இருமலுக்கு இதமளிக்கும் ஹனி வாட்டர்!

இருமலுக்கு இதமளிக்கும் ஹனி வாட்டர்!

இது பனிக்காலம். வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே சளித்தொல்லை வாட்டி வதைக்கிறது. முதலில் லேசான தொண்டை வலியில் தனது இம்சையைத் தொடங்கும் சளி மெதுமெதுவாக மூக்கடைப்பு, காதடைப்பு, காது வலி, தலை வலி, கண்களில் நீர் வடிதல், தொண்டைக்கும், நெஞ்சுக்குமாக சடுகுடு ஆடும் சளி இருமல், பிறகு ஸ்ருதி கூடிக் கூடி வறட்டு இருமல் என மாறி மாறி கொடூர அவதாரமெடுத்து நம்மை ஒரு வழியாக்கி விட்டுத்தான் ஓயும்.

இதற்கு மருந்து?! மூச்… அப்படியெல்லாம் இரண்டே நாட்களில் சளியை பரிபூரணமாகத் தீர்க்கும் மருந்து என்று ஒன்றுமே கிடையாது. மருத்துவரே, நீங்கள் மருந்து எடுத்துக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் சளி மற்றும் இருமல் குணமாக எப்படியும் 7 நாட்களாகும் என்பார். சரி இதன் கடுமையில் இருந்து தப்பிக்க வேறு வழியே இல்லையா என்றால், இருக்கிறது. ஆனால், அந்த வழி அதை குணமாக்கும் என்றும் சொல்ல முடியாது. அதன் கடுமையைப் பெருமளவில் குறைத்து நம்மை ஆசுவாசமாக உணர வைக்கும்.

அது போதும் தானே!

நினைத்துப் பாருங்கள் எக்ஸாம் ஹாலில் அமர்ந்திருக்கும் போது குண்டூசிச் சத்தம் கூட எழாத நிலையில் நாம் மட்டும் லொக்கு, லொக்கு என்று இருமிக் கொண்டிருந்தால் சுயசங்கடமாக உணர்வோம் இல்லையா? அந்த மாதிரி பரிதாபங்களைத் தவிர்க்கவும், இருமி இருமி தொண்டை புண்ணாவதைத் தவிர்க்கவும் இந்த ஹனி வாட்டர் பெரிதும் பலனளிக்கிறது.

தேன் ஆயுர்வேத மருத்துவத்தில் மிகச்சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. தேனை நாம் பலவிதங்களில் உபயோகப்படுத்தலாம். இருமலுக்கான மருந்தாகப் பயன்படுத்துவது வெகு எளிது. சிலர் ஒரு டீஸ்பூன் மிளகுப்பொடியைத் தேனில் குழைத்து அப்படியே விழுங்கி விட்டு வெந்நீர் குடிப்பார்கள். சிலருக்கு அது ஒத்துக் கொள்ளாது. இருமலை மேலும் கிளப்பி விடும்.

அப்படியானவர்கள் தினமும் காலையும், இரவும் ஒரு தம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து தொண்டைக்கு இதமாக அருந்தலாம். சளியால் தொண்டைப்புண்ணாகி இருந்தால் இது மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கும். இரண்டு, மூன்று நாட்களில் நல்ல மாற்றம் தெரிகிறது என்கிறார்கள் அருந்தி நிவாரணம் அடைந்தவர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com