என்னதான், ஏர் புரிபியர் (Purifier) அல்லது ஏர் பில்டர் வந்தாலும் அது சுத்தமான இயற்கை காற்றுக்கு ஈடாகுமா..! அப்படிப்பட்ட தூய்மையான காற்றை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கும் இந்த சூழலில், சில நாடுகளில் பின்பற்றப்படும் நடவடிக்கைகளால் தூய்மையான காற்றை இன்னும் அவர்கள் தக்கவைத்து சுவாசித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
பல நாடுகள் அவற்றின் தூய்மையான மற்றும் தூசி இல்லாத சூழலுக்குப் பெயர் பெற்றவை. சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் Environmental Performance Index (EPI) உயர் தர வரிசையில் அவைகள் உள்ளன. இதில் டென்மார்க், பின்லாந்து, சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் தான் முதன்மையாக இருக்கும். அவர்களின் கடுமையான சுற்றுச்சூழல் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் மூலம் இந்த அழகிய சூழலை பராமரிக்கிறார்கள். இந்த நாடுகளில் உள்ள நகரங்களான Zurich (சுவிட்சர்லாந்து), Copenhagen (டென்மார்க்), Helsinki (பின்லாந்து), Stockholm (ஸ்வீடன்), மற்றும் Oslo (நோர்வே) போன்றவை குறைந்தபட்ச தூசி அளவை பராமரிப்பதில் முன்மாதிரியாக உள்ளன.
தூசி இல்லாத சூழலில் வாழ்வதன் நன்மைகள்:
மேம்படுத்தப்பட்ட சுவாச ஆரோக்கியம்:
தூசி இல்லாத காற்று ஆஸ்துமா, ஒவ்வாமை மற்றும் பிற நுரையீரல் சம்பந்தமான சுவாச பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும், சுத்தமான காற்றை எளிதாக சுவாசிக்க முடியும். ஆரோக்கியத்தை பராமரிக்கவும் முடியும்.
மேம்படுத்தப்பட்ட மனநலம்:
தூய்மையான சூழல் மன அழுத்தத்தை குறைக்கவும், மனம் தெளிவாக இருக்கவும் உதவுகிறது. தூசி இல்லாத இடங்கள் அமைதியான வாழ்க்கை இருப்பிடத்தை உருவாக்கி, எல்லோர் மன அமைதியையும் ஊக்குவிக்கின்றன.
சிறந்த தூக்கத் தரம்:
தூசி இல்லாத சுற்றுப்புறம், இரவில் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடிய பிரச்சனைகளை குறைத்து, ஒரு சிறந்த தூக்கத் தரத்திற்கு வழிவகுக்கும்.
நோய்த்தொற்றுகளின் அபாயத்தை குறைக்கிறது:
சுத்தமான சூழல், கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களின் இருப்பைக் குறைக்கிறது, இதனால் தொற்று பரவல் மற்றும் நோய்களின் அபாயத்தை குறைக்க முடியும்.
இந்த நாடுகள் தூசி இல்லாத சூழலை எவ்வாறு பராமரிக்கின்றன?
கடுமையான சுற்றுச்சூழல் விதிமுறைகள்:
இந்த நாடுகளில் கடுமையான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அவை மாசுவை கட்டுப்படுத்துகின்றன. உதாரணமாக, டென்மார்க், உமிழ்வை (emissions) குறைப்பதற்கும் பசுமை ஆற்றலை மேம்படுத்துவதற்கும் கொள்கைகளை செயல்படுத்தியுள்ளது.
மேம்பட்ட கழிவு மேலாண்மை அமைப்புகள்:
திறமையான கழிவு மேலாண்மை அமைப்புகள் கழிவுகள் முறையாக அகற்றப்படுவதையும் மறுசுழற்சி செய்யப்படுவதையும் உறுதிசெய்து, சுற்றுச்சூழலில் உள்ள தூசி மற்றும் மாசுகளின் அளவைக் குறைக்கிறது.
பொது விழிப்புணர்வு மற்றும் கல்வி:
சுற்றுச்சூழலை தூய்மையாக பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்து குடிமக்கள் அனைவருக்கும் கல்வி கற்று கொடுத்து, அன்றாட வாழ்வில் சுற்றுச்சூழல் சார்ந்த பாதுகாப்பை பின்பற்றவும் அவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
வழக்கமான சுத்தம் மற்றும் பராமரிப்பு:
தூசி மற்றும் குப்பைகள் குவிவதை தடுக்க, பொது இடங்கள் இடைவெளி இன்றி தொடர்ந்து சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
பசுமை உள்கட்டமைப்பில் முதலீடு:
பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் போன்ற பசுமையான இடங்களை உருவாக்குவது காற்றின் தரத்தை மேம்படுத்தவும் தூசி அளவைக் குறைக்கவும் உதவும். பசுமை உள்கட்டமைப்பு பல்லுயிர் பெருக்கத்தை (biodiversity) ஊக்குவிக்கிறது மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகிறது.