சீனத்து பட்டு ரகசியம்: காஞ்சிபுரம் பட்டின் மவுசு!

சீனத்து பட்டு ரகசியம்: காஞ்சிபுரம் பட்டின் மவுசு!

ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

தீபாவளி முடிந்து விரைவில் பொங்கல் பண்டிகை வரவிருக்கிறது. எந்த பண்டிகையானாலும் பெண்களைப் பொறுத்தவரை பட்டுப் புடைவை என்றால் தனி கிரேஸ்தான்! பட்டு வாங்கினாலும் அதை பராமரிக்கப் பாடுபட வேண்டுமே என்பவர்களுக்கு இதோ சில டிப்ஸ்.. அதற்கு முன்னால், பட்டு எங்கே, எப்போது கண்டுபிடிக்கப் பட்டது என்று பார்க்கலாம்.

சீனத்து இளவரசி ஒருத்தி அரண்மனை நந்தவனத்தில் அமர்ந்து சூடான பானம் பருகும்போது, கோப்பைக்குள் வெண்மையாக ஒரு சிறு உருண்டை பறந்து வந்து விழுந்தது. அதை இளவரசி முள்கரண்டியால் எடுக்க முயன்றபோது அக்கரண்டியில் மெல்லிய இழைகள் ஒட்டிக்கொண்டு நீளமாக வெளிவந்தன. இளவரசி அதைக் கண்டு திகைப்படைந்தாள். பணிப்பெண்களைக் கொண்டு அந்த அந்தப் பொருளை அப்புறப்படுத்தச் சொன்னாள். அப்பெண்களில் ஒருத்தி, தான் ஏற்கெனவே அதைப் போன்ற பொருள்களை நந்தவன மரங்களில் பார்த்திருப்பதாகச் சொன்னாள். மற்றவர்களும் அவளைத் தொடர்ந்து சென்று தேடியபோது, இறுதியில் அது ஒரு பூச்சியின் கூடு என்பதைக் கண்டறிந்தனர்.

இலேசான அந்தக் கூடு காற்றின் வேகத்தில் மரத்திலிருந்து பறந்துவந்து இளவரசியின் சூடான பானத்தில் விழுந்துவிட்டது. கொதிக்கும் பானத்தில் விழுந்ததால் அந்தப் பூச்சிக் கூட்டைச் சுற்றியிருந்த மெல்லிய இழைகள் தளர்ந்து கரண்டியில் ஒட்டிக் கொண்டன என்பது புரிந்தது. அந்த அற்புதக் கூட்டை உருவாக்கியது பெண் பட்டுப் பூச்சி என்பதை அறிந்தனர். அந்த இழைதான் பட்டு இழை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் நடந்த அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்தே பட்டின் மகிமையை உலகம் அறிந்தது.

அதன்பின் அந்தப் பட்டிழைகளைப் பதப்படுத்தி எடுத்து துணி நெய்தனர் சீனர்கள். ஆரம்ப காலத்தில் பட்டிழைகளால் நெய்து உருவாக்கிய பட்டுக் கைக்குட்டைகளைச் சீன அரச பரம்பரை மிகவும் உயர்ந்த பொருளாக மதித்துப் போற்றி வந்ததுடன் பிற நாடுகளுக்குப் பட்டின் ரகசியம் பரவாமல் தடுக்கவும் முயன்றனர். இருந்தாலும் மூடி வைத்த அந்த ரகசியம் விரைவில் எங்கும் பரவிவிட்டது. பட்டின் பிறப்பிடம் சீனாதான் என்றாலும் அந்த ரகசியம் வெளிப்பட்டதால் இன்று உலகம் முழுவதும் பட்டுப் புழு வளர்ப்பு முறைகளும் பட்டாடைகள் உருவாக்கும் தொழிலும் சிறப்பாக நடைபெறுகின்றன.

* பட்டு முதன்முதலாக ஷுலிங்ஷு என்பவர் சீன அரசியால் கண்டுபிடிக்கப்பட்டது. பட்டுத் தயாரிப்பின் ரகசியத்தை சீனர்களில் பல நூற்றாண்டுகளாக வெளியிடாமலே இருந்தார்கள். சீன வரலாற்றின்படி கி.மு. 2600 ஆண்டுகளுக்கு முன்பு சின்னாங் என்னும் மன்னர் முசுக்கொட்டைச் செடிகளை வளர்த்து பட்டுப் பூச்சிகளை வளர்த்து இருக்கிறார் என்று தெரிய வருகிறது.

* சீன அரசி ஒருத்தி பட்டுப் பூச்சி முட்டைகளை தன் கொண்டைக்குள் ரகசியமாக மறைத்து வைத்துக்கொண்டு பெர்சியாவுக்கு எடுத்துச் சென்றாள். அங்கிருந்துதான் ரோமாபுரி, கிரீஸ், பிரான்ஸ் முதலிய நாடுகளுக்கு பட்டின் ரகசியம் தெரிந்தது. ஜப்பானியர்கள் சீனப் பெண்களை கடத்திச் சென்று பட்டின் பயனைத் தெரிந்துகொண்டனர். வங்காள தேசத்து மன்னன் சீனப்பெண் ஒருத்தியை திருமணம் செய்து கொண்டாள் என்றும், அவர் மூலமே பட்டு இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைத்தது என்றும் வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.

* பண்டைக் காலத்தில் இந்திய வாணிபத்தில் பட்டும் ஒரு முக்கிய பொருளாக இருந்து இருக்கிறது. ரோமாபுரியை ஆட்சி செய்த ஆர்லியன் என்னும் ன்னன் பொற்காசுகளைக் கொடுத்து இந்திய பட்டாடைகளை விலைக்கு வாங்கி இருக்கின்றனர். பினீசியர், யூதர், அசீரியர், கிரேக்கர், எகிப்தியர், ரோமானியர் ஆகியரோடு பட்டு வியாபாரத்தை இந்தியா மும்முரமாக நடத்தி இருக்கிறது. பத்து லட்சம் பவுண்டு எடையுள்ள பட்டை ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டபோது இங்கிருந்து வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இருக்கிறார்கள்.

*உலக அழகிகளுள் ஒருத்தியான கிளியோபாட்ரா தன் உடலை இந்தியப் பட்டாடையால் மூடிக்கொண்டு அழகு பார்த்தும், இந்தியாவில் தயாரான பிரத்யேக பட்டு மெத்தையில் சாய்ந்தும் உல்லாசமாக காலம் கழித்தாளாம்.

* கூர்ஜ தேசம் என்று சொல்லப்படும் குஜராத்தில்தான் அழகிய பட்டாடைகள் முதலில் தயாரிக்கப்பட்டு வந்தன. பின்பு கலிங்கத்தில் பட்டு உற்பத்தி அதிகமாகி கடல் வாணிபத்தில் முக்கிய பொருளாகியது பட்டு. கலிங்கம் என்ற சொல்லுக்கு பட்டு என்றே அர்த்தம்.

*தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பட்டு உலகமெங்கும் நல்ல மதிப்புள்ளது. காஞ்சிபுரம் பாலாற்றில் தண்ணீரில் அலசப்படும் பட்டு நூல் பளபளப்பாகவும், சோத் தட்டைகளை நெருக்கிய தறிகளில் நெய்யப்படுவதால் நூல் இழைகள் இறுக்கமாகி கனமாகவும், காஞ்சிபுரம் பட்டு இருக்கிறது. மற்ற எல்லா ஊர்களிலும் தறிகளில் மூங்கிலைத்தான் பயன்படுத்திகிறார்கள். எனவே நூல் நெய்யும்போது அழுத்தமாவதில்லை.

சரி.. பட்டுச் சேலைகளைப் பராமரிப்பது எப்படி?

* பட்டு வாங்கும்போது ஒரிஜினல் பட்டுத் துணிதானா என்று கண்டுபிடிக்க கைவிரலைத் துணி மீது வைத்து அழுத்தினால் கைரேகைப் பதிந்ததும் சட்டென்று மறைந்துவிடும். வேறு நூல்கள் கலந்திருந்தால் கைரேகை அப்படியே இருக்கும்.

* பட்டுச் சேலைகளை எக்காரணம் கொண்டும் சோப்புப் பவுடர் போட்டு துவைத்து வெயிலில் காய வைக்கக்கூடாது. வெறும் தண்ணீரில் அலசினால் போதும்.

விசேஷங்களுக்குச் சென்று வந்தவுடன் பட்டுச் சேலைகளை உடனே களைந்து மடித்து வைக்காமல் நிழலில் காற்றாட இரண்டு மணி நேரம் உலர விட வேண்டும். கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்க வேண்டும்.

* ஏதாவது கறை படிந்திருந்தால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும். எண்ணெய்க் கறையாக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதி தடவி ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் வைத்திருந்து பின்பு தண்ணீர் விட்டு அலச வேண்டும்.

பட்டுச் சேலைகளை அலசும்போது சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து அலசினால் சாயம் போகாமலும் மங்காமலும் பட்டுச் சேலை பளிச்சென்று இருக்கும்.

* அயர்ன் செய்யும் ஜரிகையைத் திருப்பி அதன்மேல் மெல்லிய வெள்ளைத் துணியை வைத்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்யக் கூடாது.

* பட்டுப் புடைவையின் ஜரிகை பித்த வெடிப்பு, கொலுசு ஆகியவற்றில் மாட்டிக் கிழியாமல் இருப்பதற்கு கரை அகலத்துக்குச் சாரிஃபால்ஸைத் தைத்துக் கொள்ளலாம்.

* பட்டுச் சேலையை அட்டைப் பெட்டியில் வைக்காமல் துணிப்பையில் அல்லது தனியாக வைக்கும்போது அவற்றைப் போர்த்தி வைத்தால் பீரோ இடுக்கு வழியாக நுழையும் தூசி படியாமல் புதிதாய் இருக்கும்.

* பட்டுப் புடைவைகளை வருடக்கணக்கில் தண்ணீர் விட்டு அலசாமல் வைக்கக்கூடாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது தண்ணீரில் நனைத்து நிழலில் உலர்த்தி அயர்ன் செய்து வைக்க வேண்டும். பூந்திக் கொட்டைப் பொடியை உபயோகித்து பட்டுத் துணிகளைத் துவைத்தால் பளபளப்பு ஏறும். சாயம் போகாது.

* பட்டுப் புடைவையை அதே மடிப்புடன் பல வருடங்கள் வைத்தால் மடிப்போடு கிழிந்துவிடும். ஆகவே அடிக்கடி மடிப்புகளின் கோணத்தை மாற்றி மடிக்க வேண்டும். பட்டுப் புடைவைகளைச் சிறிது ஷாம்புவில் ஊற வைத்துக் கொண்டு துவைத்தால் அழுக்கு நீங்கி எண்ணெய்க் கறைகளும் போய் டிரைக்ளின் செய்தது போல இருக்கும்.

* பட்டுப் புடைவைகளைப் பீரோவில் வைக்கும்போது பூச்சி உருண்டைகளை ஒரு துணியில் கட்டிப் போட வேண்டும். அப்படியே போட்டால் ஜரிகைகள் கறுத்து விடும்.

பட்டுப் புடைவைகளை அழுத்தமாக அயர்ன் செய்து வைப்பதால்தான் நைந்து விடுகின்றன. அவற்றை துவைத்ததும் மடித்து உள்ளே வைத்து விட்டு உடுத்தும்போது அயர்ன் செய்து உடுத்தினால் வருடக்கணக்கில் புடைவை நன்றாக இருக்கும்.

* பட்டாடைகளை அலசும்போது, நீரில் ஒரு ஸ்பூன் கிளிசரின் கலந்து விட்டால் சுருக்கம் இருக்காது. பட்டாடைகளின் மேல் படிந்துள்ள எண்ணெய் கறை, மை கறை போன்றவற்றைப் போக்க் அப்பகுதியை சிறிதளவு பெட்ரோலில் நனைத்துத் துடைத்தால் போதும் அல்லது கறை படிந்த பகுதியில் சிறிது யூகலிப்டிஸ் தைலம் தேய்த்து விட்டு பிறகு தோய்த்தால் கறை மறைந்து விடும்.

* பட்டாடைகளை கவனமாக கையாண்டால் பல ஆண்டு புதுசு போல மிளிரும்.

பட்டுப் புடைவைகள் டபிள் கலர் பார்டரோடு இருந்தால் கீழ்பக்க கலரை கையில் பிடித்துக்கொண்டு ஷாம்பூ நீரில் முக்கி எடுத்தாலே போதும். இல்லையென்றால் ஒரு கலர் இன்னொரு கலரில் கலந்துவிடும்.

* பட்டுப் புடைவைகள் கிழிந்தால் கிழியாத பாகத்தை வெட்டி எடுத்து பட்டுப் பாவாடை தைக்கலாம். பட்டுப் புடைவை ஜரிகைகளை டெக்ரேட் பண்ண வைத்துக் கொள்ளலாம். பழைய பட்டுப் புடைவைகளின் ஜரிகைகளை வெட்டி பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். ஜரிகை தங்க ஜரிகையாக இருந்தால் கூடுதலாக விலை கிடைக்கும்.

* பழைய பட்டுப் புடைவைதானே என அலட்சியப்படுத்தாமல் எந்த காலமும் பழையதுக்கு மவுசு கூடுதல்தான். பட்டுப் புடைவைகளை லைட் வெயிட் என கூறப்படுவதும் உள்ளது.

* பட்டில் காஞ்சிப் பட்டு, ஆரணி பட்டு, பனாரஸ் பட்டு, தர்மாவர பட்டு, மைசூர் பட்டு, காஷ்மீர் பட்டு என பல பட்டு ரகங்கள் இருந்தாலும் காஞ்சிப்பட்டுக்குதான் மவுசும் அதிகம். விலையும் அதிகம். அதனால் இப்போது அனைவரும் விரும்புவது ஃபேஷன் சில்க் புடவைகள் மற்றும் உடைகள்தான்!

Other Articles

No stories found.