
குழந்தைகளுக்கு நாம் என்னதான் செய்து கொடுத்தாலும் ஹோட்டலில் சாப்பிடுவது போல் இல்லை என்று அடம் பிடிப்பார்கள். அதிலும் பிரெஞ்ச் ப்ரை எனப்படும் உருளைக்கிழங்கில் செய்த நீளமான ஸ்நாக்ஸ் வகைகள் குழந்தைகளுக்கு மிகப் பிடித்தமான உணவுகளில் ஒன்றாக தற்போது மாறி வருகிறது. சாதாரண உருளைக்கிழங்குகளை வறுத்து உப்பு மிளகு போட்டு தரும் இந்த பிரெஞ்ச் ப்ரையை, ஏன் நாம் வீட்டிலேயே செய்ய முடியாதா, அதிக விலை கொடுத்து வாங்க வேண்டுமா, என்றெல்லாம் நினைப்போம்.
வீட்டிலேயே எளிமையாக செய்யலாம் பிரெஞ்ச் ப்ரை. ட்ரை பண்ணி பாருங்க. செலவுக்கு செலவும் மிச்சம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க.
தேவையானவை :
பெரிய உருளைக்கிழங்கு - மூன்று
உப்பு- மூன்று டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
குறிப்பு - பிரெஞ்ச் ப்ரைஸ் செய்யத் தேவையான உருளைக்கிழங்குகளை சற்று பழையதாக மற்றும் ஓரளவு பெரியதாக நீளமாக இருக்கும்படி தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும் அதில் மாவு சத்து மற்றும் நீரச்சத்து குறைந்து இருக்கும்.
செய்முறை :
உருளைக்கிழங்குகளை தோல் நீக்கி விரல் தடிமனில் நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் . நறுக்கிய துண்டுகளை பலமுறை தண்ணீரில் இட்டு நன்கு தேய்த்து கழுவி தனியாக எடுத்து வைக்க வேண்டும். கழுவும் நீர் தூசி இல்லாமல் ஸ்படிகம் போல தெளிவாக இருக்கும் வரை திரும்பத் திரும்ப கழுவுவது நல்லது. அப்போதுதான் உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் போகும்.
இப்போது இந்த உருளைக்கிழங்குகளை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து மூழ்குமளவு தண்ணீர் ஊற்றி சூடு செய்யவும். ஓரளவு நீர் சூடானதும் கொதிநிலை வராத நிலையில் ஒரு சில நிமிடங்கள் மிதமான தீயில் அப்படியே வைத்து கீழே இறக்கவும்.
இந்த கிழங்கை மீண்டும் வேறொரு பாத்திரத்தில் மாற்றி அதே போல் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். நடுவே உருளைக்கிழங்கு துண்டுகள் உடைந்து விடாமல் மெதுவாக கிளறவும். கையில் எடுத்து பார்த்தால் ஓரளவு வெந்து உடைந்த உடைந்தால் உடையும் பக்குவத்தில் பாத்திரத்தை அடுப்பில் இருந்து கீழே இறக்கி அவற்றை தனியாக வடிகட்டியில் எடுத்துக் கொண்டு அப்படியே குளிர்ந்த நீரில் காண்பித்து ஓர் இரண்டு நிமிடங்கள் வைத்திருந்த பின் வடி கட்டவும்
வடித்து எடுத்த உருளைக்கிழங்கு துண்டுகளை நீர் இல்லாத சுத்தமான துணியில் பரப்பி காற்றில் (மின்விசிறியின் அடியிலும் வைக்கலாம் ) குறைந்தது ஒரு மணி நேரமாவது உலர விடவும்.
பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் கிழங்கு துண்டுகளை நிறம் மாறாமல் பொரித்து எடுக்கவும். பொரித்தெடுத்த உருளைக்கிழங்கு துண்டுகளை ஒரு வடிகட்டியில் எண்ணைய் வடியும் வரை வைத்து டைட் டப்பாவில் [போட்டு ஃப்ரீசரில் வைத்து ஸ்டோர் செய்து கொள்ளலாம்.
குழந்தைகள் கேட்கும்போது இந்த பிரெஞ்சு ப்ரைக்களை எடுத்து வாணலியில் காய்ந்த எண்ணையில் போட்டு கவனமாக பொரித்து உப்பு மற்றும் மிளகுத்தூள் அல்லது சாட் மசாலா போன்றவற்றை விருப்பம் போல கலந்து தரலாம். இதற்கு சாஸ் தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.