'நவகண்டம்' மிகக் கொடுமையான கொடூரமான இறப்பு... ஆனால் நடந்த ஒன்று!

Scriptures
Scriptures
Published on

தன்னுடைய உடலில் உள்ள ஒன்பது நாளங்களையோ அல்லது ஒன்பது உடல் பாகங்களையோ அறுத்துத் தன்னையேப் பலி கொடுத்துக் கொள்வதை நவகண்டம் என்று சொல்கின்றனர்.

தமிழகத்தில் 11 ஆம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில், தன்னைத்தானேப் பலி கொடுத்துக் கொள்ளும் இவ்வழக்கம் இருந்துள்ளது. பொதுவாகக் கொற்றவை எனும் பெண் தெய்வத்திற்குத் தன்னைப் பலியிட்டுக் கொண்டுள்ளனர். இந்த நவகண்டப் பலியைப் பற்றி கோயில்களின் கல்வெட்டுகள், சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி, தக்கயாகப் பரணி போன்ற இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.

சித்தர்கள் சிலர் 'நவகண்ட யோகம்' எனும் சித்தியினைக் கடைப் பிடித்துள்ளனர். 'நவகண்ட யோகம்' என்பது தன்னுடைய உடல் பாகங்களை ஒன்பது துண்டுகளாக்கிக் கொண்டு சிவபெருமானை நினைத்து யோகம் செய்வதாகும். இந்தச் சித்து முறையைச் செய்யும் போது, அதனைக் கண்டவர்கள் அச்சமடைந்திருக்கின்றனர். அதன் பின்பு, சித்தர்கள் முழு உருவோடு திரும்பி வந்த பிறகு, அவரைச் சித்தர்களாக ஏற்று வழிபட்டார்கள் என்பதைப் பல்வேறு சித்தர்களின் வரலாறுகளின் வழியாக அறிய முடிகிறது. 

இந்த மாதிரி நவகண்டம் கொடுப்பதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுள் சில:

* வலிமையான‌ எதிரி நாட்டுடன் போர் புரிய நேரும் போது, வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்கிற‌ வேளைகளில் தெய்வத்தின் அருள் வேண்டப்படுகிறது. துர்க்கைக்குப் பலி கொடுத்தால் தெய்வத்தின் அருள் கிட்டும் என்ற நம்பிக்கையில் நவகண்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

* சில வேளைகளில் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாகக் கிடக்கும் அரசன் உடல் நலம் திரும்ப அவன் மீது பாசம் மிக்கவர்களால் நவகண்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

* நோயினால் மரணத்தை எதிர் நோக்கிக் காத்திருக்கும் ஒருவன், நோயினால் சாக விரும்பாமல், வீர சொர்க்கம் அடைய விரும்பி நவகண்டம் கொடுத்துக் கொள்வதும் நடந்திருக்கிறது.

* குற்றவாளி ஒருவன் தான் செய்த குற்றத்தினால் மரண தண்டனைக்கு உள்ளாகும் போது, அவ்வாறு இறக்காமல், வீர சொர்க்கம் அடைய விரும்புவதாகத் தெரிவித்து, அரசன் அனுமதியுடன் நவகண்டம் கொடுத்து இறந்து போயிருக்கின்றனர். 

* ஒருவன் போர்க் காயத்தினாலோ, நோயினாலோ இறக்கும் வேளையில், அவன் செய்து முடிக்க வேண்டிய கடமைகள் ஏதாவது இருக்குமாயின், தனது இறப்பைத் தள்ளிப் போடுமாறு இறைவனிடம் வேண்டிக் கொண்டு, அப்படி நடக்கும் நிலையில், அந்தக் கடமை நிறைவேறியதும் நவகண்டம் கொடுத்து இறந்து போயிருக்கின்றனர். 

* ஒருவன் மிகப் பெரிய அவமானத்தைப் பெற நேர்ந்த நிலையில், அதன் பின் வாழ விரும்பாமல் இறக்கத் தீர்மானித்து, கோழை போல் சாக விரும்பாமல், வீரமரணத்தை விரும்பி நவகண்டம் கொடுத்து இறந்து போயிருக்கின்றனர். 

* சோழர்களுக்கு "வேளக்கார படைகள்" எனும் அமைப்பும், பாண்டியர்களுக்குத் "தென்னவன் ஆபத்துதவிகள்" என்ற படைகளும் இருந்தன. இப்படை வீரர்கள், தங்கள் கவனக் குறைவினாலோ, தங்களை மீறியோ, அரசனின் உயிருக்கு ஆபத்து நேர்ந்து விட்டால், துர்க்கையின் சந்நிதியில் தங்களுடைய தலையைத் தங்கள் கையினாலேயே வெட்டிக் கொண்டு பலியாவதாகச் சபதம் எடுத்துக் கொண்டு அப்பணியைச் செய்து வந்திருக்கின்றனர். 

*பிற்காலங்களில் கோவில் கட்டுவதற்கும், தடைப்பட்ட தேரோட்டத்தைத் தொடர்ந்து நடத்தவும், பிற காரணங்களுக்காகவும் உயர் வகுப்பினர்களால் கீழ் வகுப்பைச் சேர்ந்தவர்கள் நவகண்டம் கொடுக்க கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்கிற குற்றச்சாட்டுகளும் இருந்திருக்கின்றன. 

இம்மரபு தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. கொற்றவையின் முன்பாகத் தன் வேண்டுதலை நிறைவேற்றத் தலையை அறுத்துப் பலியிட்டு கொண்டவர்களைப் பற்றிய குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் உள்ளன. குறிப்பாக, கலிங்கத்துபரணியில் சோழ அரசின் வெற்றிக்காக இப்படி தலையை அறுத்துப் பலி கொடுத்த ஒரு வீரனைப் பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது. 

பிடிபட்ட திருடனைக் குடும்பத்துடன் ஒரு நாள் மகிழ்வுடன் வாழவிட்டு, மறுநாள் கோவிலில் துர்க்கையின் முன் நவகண்டம் கொடுக்கச் செய்யும் வழக்கமும் இருந்திருக்கிறது.

ஜப்பானில் சாமுராய் வீரர்கள் தோல்வியைத் தாங்க முடியாமல் தம் கழுத்தை அறுத்துக் கொள்ளும் ‘ஹராகிரி’ என்ற சடங்கினைப் போன்று நவகண்டம் இருந்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
உலகம் முழுவதும் ஹிந்து மதம் இருந்ததற்கான ஆதாரங்கள்!
Scriptures

நவகண்டம் குறித்த சிற்பங்கள் பல கோயில்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன. 

* திருவாசி மாற்றுரைவரதீசுவரர் கோயிலின் பிரகாரத்தில் கன்னிமார் சிலைகளுக்கு அருகே நவகண்டச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

* திருமுக்கூடலூர் அனலாடீசுவரர் கோயில் முன்பு நவகண்டச் சிற்பம் அமைந்துள்ளது. ஆனால் அதன் தலை வெட்டப்பட்டுள்ளது.

* கிருட்டிணகிரி மாவட்டம், பெண்ணேஸ்வர மடம் பெண்ணேஸ்வரர் கோயில் முன்பு பல நவகண்டச் சிற்பங்கள் அமைந்துள்ளன.

* பழநி பெரிய நாயகியம்மன் கோயில் அருகே உள்ள விநாயகர் கோயிலில் நவகண்டச் சிலை உள்ளது. 

நவகண்டம் எனும் வழியிலான இறப்பு, வீர மரணம் என்றும், சொர்க்கத்திற்குக் கொண்டு செல்லும் என்றும் கருதப்பட்ட காலமும் கொடுமையானது. அந்த இறப்பும் கொடுமையானதுதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com