நம்முடைய தோற்றம் நமது நம்பிக்கையையும் வெற்றியையும் பெரிதும் பாதிக்கிறது. குறிப்பாக தலைமுடி என்பது நம் தோற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தலைமுடியை சரியான படி வைத்திருக்க பலரும் ஹேர் ஜெல் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த ஹேர் ஜெல் நம்முடைய தலை முடிக்கு நல்லதுதானா? அதை பயன்படுத்துவதால் ஏதேனும் ஆபத்துக்கள் உண்டா? என்பது பற்றி பலருக்குத் தெரிவதில்லை. இந்த பதிவில் அதுசார்ந்த உண்மைகளைத் தெரிந்து கொள்வோம்.
ஹேர் ஜெல் என்பது தலைமுடியை சரியான ஸ்டைலில் வடிவமைக்கப் பயன்படும் ஒரு வகை பொருள். இது பொதுவாக நீர், பாலிமர் மற்றும் பிற வேதிப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஹேர் ஜெல் தலைமுடியைக் கடினமாக்கி, அதற்கு ஒரு சரியான வடிவத்தைக் கொடுக்கிறது.
ஹேர் ஜெல் பயன்படுத்துவதன் நன்மைகள்:
கோடைகாலங்களில் அதிகப்படியான வியர்வை காரணமாக தலைமுடி எளிதில் கலைந்து போகும். ஹேர் ஜெல் இதைத் தடுத்து தலை முடியை சரியான படி வைக்க உதவுகிறது. சில வகை ஹேர் ஜெல்கள் தலைமுடிக்கு பளபளப்பு தருவதோடு, அதை மென்மையாகவும் மாற்றும். மேலும், சில ஹேர் ஜெல்கள் சூரிய ஒளி மற்றும் மாசுபட்ட காற்றிலிருந்து தலைமுடியைப் பாதுகாக்க உதவும் கூடுதல் பொருட்களைக் கொண்டுள்ளன.
ஹேர் ஜெல் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்கள்:
சில வகை ஹேர் ஜெல்கள் முடி உதிர்வை ஏற்படுத்தும். இதற்குக் காரணம் அதில் உள்ள வேதிப்பொருட்கள் தலைமுடியின் வேர்களை பாதித்து, அவை உதிர்வதற்கு காரணமாகும். ஹேர் ஜெல்லில் உள்ள சில வகை பொருட்கள் தலையில் அரிப்பு மற்றும் சொறி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும், இதனால் தலைமுடி வறண்டு போய் பொடுகு, பிளவுபடுதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.
ரசாயனங்கள் அதிகமாக இருக்கும் ஹேர் ஜெல்கள் தலைமுடியின் நிறத்தை மாற்றிவிடும். குறிப்பாக அடர் கருப்பு நிறமுடைய தலைமுடியைக் கொண்டவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். சிலருக்கு ஹேர் ஜெல் பயன்படுத்துவதால் அலர்ஜி ஏற்பட்டு தோல் சிவந்து போதல், வீக்கம் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சினைகளை சந்திக்கலாம்.
ஹேர் ஜெல் தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியவை:
இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஹேர் ஜெல் தலைமுடிக்கு குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும். அதிக இரசாயனங்கள் இல்லாத ஹேர் ஜெல்லை தேர்ந்தெடுக்கவும். குறிப்பாக ‘பாரபன்’ இல்லாத ஹேர் ஜெல்லைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
ஒவ்வொருவரின் தலைமுடியும், தன்மையும் மாறுபட்டதாக இருக்கும். எனவே, தங்களுடைய தலைமுடியின் தன்மைக்கு ஏற்ற ஹேர் ஜெல்லைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். அதிக அளவு ஹேர் ஜெல் பயன்படுத்துவது தலைமுடியை பாதிக்கும். எனவே, உங்களுக்குத் தேவையான அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஹேர் ஜெல்லைப் பயன்படுத்துவதற்கு முன் அதில் உள்ள பொருட்கள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். மேலும், உங்களின் தலைமுடியின் தன்மைக்கு ஏற்ற ஹேர் ஜெல்லைத் தேர்ந்தெடுத்து அதை மிகமாகப் பயன்படுத்துவதால், அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கலாம்.