சிலருக்குத் தலைமுடியில் ஊட்டச்சத்து குறைவாக உள்ளதால் பிசுபிசுவென இருக்கும். முடிக்கு ஊட்டச்சத்து கிடைக்க:
* விளக்கெண்ணெயை இலேசாகச் சூடு செய்து தலையில் தேய்த்து ஒரு பிளாஸ்டிக் பேப்பரினால் காற்றுப் போகாமல் தலையைக் கட்டி வைத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து சீயக்காய்ப் போட்டுக் குளிக்க வேண்டும்.
* சாதம் வடித்த கஞ்சியை இளஞ்சூடாக இருக்கும்போது தலையில் தேய்த்து, தடவிக் குளிப்பது நல்லது.
* முட்டையின் மஞ்சள் கருவை நன்றாக அடித்து சிறிதளவு வெந்நீர், அரைத் தேக்கரண்டி ஆரரூட் மாவு கலந்து தலையில் தடவி பதினைந்து நிமிடம் ஊறிக் குளித்தால் தலைமுடி வெல்வெட் போல் பளபளப்பாக இருக்கும்.
* வினிகர் கால் தம்ளருடன், சிறிதளவு தண்ணீர், எலுமிச்சைச் சாறு, வெங்காயச் சாறு ஆகியவற்றைக் கலந்து கூந்தலில் தேய்த்துக் குளித்தால் கூந்தலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.
* செம்பருத்தி இலையை ஒரு பிடி எடுத்து அம்மியில் நைஸாக அரைத்து ஷாம்பூ போல நுரையாக வரும்போது அதை வாரத்திற்கொருமுறை தலையில் தேய்த்துக் குளித்தால் கூந்தல் பட்டுப் போல மென்மையாக, மிருதுவாக, பளபளப்பாக இருக்கும்.
* கூந்தல் அடர்த்தியாக இல்லாமல் வெலவெலவென இருந்தால் சப்பாத்திக் கள்ளியின் சிவந்த மலர்களைச் சேகரித்து கசக்கி, சாற்றைப் பிழிந்து அந்த மலர்களையும், சாறையும் தேங்காய் எண்ணெயில் போட்டுச் சூடாக்கவும். பிறகு ஆறவைத்து, வடிகட்டி எடுத்துக்கொண்டு தலையில் தடவி வந்தால், கூந்தல் அடர்த்தியாக வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும்.
தலையில் சொட்டை விழத் தொடங்குகிறதா ?
தலையில் சொட்டை விழுந்து சிலருக்கு முகத் தோற்றமே விகாரமாகும். அதனால் சொட்டை விழ ஆரம்பிக்கும் போதே கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அது வழுக்கையில் கொண்டு விட்டு விடும். சிறிதளவு செம்பருத்திப் பூவைச் சேகரித்து நன்கு கசக்கிச் சாறு எடுத்து சொட்டை உள்ள இடத்தில் தடவி வந்தால், சொட்டை அகன்று விடும்.
தாமரை இலையைப் பறித்துச் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெயுடன் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விட வேண்டும். நீர் சடசடப்பு அடங்கி தைலப் பதத்திற்கு வந்ததும் இறக்கி கண்ணாடி பாட்டிலுக்குள் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தைலத்தை சொட்டையான இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் அந்த இடத்தில் முடி கருகருவென வளரத் தொடங்கிவிடும்.
வழுக்கை விழப் பல காரணங்கள் இருந்தாலும், சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பதே வழுக்கை விழ முக்கியக் காரணமாகிறது. அதனால் மருத்துவரின் ஆலோசனைப்படி வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.
வழுக்கையைப் போக்க ஒரு வழி உள்ளது. சிறிதளவு யானைத்தந்தம் கிடைத்தால், அதனை ரம்பத்தால் ராவி தூளாக்கிக்கொள்ள வேண்டும். அந்தத் தூளை ஒரு மண் சட்டியில் போட்டு, அடுப்புக்கரியை உபயோகித்து குமட்டி அடுப்பில் வைத்துச் சூடாக்கினால் தந்தம் கருகி மைத்தூள் போல் ஆகிவிடும். இந்தத் தூளை தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் கலந்து குழைத்துத் தலையில் வழுக்கை உள்ள இடங்களில் தடவி வர வேண்டும். குறைந்தது நாற்பது நாட்கள் தடவி வந்தால் சிறுகச் சிறுக வழுக்கை மறைந்து முடி வளரத் தொடங்கிவிடும்.
நரைமுடியா?
இன்று பலருக்குப் பிரதானமாக உள்ள மற்றொரு கூந்தல் பிரச்னை நரைமுடி ஏற்படுவதே. பித்தம் காரணமாகத் தலை நரைத்திருந்தால் கருவேப்பிலையைத் தேங்காய் எண்ணெயில் இட்டுத் தடவி வந்தால் நரை போகும். உணவில் ஏதாவது ஒரு வடிவில் கருவேப்பிலையை நாள்தோறும் சேர்த்துக்கொண்டால் பித்தநரை அகலும். அதிகாலையில் ஒரு தேக்கரண்டி இஞ்சிச் சாற்றில் இரண்டு துளி தேன் விட்டுத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்தநரை அகன்று முடி கறுப்பாக வளரும். நெல்லிக்காயை இடித்துச் சாறு பிழிந்து சம அளவு நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி தினசரி தடவி வந்தால் இளநரையைத் தடுக்கலாம்.
நன்றி : மங்கையர் மலர்