சங்கு புஷ்பத்தின் மகிமைகள் பற்றித் தெரியுமா!

சங்கு புஷ்பத்தின் மகிமைகள் பற்றித் தெரியுமா!

சித்தர்களின் மூலிகை கண்டுபிடிப்புகளில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது சங்கு புஷ்பம். சங்கு புஷ்பம் சித்த மருத்துவத்தில் மட்டுமல்ல இறைவனோடும் நெருங்கிய தொடர்பு கொண்டது. இறைசக்தி மிகுந்த புனிதமான மலர்களில் ஒன்று இந்த சங்கு புஷ்பம்.

எல்லா இடங்களிலும் வேலியோரங்களில் வளரக் கூடியது. பொதுவாக மருத்துவத்திற்கு வெள்ளை பூவை உடைய வெண் காக்கட்டானே பயன்படுத்தபடுகிறது. இது சிறந்த மருத்துவ பலனை கொண்டுள்ளது.

*ரத்த குழாய் அடைப்புக்கு முறைப்படி சங்கு புஷ்பங்களை தூய நீரில் ஊற வைத்து குடித்து வர, அடைப்பு நீங்கி நல்ல குணம் கிடைக்கும்.

*கட்டிகள் மிகவும் வீக்கமாக இருந்தால் சங்குப்பூ இலைச் சாறுடன் இஞ்சிச் சாறு கலந்து பருகி வர நிவாரணம் கிடைக்கும்.

*யானைக்கால் வியாதிக்கும் இதன், விதைகள் வேர்கள் சிறந்த மருத்துவ பலனை அளிக்கும்.

*சங்கு புஷ்பம் கொடியின் விதை மற்றும் வேர் பகுதிகள் இருமல், கல்லீரல், மண்ணீரல் மற்றும் மூட்டு வலியைக் குணப்படுத்தக் கூடியது.

*மனதை சாந்தம் படுத்துவதற்கான மருந்தாக சங்கு புஷ்பம் பயன்படுத்தப்படுகிறது.

சங்கு புஷ்பம் கொடி, காக்கும் செடி, மாமூலி, காக்கட்டான், நீலக்காக்கட்டான் சங்கங்குப்பி, சங்கபுஷ்பி என பலவாறு அழைக்கப்படுகிறது.

*சங்கு புஷ்பம் உறக்கமின்மை, நரம்பு தளர்ச்சியை‌ போக்கக்கூடியது.

இறைவழிபாட்டில் சங்கு புஷ்பத்தின் மகிமை!

வெண்சங்கு புஷ்பத்தை சிவனாகவும், நீலநிற சங்கு புஷ்பத்தை விஷ்ணுவாகவும் கருதுவர். கோயமுத்தூரில் கோட்டை மேடு என்ற இடத்தில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஶ்ரீசங்கமேஸ்வரர் ஆலயம் உள்ளது. சோழமன்னன் கரிகால் சோழனால் கட்டப்பட்ட 31வது சிவன் கோயிலாகும்.

அசுரர்களிடமிருந்து தங்களை காப்பாற்றும்படி தேவர்கள் பூமிக்கு வந்து சிவபெருமானை வணங்கிய தலம் இது. புஷ்பக் கொடிகளுக்கிடையே லிங்க வடிவமாக தேவர்களுக்கு காட்சியளித்ததால் சங்கமேஸ்வரர் எனப் பெயர் பெற்றார்.

இத் திருத்தலத்தில் உள்ள இறைவனுக்கு கருவறையின் உச்சியில் பிரம்ம சூத்திரம் பொறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்திருத்தலத்தில் உள்ள இறைவனுக்கு சங்கு புஷ்பங்களை சாற்றி வழிபட தீராத குடும்ப பகை தீரும். வியாபார போட்டியில் ஏற்படும் பகை உட்பட அனைத்து பகைகளும் தீர்ந்து விடும் என்பது ஐதீகம்.

இங்கு சங்கு புஷ்பம் கொடி தல விருட்சமாக உள்ளது. சங்கு புஷ்பத்தின் சிறப்பை உணர்த்தும் மற்றொரு சிவஸ்தலம் திருச்சேறை சாரநாதபெருமாள் கோயிலாகும். இத்தலம் கும்பகோணத்திலிருந்து 14கி மீ தொலைவில் உள்ளது.

கோயில் பிரகாரத்தில் உள்ள உள்சுற்றில் சீனிவாச பெருமாள், ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், கூரத்தாழ்வார், ராமர், அனுமன், ராஜகோபாலன், ஆண்டாள், சத்யபாமா, ருக்மணி, நரசிம்மமூர்த்தி, பாலசாரநாதர், சன்னதிகள் உள்ளன.

இத்தலத்தில் மூலவராக அருள்பாலிக்கும் சாரநாதன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இத்தலத்தில் மட்டுமே பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீளாதேவி ஆகிய ஐந்து தேவியருடன் தரிசனம் தருகிறார்.

இத்தலத்து மண் மிகவும் சத்து நிறைந்தது. இங்கு பூக்கும் சங்கு புஷ்பங்களை பறித்து தாயாருக்கு சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பிரளய காலத்தில் பிரம்மா இத்தலத்தில் தான் மண்ணெடுத்து கடம் செய்து அதனுள் வேதங்களை வைத்து காப்பாற்றினார் என்பதும், மார்க்கேண்டயருக்கு ஈசன் அருளிய தலம் இது என்பதும் இதன் தல வரலாறு.

விஷ்ணுவின் நிறத்தையே தனதாக்கிக் கொண்டுள்ளது சங்கு புஷ்பம். பூவின் வடிவமும் சங்கு வடிவில் இருப்பதால் சங்கு சக்கர கதா பாணியான மகாவிஷ்ணுவின் அம்சமாகவே திகழ்கிறது. மகாபாரதத்தில் இந்த மலர் அபராஜிதா என்று அழைக்கப்பட்டது.

அம்பாளுக்கு பூஜைகளிலும் தனியிடம் பெற்றுள்ளது. சனிக்கிழமை வரும் பெளர்ணமி தினத்தன்று நீலநிறப்புடவை அல்லது நீலநிற வஸ்திரம் சாற்றி, நீல சங்கு புஷ்பத்தால் அன்னையை அலங்கரித்து அர்ச்சனை செய்து எள்ளு சாதம், தேன் கலந்து பால் வைத்து வழிபட தீராத நோய்கள் தீரும். மனக்கஷ்டம் விலகி புத்தி தெளிவைத் தரும் என்பது நம்பிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com