உலகில் உள்ள மிகவும் வித்தியாசமான 5 பறவைகள் பற்றி தெரியுமா?

Strange birds
Strange birds
Published on

றவைகள் என்றாலே, நம் கற்பனையில் தோன்றுவது ஓர் அழகான அங்க அமைப்பு, ஒன்றுக்கும் மேற்பட்ட வண்ணக் கலவையுடன் ‘கீச்’ குரலில் ஒலியெழுப்பும் ஓர் உயிரினம்தான். இதற்கு நேர்மாறாக, வேற்று கிரகத்திலிருந்து வந்ததுபோல், வேறு மாதிரியான தோற்றத்தில் நம்மை வியப்பில் ஆழ்த்தும் சில வித்தியாசமான பறவைகளும் உண்டு. அவற்றில் 5 வகை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

1. ஷூ பில் (Shoebill): இது கிழக்கு ஆப்பிரிக்காவின் சதுப்பு நிலக் காடுகளில் காணப்படுகிறது. மிகவும் பருமனான ஷூ வடிவில் இதன் அலகு அமைந்துள்ளது. கண்ணை அதிகம் இமைக்காமல் உற்று நோக்கியபடியே இருக்கும். நீண்ட நேரம் அசையாமல் நின்று, பின் திடீரென ஒரு தவளையையோ, மீனையோ கவ்விக்கொண்டு மெதுவாக நடந்து செல்லும். சரித்திர காலத்திற்கு முன்பிருந்த பறவை போல் இதன் தோற்றம் இருப்பதால் இது ஒரு வினோதமான பறவையாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இயற்கை வழங்கிய கலைஞர்கள்: விலங்குகளின் கலைத்திறன்!
Strange birds

2. ஆயில் பர்ட் (Oilbird): இப்பறவையின் பழக்க வழக்கங்கள் அனைத்துமே நம்மை ஆச்சரியப்படுத்துபவையாக உள்ளன. இருளடைந்த குகைகளில் வாழ்ந்து வரும் இப்பறவை பழங்களை உணவாக உட்கொள்கிறது. தென் அமெரிக்காவில் காணப்படும் இப்பறவை, இரவில் மட்டுமே சுறுசுறுப்பாக இயங்கக் கூடியது. இருளில் வழி கண்டுபிடிக்க, சோனார் (Sound Navigation And Ranging) கருவி போல், 'கிளிக்'கென்ற ஒலி எழுப்பியபடி பறந்து செல்லும். ஆயில் பறவைக் குஞ்சுகளின் மீது படர்ந்துள்ள எண்ணெய் போன்ற டெக்ச்சரே இதற்கு இந்தப் பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. இந்தப் பறவையினால் எந்த வகைத் தீங்கும் இல்லை என்றாலும், இரவில், அச்சமூட்டுகிற வகையில் இது எழுப்பும் குரல் பயங்கரமானது.

3. மரபௌ ஸ்டார்க் (Marabou Stork): ஆப்பிரிக்காவின் புல்வெளிப் பரப்புகள் மற்றும் குப்பைகளைக் கொட்டி வைத்திருக்கும் இடங்களைச் சுற்றிலும் இப்பறவையைக் காணலாம். நீண்ட கால்கள், வழுக்கை மண்டை, பிங்க் நிறத்தில் தளர்ந்து தொங்கிக் கொண்டிருக்கும் பை போன்றதோர் கழுத்தைக் கொண்ட தோற்றமுடையது மரபௌ ஸ்டார்க். இதன் கருமையான விழிகளும், அது நிற்கும் தோரணையும் பயமுறுத்தக் கூடியவை. இறந்த விலங்குகளின் மாமிசத்தை உட்கொண்டு, சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க உதவுவதால் இதைப் பாராட்டலாம்.

இதையும் படியுங்கள்:
அதிசய அசுரன்: ராட்சத பசிபிக் ஆக்டோபஸின் வியக்க வைக்கும் ரகசியங்கள்!
Strange birds

4. ஹார்ப்பி கழுகு (Harpy Eagle):  உலகிலேயே மிகப்பெரிய கழுகு இனங்களில் ஒன்று இந்த ஹார்ப்பி கழுகு. இவற்றை தென் அமெரிக்காவில் அதிகம் காணலாம். வலுவான உடலமைப்பு, கூர்மையான பார்வையுடைய கண்கள், ஹெல்மெட் அணிந்தது போன்ற தோற்றம் தரும் இறகுகளான கொண்டை ஆகியவற்றோடு தோற்றம் தருவது ஹார்ப்பி கழுகு. தென் அமெரிக்காவின் மழைக் காடுகளில் உள்ள உயரமான மரத்தின் மேலிருக்கும் குரங்கு மற்றும் ஸ்லோத்களை வேட்டையாடிப் பிடித்து உணவாக்கிக் கொள்ளும். அமைதியாக, சத்தமின்றி, கூர்நோக்குடன் கண்காணித்து விலங்குகளை வேட்டையாடுவதை இதன் தனித்துவ குணம் எனலாம்.

5. ஃபிரிகேட் பர்ட் (Frigate Bird): கூர்மையான ஓரங்கள் உடைய, நீண்ட இறக்கைகளுடன் வானில் வலம் வந்து கொண்டிருக்கும் ஃபிரிகேட் பர்ட். தனக்குத் தேவையான உணவான மீன்களை தானே சென்று வேட்டையாடிப் பிடிக்காமல், பிற பறவைகள் பிடித்துவரும் மீன்களை, வானிலேயே அப்பறவைகளை விரட்டிப் பிடித்து, திருடி உட்கொள்ளும் குணம் கொண்டது. இனப்பெருக்க காலத்தில் ஆண் பறவை தனது நெஞ்சுப் பகுதியில் ஒரு  பெரிய பலூன் அளவுக்கு, உப்பலான சிவப்பு நிறப் பை போன்ற அமைப்பை உண்டுபண்ணும். இச்செயல் வினோதமாகத் தோன்றினாலும், அது தனது துணையைக் கவர்வதற்கு கையாளும் உத்தி இது எனலாம். இம்மாதிரியான வினோதமான பறவையினங்களும் உலகில் உள்ளன என்பதை அறியும்போது வியப்பாகத்தான் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com