ஊறுகாய் செய்யப் போறீங்களா? அப்போ இது உங்களுக்குத்தான்!

ஊறுகாய் செய்யப் போறீங்களா? அப்போ இது உங்களுக்குத்தான்!

எந்த வகை ஊறுகாய் போடுவதாக இருந்தாலும் காய் ஃப்ரெஷ் ஆக இருக்க வேண்டும். அப்போதுதான் பறித்த காய் எனில் உடனே நறுக்கி போடலாம். காய் வாங்கி வந்தவுடன் ஊறுகாய் போடமுடியாத போது காய்களை தண்ணீரில் போட்டு வைக்க பழுக்காமல், முற்றாமல் அப்படியே இருக்கும்.

எல்லா வகை ஊறுகாய்களுக்கும் ந.எண்ணெய் கலந்து செய்ய சுவை அதிகரிப்பதோடு ஊறுகாய் நீண்ட நாட்களுக்கு அதே சுவையுடன் இருக்கும்.

சில வகை ஊறுகாய்களுக்கு எண்ணெயை அப்படியே ஊற்ற வேண்டும். சூடாக்கி ஊற்ற வேண்டியவற்றிற்கு எண்ணையை சூடாக்கி ஆற விட்டு பின் சேர்க்க, காய் ஃப்ரெஷ் ஆக ஊறி சுவை தரும்.

ஊறுகாய்களுக்கு மிளகாய் சிவப்பாக, புதியதாக இருக்க வேண்டும். நாள்பட்ட மிளகாயாக இருந்தால் கலர் சிகப்பாக இல்லாததோடு விரைவில் கெட்டு விடும் வாய்ப்பும் உள்ளது.

காயும், மிளகாயும் புதியதாக பளிச் நிறத்தோடு இருந்தால், ஊறுகாயும் நல்ல நிறத்தில் இருக்கும். விரைவில் கருத்தும் போகாது.

ஊறுகாய்களுக்கு போடும் பொருட்களை வெயிலில் நன்கு காய வைத்து சேர்க்க வேண்டும்.

வடுமாங்காய்க்கு மாங்காய் உருண்டை வடிவத்தில் இருக்குமாறு பார்த்து வாங்குவது நல்லது. நீள் வடிவத்தில் இருந்தால் துவர்க்கும்.

ஊறுகாய்களுக்கு உப்பு, காரம், எண்ணெய் சரியான அளவில் போட்டு தயாரிக்க கெடவே கெடாது.

கெட்டு விடும் என்று நினைத்தால் கடைசியாக சோடியம் பென்சோயேட் சேர்க்கலாம்.

ஊறுகாய்களுக்கு கல்உப்பு தான் சிறந்தது. தூள் உப்பு சேர்த்து செய்ய வேண்டுமெனில் சற்று உப்பு கூடுதலாக சேர்த்து செய்யலாம்.

பூண்டு ஊறுகாய்களுக்கு பெரிய பற்களைக் கொண்ட பூண்டை விட மலைப் பூண்டே சிறந்தது. சிறியதாக இருந்தாலும் அதுதான் சுவையாக இருக்கும்.

கடுகைத் தூள் செய்ய வேண்டுமானால் தேவைப்படும் அளவில் பாதி எடுத்துக் கொண்டால் சரியாக இருக்கும்.

எலுமிச்சை, கிடாரை, நார்த்தங்காய் ஊறுகாய் போடுவதாக இருந்தாலும் அதன் சாறையும் அதிலேயே சேர்த்து செய்ய நல்ல புளிப்பு சுவையுடன் நன்றாக இருக்கும்.

ஊறுகாய்களை நன்கு ஊறியதும் பயன்படுத்த உப்பு, காரம் சேர்ந்து சாப்பிட சுவையாக இருக்கும். அப்படியே போட்ட ஊறுகாய் முழுவதையும் திறந்து தினமும் உபயோகிப்பதை விட, கொஞ்சமாக எடுத்துக் கொண்டு மரக் கரண்டி உபயோகித்து பரிமாற நீண்ட நாட்களுக்கு சுவை மாறாமல், கெடாமல் இருக்கும்.

ஊறுகாய்களின் மேல் எண்ணெய் நிற்பது போல் போட்டால் தான் காய் வறண்டு போகாமல் பக்குவமாக இருக்கும். பரிமாறும் போது எண்ணெயை வடித்து காயை மட்டும் எடுத்து சாப்பிட கடைசி வரை எண்ணெய் மேலே இருந்து ஊறி நல்ல சுவையைக் கொடுக்கும்.

நெல்லி, தக்காளி போன்றவற்றில் தொக்கு தயாரிக்கும் போது காயை எண்ணெயில் வதக்கி கடைசியாக சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து இறக்க சுவை அதிகரிக்கும்.

ஊறுகாய்களை பீங்கான் ஜாடி, கண்ணாடி ஜாடிகளில் போட்டு வைக்க சுவை மாறாமல் இருக்கும்.

காய்கறி ஊறுகாய், மஷ்ரூம், ஊறுகாய் என போடும் போது நீண்ட நாட்களுக்கு வருமாறு தயாரிக்காமல் அவ்வப்போது போட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com