

இந்தியா, கிராமங்களின் தேசம். ஆனால், ராஜஸ்தானில் உள்ள ஒரு சிறிய கிராமம் உலகிலேயே மிக முக்கியமான சூழல் பாதுகாப்பு மாதிரியாக (Global Model for Conservation) மாறியுள்ளது. என்றால் நம்புவீர்களா? அதுதான் ராஜஸ்தானின் உதய்பூர் அருகே அமைந்துள்ள மேனார் (Menar) கிராமம்.
சாதாரண விவசாயக் கிராமமாக இருந்த மேனார், இன்று 100 -க்கும் மேற்பட்ட அரிய மற்றும் இடம் பெயரும் பறவை இனங்களுக்குப் புகலிடமாக மாறியிருக்கிறது. இந்தக் கிராமத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இது அரசாங்கமோ அல்லது வெளிநாட்டு அமைப்புகளோ செய்த மாற்றம் அல்ல. மாறாக, அந்தக் கிராம மக்களே தங்கள் உழைப்பால் உருவாக்கிய அதிசயம்.
ராஜஸ்தானின் மற்ற கிராமங்களைப் போலவே, மேனாரிலும் ஒவ்வொரு பருவமழை காலையும் பறவைகளின் ஒலிகளுடன்தான் தொடங்குகிறது.
பல நூற்றாண்டுகளாக, மேனார் மற்றும் அதைச் சுற்றியுள்ள நீர்த் தேக்கங்கள், பூநாரைகள் (Flamingos), பெலிக்கன்கள் (Pelicans), கூட்ஸ் (Coots) மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள சரஸ் கொக்குகள் (Sarus Crane) போன்ற 100-க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வலசைப் பறவைகளின் சரணாலயமாக இருந்து வருகிறது.
இங்கு வாழும் உள்ளூர்வாசிகள், ஒரு காலத்தில் எல்லாப் பறவைகளையும் சாதாரணமாகப் பார்த்தவர்கள். இன்று பறவைகளின் நண்பர்களாக மாறியுள்ளனர்.
மேனார் மக்களின் பறவைகள் மீதான அன்பு கிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகளுக்கு முந்தையது. 1832-ஆம் ஆண்டு, கிராமத்தின் ஏரி அருகே ஒரு பிரிட்டிஷ் அதிகாரி ஒரு பறவையைச் சுட்டபோது, கிராம மக்கள் அவரை உடனே விரட்டி அடித்ததாக ஒரு கதை உள்ளது. அந்த எதிர்ப்பு, நாளடைவில் பறவைகள் மீதான பக்தியாக மாறியது.
மேனார் மக்கள் காலப்போக்கில் தங்கள் குளங்களான பிரம்ம தலாப், தண்ட்தலாப், மற்றும் கெரோடா தலாப் ஆகியவற்றைச் செழிப்பான ஈரநிலங்களாக மாற்றினர். இந்த முயற்சிகள் காரணமாக, மேனார் அதிகாரப்பூர்வமாக ராஜஸ்தானின் முதல் பறவை கிராமம் என்று அங்கீகரிக்கப்பட்டது. மிக முக்கியமாக, இது ராம்சர் தளமாக (Ramsar Site - உலக ஈரநிலப் பாதுகாப்பு அங்கீகாரம்) அறிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், 2023-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமம் என்ற கௌரவத்தையும் பெற்றது.
இங்கு பறவைகள் கூடு கட்டும் இடங்களைப் பாதுகாக்க, மீன்பிடித்தல் மற்றும் கோடைக்கால விவசாயம் ஆகியவற்றை மக்கள் தாமாக முன்வந்து நிறுத்திவிட்டனர். தங்கள் தேவைகளை விடப் பறவைகளின் தேவைகளுக்கே மக்கள் முன்னுரிமை அளிக்கின்றனர்.
ராஜஸ்தான் வனத்துறையால் பயிற்சி பெற்ற பக்ஷி மித்ராக்கள் எனப்படும் பறவை நண்பர்கள், அதிகாலையிலும் மாலையிலும் இரு பைனாகுலர் உதவியுடன், ஈரநிலங்களில் ரோந்து செல்கின்றனர். அவர்கள் பறவைகளின் நடமாட்டத்தைப் பதிவு செய்கிறார்கள். வலசைப் போகும் முறைகளைக் கண்காணிக்கிறார்கள். அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரிக்கை எழுப்புகிறார்கள். அவர்கள் ஒருபுறம் விஞ்ஞானிகளாகவும், மறுபுறம் காவலர்களாகவும் செயல்படுகிறார்கள்.
உள்ளூர் மக்களின் இந்தத் தீவிர கண்காணிப்பு, பொதுவான நீர்வாழ் பறவைகளை மட்டுமல்லாது, இந்தியன் ஸ்கிம்மர், எகிப்தியன் கழுகு, மற்றும் நீள அலகு கழுகு போன்ற அழிந்துவரும் இனங்களைப் பாதுகாக்கவும் உதவியுள்ளது.
மேனார் கிராமத்தின் கதை, பெரிய கொள்கைகள் அல்லது அதிகப் பணம் இல்லாமல் கூட, மக்கள் ஒன்றிணைந்தால் இயற்கையையும் மனிதர்களையும் இணைக்கும் ஒரு இணக்கமான அமைப்பை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது. இந்தச் சமூக முயற்சி, உலகம் முழுவதும் உள்ள மற்ற கிராமங்களுக்குப் பாதுகாப்புக்கான ஒரு புதிய பாதைக்கு வழிவகுக்கிறது.