இந்திய விடுதலை போரின் முக்கிய கதை நாயகரில் உத்தம் சிங்கும் ஒருவர். பிரிட்டிஷ் காரர்கள் இந்தியாவில் செய்த படுகொலைகளுக்கு, இந்தியர்கள் எவ்வளவு காலம் கழிந்தாலும், கடல் கடந்து வந்து பழிக்குப்பழி வாங்குவார்கள் என்ற பயத்தினை உண்டாக்கியவர் உத்தம் சிங்.
இவர் 1899 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாள் பஞ்சாப் மாநிலத்தின் சுனாம் என்னும் கிராமத்தில் பிறந்தவர். பிறந்த சில வருடங்களில் தாய், தந்தையரை இழந்த அவர் ஆதரவற்றோர் ஆசிரமத்தில் வளர்க்கப்பட்டார்.
பிரிட்டிஷ் அரசு 1919 இல் ரவுலட் சட்டத்தை இந்தியாவில் கொண்டு வந்தது. இதன் மூலம் காரணமே இல்லாமல் இந்தியர்களைக் கைது செய்து தண்டனை வழங்க முடியும். இச்சட்டத்தைப் பயன்படுத்தி இந்தியர்கள் 581 பேர் கைது செய்யப்பட்டார்கள்.107 பேருக்கு தூக்குத் தண்டனையும், 264 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.
1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13- ஆம் நாள் ரவுலட் சட்டத்தை எதிர்த்து ஜாலியன் வலாபாக் என்னும் இடத்தில் மக்கள் கூடினர். அன்று உத்தம் சிங்கும் அவரது ஆசிரம நண்பர்களும் கூட்டத்திற்கு வந்த மக்களுக்கு தண்ணீர் வழங்கும் பணியைச் செய்தனர். 20,000 இந்தியர்கள் கூடிய அந்த அரங்கை எந்த ஒரு எச்சரிக்கையும் இன்றி வெளியேறும் வழிகளையும் அடைத்து பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரி ஜெனரல் டயர் மக்களை சுட உத்தரவிட்டான். இந்த கொடூர படுகொலையில் 300 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த உத்தம் சிங் பொற்கோவிலுக்கு சென்று ஆங்கிலேயர்களை பழிவாங்குவதாக சபதம் மேற்கொண்டார்.
கதர் கட்சியில் சேர்ந்த உத்தம் சிங் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டார். 1927 இல் பகத் சிங்கின் அழைப்பை ஏற்று உத்தம் சிங் தனது 25 நண்பர்களோடு இந்தியா திரும்பினார். இவர்களிடம் துப்பாக்கிகளும் வெடிமருந்துகளையும் கைப்பற்றிய பிரிட்டிஷ்காரர்கள் உத்தம் சிங்கையும் அவரது நண்பர்களையும் சிறையில் அடைத்தனர். 1931 இல் விடுதலையான உத்தம் சிங் காவல் துறையின் கண்காணிப்பை மீறி ஜெர்மன் சென்றார். அங்கிருந்து 1934 ஆம் ஆண்டு லண்டன் சென்றார்.
லண்டனிலிருந்த உத்தம் சிங் சிறு சிறு வேலைகளை செய்து கை துப்பாக்கி வாங்க பணம் சேர்த்தார். அங்கிருந்தபடியே ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமாக இருந்த ஜெனரல் டயரை கொல்ல திட்டமிட்டார்.
1940 ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி லண்டனில் உள்ள காக்ஸ்டன் ஹாலில் பேசிக் கொண்டிருந்த ஓ டயர் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக தான் வருத்தப்படவில்லை என்றும் மிக குறைவான எண்ணிக்கையில் இந்தியர்களை கொன்றது தான் வருத்தம் என்றும் தன் செயலுக்காக அவர் பெருமைப்படுவதாகவும் பேசினான். இந்த கூட்டத்தில் புத்தகத்தில் ரிவால்வரை மறைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த உத்தம் சிங் , ஓ டயரை கண நேரத்தில் சுட்டுக் கொன்றார். இந்த சம்பவத்தால் பிரிட்டிஷ்காரர்கள் நடுங்கி போயினர். வெளி நாட்டுப் பத்திரிக்கைகள் எல்லாம் உத்தம் சிங்கை பாராட்டி எழுதினார்கள். 21 வருடங்கள் கழித்து தன் சபதத்தை நிறைவேற்றினார் ஷாகித் உத்தம் சிங்.
ஜெனரல் ஓ டயரை சுட்டுக் கொன்றதற்காக பிரிட்டன் நீதிமன்றம் உத்தம் சிங்கிற்கு மரண தண்டனை விதித்தது.