

கேரளாவின் கலாச்சாரம் என்பது ஆரிய மற்றும் திராவிட சமூகங்களின் கலவையாகும். இவை கேரளாவின் இயற்கை அழகைப் போலவே பிரபலமாக உள்ளன. கேரளா அதன் கலை, இசை, இலக்கியம் மற்றும் பல்வேறு கலை வடிவங்களுக்கு பெயர் பெற்றதாகும். கேரளாவில் கதகளி, மோகினியாட்டம், கூடியாட்டம், தெய்யம், திருவாதிரைக்களி மற்றும் ஓட்டம் துள்ளல் உள்ளிட்ட பல பாரம்பரிய கலை வடிவங்கள்(Kerala Folk Arts) உள்ளன.
1. ஓட்டன் துள்ளல்
இது 18 ஆம் நூற்றாண்டில் 'குஞ்சன் நம்பியார்' என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு பாரம்பரிய நடனம் மற்றும் கவிதை நாடக வடிவமாகும். இது நடனம், இசை, கதை சொல்லல் மற்றும் சமூக விமர்சனங்களை நகைச்சுவையுடன் இணைக்கும் ஒரு தனி நிகழ்ச்சியாகும். இதில் மிருதங்கம், மத்தளம் போன்ற கருவிகள் இசைக்கப்படுகின்றன.
2. கதகளி
இது பெரும்பாலும் ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற புராணக் கதைகளை, பிரம்மாண்டமான மற்றும் வண்ணமயமான உடைகள் அணிந்து, சிக்கலான ஒப்பனைகள் மற்றும் விரிவான சைகைகள் மூலம் விளக்கும் நடனம் மற்றும் நடிப்பு ஆகியவற்றின் கலவையாகும். கதக்களியில் ஒவ்வொரு கை அசைவும் மற்றும் முக பாவமும் குறிப்பிட்ட அர்த்தத்தை கொண்டு கதையை வளர்க்க உதவும். இதில் இசை ஒரு முக்கியமான பகுதியாகும்.
3. களரிபயட்டு
3000 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட தற்காப்புக் கலையான களரிபயட்டு கேரளாவின் பாரம்பரிய தற்காப்பு கலையாக கருதப்படுகிறது. இது வெறும் உடல் கலை மட்டுமல்ல, மனக்கலையும் கூட. இது ஒழுக்கம், கவனம் மற்றும் சுயக் கட்டுப்பாடு ஆகியவற்றை கற்பிக்கிறது. கேரளாவில் தோன்றிய இக்கலை கர்நாடகா, தமிழ்நாடு, இலங்கை போன்ற பிற பகுதிகளிலும் இன்றும் நடைமுறையில் உள்ளது.
4. தீயாட்டம்
தீயாட்டம் அல்லது தீயாட்டு என்பது கேரளாவின் பாரம்பரிய நடன வடிவமாகும். இது தீயத்துன்னி பிராமணர்கள் மற்றும் தியாடி நம்பியார்கள் என்ற இந்த இரண்டு சமூகத்தினரால் மட்டுமே நடத்தப்படுகிறது. இரண்டு வகையான தீயாட்டுகள் செய்யப்படுகின்றன - பத்ரகாளி தீயாட்டு மற்றும் அய்யப்பன் தீயாட்டு. இந்த பாரம்பரிய நடன வடிவம் மாநிலத்தில் மிகவும் கண்டிப்பான ஒன்றாகும். அதை ஒருவர் விருப்பப்படி மாற்ற முடியாது. இது மத்திய மற்றும் வடக்கு கேரளாவில் பரவலாக உள்ளது.
5. தெய்யம்
தெய்யம் என்பது கேரளாவின் வட மலபார் பகுதியில் நிகழ்த்தப்படும் ஒரு பாரம்பரிய சடங்கு நடன கலை வடிவமாகும்.
இது வெறும் கலை வடிவம் மட்டுமல்லாது ஒரு வழிபாட்டு வடிவமுமாகும். மக்களின் துயரங்களை நீக்குவதற்கும், தெய்வங்களின் ஆசிகளை பெறுவதற்கும் நிகழ்த்தப்படுகிறது. இது நடனம், இசை மற்றும் மத சடங்குகளின் கலவையாகும். தெய்வங்கள், வீரர்கள் மற்றும் முன்னோர்களின் ஆவிகளை பிரதிபலிக்கும் ஒரு சடங்காக கருதப்படுகிறது. கேரளாவில் 400க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான தெய்யங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
6. திருகாளி
கேரளாவின் 'திரா' என்பது ஒரு சடங்கு கலை வடிவமாகும். இது பெரும்பாலும் 'பூதனும் திராவும்' என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கலை வடிவம் தென் மலபார் மற்றும் வள்ளுவநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமானது. கிராமப்புறங்களில் பண்டிகை காலங்களில் நடைபெறும் ஒரு சடங்கு கலை வடிவமாகும். கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் 'திரா' அல்லது 'திருகாளி' போன்ற கலை வடிவங்கள் உள்ளன. இது தெய்வீக நடனத்தை குறிக்கிறது. குறிப்பாக நாக தேவதைகளின் நடனத்தை குறிக்கிறது.
இந்த கலை வடிவங்கள் பெரும்பாலும் கேரளா முழுவதும் உள்ள கலாச்சார மையங்கள், கோவில்கள் மற்றும் விழாக்களின் போது நிகழ்த்தப்படுகின்றன. இவை கேரளாவின் வளமான பாரம்பரியத்தை அழகாக படம் பிடித்து காட்டுகின்றன.