங்கே நோய்வாய்ப்பட்ட பிரிட்டிஷ் போர் கைதிகளை பராமரித்ததாகவும், கொடுமைகளுக்கு மத்தியிலும் கூட மனிதாபிமான உணர்வுகளை காட்டியதாகவும் பதிவுகள் தெரிவிக்கின்றன.