
ஆந்திரா ராஜ முந்திரி 'இஞ்சி தொக்கு' 'பேஸ்ட்' மாதிரி நன்றாக வர என்ன செய்ய வேண்டும்?
நமது தமிழ்நாட்டில் செய்வதைப்போல அடுப்பில் வைத்து புரட்டி ஆந்திராவில் செய்வதில்லை. செய்யும் முறையும் சுலபம். ஒரு வருடம், இரண்டு வருடம் ஆனால் கூட கெடுவதில்லை.
¼ கிலோ இஞ்சிக்கு ¼ கிலோ புளி தேவை. விருப்பப்பட்டால் 100 கிராம் பூண்டு சேர்க்கலாம். புளியை நார், விதை நீக்கி கைகளால் ஒரு கிண்ணத்தில் பிய்த்துப் போடவும். ஒரு தடவை நன்றாகக் கழுவி விட்டு (மண் போவதற்கு) புளி மூழ்கும்வரை நல்ல சூடு உள்ள தண்ணீரை ஊற்றி ½ மணி நேரம் ஊறவைக்கவும்.
இஞ்சியை கழுவித் துடைத்து ஒரு துணியின் மீது பரப்பி நன்றாக ஆற விடவும் ஈரம் முழுவதும் உலரும் வரை வைக்கவும். (5 அல்லது 6 மணி நேரங்கள்). பிறகு தோல் சீவி வட்டங்களாக அரிந்து மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைக்கவும். பூண்டை தோலுரித்துத் தனியே இடித்து இஞ்சியுடன் சேர்க்கவும்.
ஊறவைத்த புளியை மிக்ஸியில் விழுதினை அரைத்து அதோடு ½ ஆழாக்குக்கு சிறிது குறைவாக பொடி உப்பு, ½ ஆழாக்கு மிளகாய்த் தூள், விருப்பத்திற்கேற்ப துருவிய வெல்லம், 50 கிராம் கடுகுப் பொடி, 50 கிராம் வெந்தயப் பொடி சேர்த்து கடைசியாக இஞ்சி விழுது, பூண்டு விழுது சேர்த்து ஒரு தடவை மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி எல்லா பொருட்களும் நன்றாகக் கலந்து கொண்டதும் ஒரு உலர்ந்த கிண்ணத்தில் எடுக்கவும்.
ஒரு வாணலியில் ½ கிலோ நல்லெணெய் விட்டு சூடானதும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து விழுதில் கலக்கவும். நன்றாகச் சூடு ஆறியதும் ஒரு உலர்ந்த பாட்டிலில் எடுத்துவைக்கவும்.