நம் பாரம்பரிய அழகுப்படுத்தும் பொருட்களில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுவது முல்தானி மிட்டி. இது நம் சருமத்திற்கு பல நன்மைகளை அளிக்கிறது. தோலை மென்மையாக்கி, பளபளப்பை அதிகரித்து, முகப்பருவை குறைத்து, எண்ணெய் தன்மையை கட்டுப்படுத்தி பல விதங்களில் இது நமக்கு உதவுகிறது. ஆனால், அடிக்கடி அதிகமாக முல்தானி மிட்டி பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து நாம் அறிந்து கொள்வது அவசியம்.
முல்தானி மிட்டியின் பக்க விளைவுகள்:
முல்தானி மிட்டி சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் இதை அதிகமாகப் பயன்படுத்தும்போது சருமம் அதிகமாக உலர்ந்து இறுக்கமாக மாறிவிடும். பின்னர், தோல் அதிகமாக உளர்ந்து செதில் செதிலாக உரிந்து அரிப்பை ஏற்படுத்தலாம். எனவே, முல்தானி மிட்டியை அதிகமாகப் பயன்படுத்தக்கூடாது.
சிலருக்கு முல்தானி மிட்டி ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால், சருமத்தில் சிவப்புத் தன்மை, வீக்கம், அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். சில சமயங்களில் முல்தானி மிட்டியால் சருமம் சிவப்பு நிறமாக மாறி அபாயத்தை அதிகரிக்கும்.
தொடர்ச்சியான பயன்பாடு சரும துளைகளை அடைத்து, பருக்கள் உண்டாக வழிவகுக்கும்.
வாரத்தில் எத்தனை முறை பயன்படுத்தலாம்?
முல்தானி மிட்டியை வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்துவது நல்லது. எண்ணெய் பசை அதிகம் உள்ள சருமம் கொண்டவர்கள், வாரத்தில் மூன்று முறை வரை பயன்படுத்தலாம். ஆனால், வறண்ட சருமம் உள்ளவர்கள் அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
முல்தானி மிட்டி பயன்படுத்தும் முறை:
முதலில் சிறிதளவு முல்தானி மிட்டியை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல தயாரிக்கவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே ஊறவிடுங்கள். பின்னர், குளிர்ந்த நீர் பயன்படுத்தி கழுவவும். அடுத்ததாக முகத்திற்கு மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவும்.
இந்த ஃபேஸ் பேக் உங்கள் முகத்தில் முதல் முறை பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது. அதாவது, உங்கள் முகத்தில் தடவுவதற்கு முன் வேறு ஏதேனும் பகுதியில் தடவி உங்களுக்கு அலர்ஜி ஏற்படுகிறதா என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
கண்கள் மற்றும் உதடுகளுக்கு அருகில் இந்த பேக் போட வேண்டாம். சூரிய ஒளியில் வெளிப்படுவதற்கு முன் எப்போதும் சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். முல்தானி மிட்டி பயன்படுத்துவதால் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக பயன்படுத்துவதை நிறுத்தி சரும மருத்துவர் அணுகவும்.
முல்தானி மிட்டி உங்கள் சரும பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வாக இருந்தாலும், அதிகமாக பயன்படுத்துவது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, இதை சரியான முறையில் பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.